அப்பாவின் மறைவு, அடுத்த ஓராண்டிற்குள்ளேயே தாத்தாவின் மறைவு என பெருஞ்சோகத்தில் இருக்கிறார் குதிரையேற்ற வீராங்கனையும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியுமான சமணா ஈ.வெ.ரா.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன், இளம் வயதிலேயே உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். அதற்குப்பிறகு, அந்தத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராகக் களமிறங்கி எம்.எல்.ஏ ஆனார். ஆனால், அடுத்த, ஓராண்டிற்குள்ளேயே அவரும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது அரசியல் வட்டாரத்திலும் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேத்தியும், மறைந்த திருமகன் – தேசிய விருதுபெற்ற காஸ்டியூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமியின் மகளுமான சமணா ஈவெராவிடம் பேசினேன்.
“என் அப்பா இறந்து ஒரு வருடம்தான் ஆகுது. அந்த வலியும் வேதனையும் ஆறுவதற்குள்ளேயே தாத்தா எங்களைவிட்டுப் போனது பேரிழப்பு. அப்பாவோட இறப்புக்குப்பிறகு எங்களுக்கு ஆறுதலா இருந்தது தாத்தா ஈ.வி.கே.எஸ்தான். அந்த சோகம், பிரிவு தெரியக்கூடாதுன்னு நினைச்சாரோ என்னவோ, முன்பைவிட அவரோட அன்புலயும் பாசத்துலயும் அளவு கூடினதை உணர முடிஞ்சது. இன்னும் சொல்லப்போனா அப்பாவோட மரணம் அவரை ரொம்பவே பாதிச்சது. அந்த வலியை எங்கக்கிட்ட காண்பிச்சுக்காம, எங்களோட வலிக்கு மருந்தா இருந்தார் தாத்தா. என்னைக் கூப்பிட்டு ‘நீ எதுக்கும் பயப்படக்கூடாதும்மா… நாங்க இருக்கோம்’ன்னு நம்பிக்கை கொடுத்திருந்தார்.
எங்க தாத்தாவுக்கு நான் ஒரே பேத்திங்கிறதால செல்லம் ஜாஸ்தி. என்னைக்குமே என்னை பயமுறுத்தக்கூடிய விஷயங்களை சொன்னதில்ல. தைரியப்படுத்தக்கூடிய விஷயங்களையே சொல்லி ஊக்கப்படுத்துவார்.
இப்போக்கூட தென்னிந்திய அளவுல நடந்த குதிரையேற்ற போட்டியில தங்கம் வென்றேன். தாத்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். எப்பவும் ‘உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. நம்ப குடும்பப் பேரைக் காப்பத்தணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். இன்னும் சாதிக்கணும்ங்குற தன்னம்பிக்கையை உருவாக்கும் விதமா இருக்கும் அவரோட அணுகுமுறை.
தாத்தாக்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே அவரோட தைரியம்தான். தாத்தாவைப் பார்க்க வீட்டுக்கு அரசியல்வாதிகள் வந்தாங்கன்னா, சின்ன வயசுல நான் பயப்படுவேன். அந்த பயத்தைப் போக்கணும்ங்குறதுக்காக என்னை மடியில உட்கார வச்சுப் பேசுவார். அதனாலேயே, எனக்கும் அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு வந்துடுச்சு” என்று தனக்குள் இருக்கும் அரசியல் ஆர்வத்தை நம்மிடம் வெளிப்படுத்தும் சமணா, “அப்பாவோட மறைவுக்குப் பிறகு தாத்தா என்னிடம் அதிகமாகப் பேச ஆரம்பிச்சார். அவர்க்கிட்ட, அரசியலுக்கு வரப்போகிற என்னோட ஆர்வத்தை வெளிப்படுத்தினபோது ரொம்ப ஆச்சர்யப்பட்டார்.
என்னிடமிருந்து அப்படிப்பட்ட ஆர்வத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை. ‘விளையாட்டுல நீ தைரியமா சாதிச்சமாதிரி, அரசியலிலும் நீ சாதிப்ப’ன்னு சொன்னவர், ‘அரசியலிலும் துணிவு ரொம்ப முக்கியம். அதேமாதிரி, மக்களை அணுகுவதில் கனிவு, பணிவு ரொம்ப முக்கியம்’னு சொன்னார். ஒவ்வொரு ஓட்டும் ஒருவர் உன் மீது வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நாம துரோகம் பண்ணிடக்கூடாது. அவங்களோட அந்த நம்பிக்கையை எப்போதும் உண்மையாக்கிக்கிட்டே இருக்கணும்னு சொல்வார். அவரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார். எங்க குடும்பத்துக்கு மட்டுமில்ல, அவரோட மறைவு மக்களுக்கும் பேரிழப்பு.
தாத்தா எப்படியோ அப்படித்தான் எங்க பாட்டி வரலட்சுமியும். எங்கம்மா பூர்ணிமாதான் என்னை எல்லா போட்டிகளுக்கும் கூட்டிக்கிட்டுப்போயி ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பாங்க. அம்மா சினிமாவுல பிஸியா இருக்கும்போது, வரமுடியாத சூழலில் எப்போதாவது பாட்டி வரலட்சுமி என்கூட வருவாங்க. என்மேல அவங்களுக்கு ரொம்ப பாசம். தாத்தாவோட பிரிவால அவங்க நிலைகுலைஞ்சு போயிருக்காங்க” என்கிறவரிடம், “உங்களுக்கு அரசியலில் இன்ஸ்பிரேஷன் யார்?” என்று கேட்டபோது, “பிரியங்கா காந்தி மேடம்தான்.
ஒரு பெண்ணா ரொம்ப போல்டா இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். மக்களுக்கான அவங்களோட ஓயாத களப்பணியும், தெளிவான பேச்சுகளும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னோட அரசியல் விருப்பத்தை தாத்தாக்கிட்ட தெரிவிச்சப்போ நிறைய புக்ஸ் வாங்கி கொடுத்தார். அவர், வாங்கி கொடுக்காமலேயே நான் படித்த புத்தகம், பிரியங்கா காந்தி மேடம்தான். எனக்கு 17 வயசு ஆகுது. அடுத்த வருடம் கட்சியில இணைஞ்சுடுவேன். பெரியார் பெண்களின் உரிமைகளுக்காக போராடினார். பெரியார் குடும்பத்திலிருக்கும் நான் அரசியலில் இறங்கி பெண்களுக்காகவும் சம உரிமைகளுக்காகவும் போராடுவேன்” என்கிறார். வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம், சமணா!