“2-வது திருமணம் செய்த மருமகனை கொல்ல வேண்டும்” – ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி திருடியவர் பகீர்!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள சமூக ரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் அழகு. இவர், இந்திய எல்லை பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டுள்ளார். சமூக ரெங்கபுரத்தில் அவரது பெற்றோர் பணிபுரிந்து வருகின்றனர். அடுத்த மாதம் தனது பெற்றோரை சந்திப்பதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு வரவேண்டியதுள்ளதால் தனது கைத் துப்பாக்கி, அதோடு 25 தோட்டாக்கள் மற்றும் சீக்கியர்கள் பயன்படுத்திய கத்தி ஒன்றையும் வீட்டு பீரோவில் வைத்துவிட்டு பெற்றோரிடம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றார்.

ராதாபுரம்

கடந்த 15-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அவரது பெற்றோர்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. கைத்துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை காணவில்லை. இதுதொடர்பாக ராதாபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வள்ளியூர் காவல் உட்கோட்டத்திற்குள் கடந்த சில நாள்களாக தொடர்ந்து வீடு, கோயில்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வந்த நேரத்தில், எல்லைப் பாதுகாப்புப்படை வீரரின் கைத்துப்பாக்கியும் திருடுபோனது பரபரப்பினை ஏற்படுத்தியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனின் உத்தரவின் பேரில் போலீஸார் கைத்துப்பாக்கியை திருடிச் சென்ற நபரை தீவிரமாகத் தேடி வந்ததனர்.

ராதாபுரம் காவல் நிலையம்

இந்த நிலையில், ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும், செல்போன் டவர் சிக்னல்களையும் ஆய்வு செய்தனர். இதில், மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 6 கொள்ளையர்கள் நெல்லை மாவட்டத்தில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும், எல்லைப் பாதுகாப்பு வீரரின் கைத்துப்பாக்கியை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக திருட்டில் ஈடுபட்ட ராகவன், குமார், முத்து, அமாவாசை, மாரியப்பன் முத்து ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

போலீஸார் கைது செய்த 5 பேரிடமிருந்து எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஆகின் கைத்துப்பாக்கி, கத்தி மற்றும் 23 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். ஆனால், அழகு போலீஸாரிடம் அளித்த புகாரில் மொத்தம் 25 தோட்டக்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், 3 தோட்டாக்கள் மாயமானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராதாபுரம் காவல் நிலையம்

போலீஸாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 பேரும் அழகின் பெற்றோர் வசிக்கும் வீட்டு பீரோவில் உள்ள பணம், நகைகளை திருடத்தான் திட்டம் போட்டு கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர்.அங்கு கைத்துப்பாக்கி, கத்தி, தோட்டாக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், எனது மருமகன் இரண்டாவது திருமணம் செய்துவிட்டான். அவரை கொலை செய்ய வேண்டும், அதற்கு இந்த கைத்துப்பாக்கி தேவை எனச் சொல்லி கைத்துப்பாக்கியை திருடியது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தோட்டக்களில் 3 மாயமானதால், 3 தோட்டாக்கள் என்ன ஆனது என அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.