பெண்டிங் வழக்குகள்: சிறையில் இருந்து தப்பிச்சென்ற டிரக் டீலர் – 22 ஆண்டுகள் ஆச்சு… என்ன நிலவரம்?

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?’ விவரிக்கிறது `பெண்டிங் வழக்குகள்’

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும்,  அதனையெல்லாம்  தாண்டி பிரபல இன்டர்நேஷ்னல் ட்ரக் டீலர் தப்பிச்சென்ற  சம்பவம் இன்றளவும் சேலம் மாநகர காவல்துறையினர் மத்தியில் கரும் புள்ளியாகவே இருந்து வருகிறது. அதினிலும் தப்பிச்சென்ற குற்றவாளியை 22 ஆண்டுகளாகியும் பிடிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

சேலம் மத்திய சிறையில் கடந்த 05.02.2002 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி தண்டனை பெற்றுவந்த பிலாலுதீன் எனும் இலங்கையை சேர்ந்த நபரை காலில் அடிப்பட்டதால் சிறைத்துறை போலீஸார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்டாராங் ரூமில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அப்போது, துப்பாக்கியுடன் வந்த மர்ம கும்பல் போலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பந்தப்பட்ட கைதியுடன் தப்பித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவமனை சிறப்பு காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்ததில், பிரபல ரெளடி ராக்கெட் ராஜா தலைமையிலான டீம் தான் போதை கும்பல் தலைவன் பிலாலுதீன் தப்பிக்க வைக்க உதவியது தெரியவந்து வழக்குப்பதிவு செய்தனர்.

ராக்கெட் ராஜா

இந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸார், ”சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளிதான் பிலாலுதீன். 2000 காலக்கட்டங்களில் பிலாலுதீன் மீது இலங்கை காவல் நிலையங்களில் போடப்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் இருந்து வருகிறது. 

அதனால் தான் இலங்கையை விட்டு தமிழ்நாட்டை டார்கெட் செய்து  போதைப்பொருட்களை விற்க வந்தான். இதற்காக போதைப் பொருட்களை கடத்தி கொண்டுவர, லோக்கல் ரெளடிகளுடன் பிசினஸ் செய்யத் தொடங்கியபோது தான் பிலாலுதீன் பிடிப்பட்டான். அந்நபரை பிடித்து போலீஸார் விசாரிக்கையில் பிடிப்பட்டது சர்வதேச போதை கும்பலின் தலைவன் என்பது தெரியவந்தது. அதன்மூலம் சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பிலாலுதீனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறை

அதன்மூலம் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிலாலுதீன், 2002 ஆம் ஆண்டு சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 05.02. 2002 ஆம் ஆண்டு சேலம் சிறையில் இருந்தபோது, தனது வலது குதிகாலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சை எடுப்பதற்காக , சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கைதிகளுக்கென சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் ’ஸ்டாராங் அறையில்’ சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். அப்போது துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10 க்கும் மேற்பட்ட ரெளடிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பிலாலுதீனை கூட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்” என்றனர்.

மேலும் இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த முன்னாள் சிறைத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “பிலாலுதீன் சென்னை மத்திய சிறையில் இருக்கும்போது தான் பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்மூலம், இவர்கள் திட்டம் வகுத்து, சேலம் சிறைக்கு உடல்நிலையை காரணம் காட்டி சென்றார். இதற்காக பல லட்சம் கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. அதன்மூலம் இவர்கள் சேலம் சிறையை தேர்ந்தெடுத்து சென்று அங்கிருந்து பிலாலுதீன் தப்பிக்க வைத்துள்ளனர். இதற்காக 10 பேர் கொண்ட ரெளடிகள் தப்பிக்க வைக்க செயல்பட்டது தெரியவந்தும், அவர்கள் மீதும் நடவடிக்கை ஏதும் எடுக்கமுடியவில்லை” என்றனர்.

சேலம் மருத்துவமனை

இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “23 ஆண்டுகாலாமாக இந்த வழக்கு முடிவுக்கு வராமல் இருப்தற்கு காரணம் ஏ1 குற்றவாளியான பிலாலுதீன் இன்னும் பிடிக்கப்படாமல் இருப்பது தான். நாடு விட்டு நாடு சென்ற குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான (இன்டர்போல்) உதவி கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கு தொடர்பாக எந்தவித ரெஸ்பான்ஸும் அவர்களிடமிருந்து வராததால் தான் இன்றளவும் முக்கிய குற்றவாளியை பிடிக்க முடியாமல் இருந்து வருகிறது” என்றனர்.

ஹரி சங்கரி

இதுகுறித்து சேலம் டவுன் காவல் உதவி ஆணையர் ஹரி சங்கரியிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியுடன் தேடி வருகின்றோம். மேலும், சம்பந்தப்பட்ட வழக்கில் 2 குற்றவாளிகள் இறந்துபோகிவிட்டனர். இதில், ராக்கெட் ராஜா மட்டுதான் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகிவருகிறார். மேலும் அவர்கள் தரப்பினர் சம்பவம் நடந்தபோது, சம்பவ இடத்தில் ராக்கெட் ராஜா இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் உரிய ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்துள்ளோம்” என்றார்.

இந்த வழக்கு எப்போ முடியும் என்பது யாருக்கு தான் தெரியும்?