திருவொற்றியூர்: அம்மா உணவகத்துக்கு சீல்; போராட்டத்தில் இறங்கிய அதிமுக-வினர்! – என்ன நடந்தது?

சென்னையில் உள்ள திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அருகே அமைந்திருந்த  அம்மா உணவகக் கட்டடம், கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால்  சீல் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது. 

சென்னை மாநகராட்சியின் 11-வது வார்டில் திருவொற்றியூரில், சாலையை ஒட்டி மாநகராட்சிக்குச் சொந்தமான 30  கடைகளைக் கொண்ட  வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், `அம்மா உணவகம்’ திறக்கப்பட்டது. 

திருவொற்றியூர் பகுதியில் திறக்கப்பட்ட முதல் அம்மா  உணவகமான இதனை, அருகில் இருக்கிற அரசு  மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பல ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பல வருடங்களாகப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வணிக வளாகத்திற்குப் பின்புறம், பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘நகர்புற சமுதாய நல மருத்துவமனை’ ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் நுழைவுவாயில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாதவாறு குறுகியதாக இருப்பதாகவும், வணிக வளாகமும் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளதாலும், மருத்துவமனைக்கு முன்புள்ள இந்த வணிக வளாகத்தை இடிக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் கடை வாடகைதாரர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர், இதனை விசாரித்த நீதிமன்றம் 16.12.2024 க்குள் கடைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும்படி  கடந்த ஆகஸ்ட் மாதம்  தீர்ப்பளித்தது.

ஆனால், வணிகர்கள் கடையை ஒப்படைக்காததால் கடந்த திங்கள்கிழமை (16.12.2024) மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் உட்பட  அனைத்து கடைகளையும் சீல் வைத்தனர்.

அம்மா உணவகத்தை மாற்று இடத்தில் திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல், மற்ற கடைகளோடு சேர்த்து அம்மா உணவகத்தையும் சீல் வைத்ததைக் கண்டித்து, 7-வது வார்டு  மாமன்ற உறுப்பினர் (அதிமுக) கே.கார்த்திக் தலைமையில் அ.தி.மு.க-வினர் திங்கள்கிழமை  போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

அம்மா உணவகம் மூடப்பட்டது தொடர்பாக அங்குள்ள மக்கள் கூறியதாவது, “இந்த அம்மா ஹோட்டல் ரொம்ப நாளா இங்க இருந்துச்சு, இப்ப இந்த பில்டிங்கை இடிக்கப்போறதா சொல்லி சீல் வச்சுட்டாங்க. பஸ் ஸ்டாப், 2 கவர்மெண்ட் ஹாஸ்பிடல்னு ரொம்ப  முக்கியமான இடமெல்லாம்  இங்க தான் இருக்கு. அதனால இந்த ஹோட்டலுக்கு  ரொம்ப பேரு வந்து சாப்டுவாங்க. இத மூடிட்டதால இனி அரை கிலோமீட்டருக்கு மேல தெருவுக்குள்ள  இருக்கிற இன்னொரு அம்மா ஹோட்டல்ல தான் போய் சாப்டனும். ஆனா அதுக்கு ரோட்டுக்கு எதிர் பக்கம் போகனும், அது ரொம்ப கஷ்டம். அதனால ஹாஸ்பிடலுக்கு பக்கத்துல அம்மா ஹோட்டல்ல  திறக்கணும்” என்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் 7 வது வார்டு உறுப்பினர் கே.கார்த்திக் கூறியதாவது, “நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே… இங்குள்ள கடைக்காரர்களுக்கு  நீதிமன்றம் 4 மாதம் அவகாசம் கொடுத்தபோதே, மாநகராட்சி அதிகாரிகள்  அம்மா உணவகத்தை வேறு இடத்தில் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள், மேலும், 700 மீட்டருக்கு அடுத்துள்ள இன்னொரு  அம்மா உணவகத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள்.

ஆனால், இங்குதான் 2 அரசு மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், மாநகராட்சி அலுவலகம் என  மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். எனவே அருகில் உள்ள அரசு மருத்துவமனை இடத்தில், அல்லது எதிரே உள்ள மாநகராட்சி இடத்தில் அம்மா உணவகத்தை திறக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அரசும், அதிகாரிகளும் இந்த திட்டத்தை செயலிழக்க செய்யும் எண்ணத்தில் செயல்பட்டிருக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

இது குறித்து மண்டல சுகாதார அலுவலர் (zonal health officer) கூறியதாவது, “அம்மா உணவகத்திற்கான மாற்றிடம் எதும், அந்த இடத்தில் இல்லாததால், வேறு இடங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வழக்கு தொடுக்கப்பட்டதில் இருந்தே அம்மா உணவகத்திற்கான மாற்று இடத்தைத் தேடி வருகிறோம். ஆனால், மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் எதுவும் இல்லை. மேலும் அருகிலேயே அம்மா உணவகம் இருக்கிறது என்பதனால், மாற்று இடம் கிடைக்கும்வரை அதனை பயன்படுத்த சொல்லியிருக்கிறோம். இங்கு பணிபுரிந்த 8 பணியாளர்களை வெவ்வேறு அம்மா உணவகத்திற்கு மாற்றியிருக்கிறோம்” என்றார்.