தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் லேசான மழை பெய்தது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளைக்குள் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில் மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “சென்னையில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் மழை தொடங்கும். மேகக் கூட்டங்கள் சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி KTCC கடற்கரைக்கு அருகில் வந்துள்ளது என்பதால் இன்று இரவும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இன்றும் நாளையும் சென்னையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அடுத்த சில மணிநேரங்களில் முதல் மிதமான மழை வட சென்னையிலிருந்து தொடங்கி அதன்பிறகு நகரின் பிற பகுதிகளில் பெய்யும். அலுவலக மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தவறாமல் செல்லலாம். இதுவே கடைசி மழையாக இருக்குமா? என்று கேட்டால் நிச்சியமாக இல்லை.
ஏனென்றால், கிறிஸ்மஸுக்குப் பிறகு, 26-27 மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த மழையால் நீங்கள் பயப்பட வேண்டுமா? என்று கேட்டால் இல்லை என்பது தான் என்னுடைய பதில். மற்ற மாவட்டங்களான டெல்டா, விழுப்புரம் கடற்கரை, புதுச்சேரி, கடலூருக்கு மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழகத்தில் குமரியில் மட்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.