தர்மபுரி: `அஞ்சு உசுரு போயிருக்கு’ – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் லிங்காயத் இன மக்கள்

தர்மபுரி அருகே அலகட்டு எனும் மலை கிராமத்தில் பல ஆண்டுகளாக போதிய சாலை வசதி இல்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர் லிங்காய்த் இன மக்கள்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை சமீபத்தில் பாம்புக்கடித்து சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு அழைத்தும் வராமல் போனதால், சிறுமியின் உயிர் பரிதாபமாக போனது. இச்சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்குக் காரணம் அந்த சாலை வசதிதான்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அலகட்டு மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ருத்ரப்பன் –சிவலிங்கி தம்பதியினர். இவர்களுக்கு 1 மகன், 4 மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகள் கஸ்தூரி (14).  எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, போதிய சாலை வசதி இல்லாததால், மேற்படிப்பு தொடர முடியாமல் கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28.11.2024 ஆம் தேதி தங்களது வீட்டருகே கீரை பறித்துக்கொண்டிருந்த கஸ்தூரியை விஷப்பாம்பு கடித்துள்ளது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்புகொண்டும் சாலை வசதி இல்லாததால் வர மறுத்துவிட்டனர். பின்னர் கஸ்தூரியை தூளிக்கட்டிக் தூக்கி வந்தபோது, வழியிலேயே உயிர் பிரிந்தது. இதற்குக் காரணம் போதிய சாலை வசதி அரசாங்கம் அமைத்துத்தராததுதான் என்று குற்றம் சாட்டுகின்றனர் அக்கிராம மக்கள்.

இதுகுறித்துப் பேசும் அலகட்டு கிராமத்தைச் சேர்ந்த பசுவராஜ், “நாங்கள் பல தலைமுறைகளாக இந்த மலையை நம்பி வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு இதை விட்டால் வேறு வாழ்வாதாரம் கிடையாது. இந்த மலையை நம்பி சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். ஆனால், எங்களுக்கென்று போதிய சாலை வசதி, தண்ணீர் வசதி, வீடு வசதியோ இல்லை. இதை ஏற்படுத்தி கொடுக்கச் சொல்லி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துட்டோம். ஆனால் அவர்கள் அனைவரும் வனத்துறை நிலத்திற்குள் சாலை வசதி ஏற்படுத்துவது கடினம். அதனால் எங்களை வேண்டுமானாலும் மலையை விட்டு இடம்பெயர்ந்து கீழே வரச் சொல்கின்றனர். இதை விட்டுச் சென்றால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

பசுவராஜ்

போதிய சாலை வசதி ஏதும் இல்லாததால், அவசர மருத்துவ சிகிச்சைக்குக்கூட யாரையும் அழைத்துச் செல்ல முடிவதில்லை. மற்றொருபுறம் மேற்படிப்பு படிக்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் தருமபுரி டவுனுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் எங்கள் கிராமத்தில் பலர் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத நிலை இருந்து வருகிறது. 10 கி.மீ க்குள் பள்ளிகள் இருந்தாலும், அங்கு மாணவர்கள் தங்கி படிக்கின்ற அளவுக்கு விடுதி வசதி இல்லை. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக எங்கள் கிராமத்தில் இருந்து வருகிறது.

நாங்கள் ஓர் அவசரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் கூட இரவு நேரங்களில் 8 கி.மீ வனப்பகுதியை கடக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதுவரை உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் ஒரு கர்ப்பிணி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு உயிர் போகும் போதும் நாங்கள் அதிகாரிகளிடம் போய் மன்றாடிக் கேட்கிறோம். அந்த சமயத்திற்கு சாலை அமைத்துத் தருவது போன்று வந்து அளவீடு செய்வார்கள். அதன்பின் யாரும் இந்தப் பக்கம் வர மாட்டார்கள். இதுதான் இப்போது வரையும் நடந்து வருகிறது. எனவே சீங்காடு, ஏரிமலை வழியாக எங்கள் கிராமத்திற்கு சாலை வசதியை தமிழக அரசு செய்து தரவேண்டும்” என்றார்.

மேலும் சிறுமி கஸ்தூரியை இழந்து தவிக்கும் அவரின் தாயார் சிவலிங்கியிடம் பேசியபோது, “எதோ எங்களோட சக்திக்கு காட்டு வேலைக்குப் போய் என் மகளைப் படிக்க வச்சோம். நல்லா படிப்பா, படிப்பு மேல ஆசை இருந்தும், சாலை வசதி இல்லாததனால தூரம் போய்ட்டு படிக்க அனுப்பல. நாங்க மத்த பிள்ளைகளுக்கு செஞ்சதுக்கூட கஸ்தூரிக்கு செஞ்சது கிடையாது. ஒரு திருவிழான்னா கூட நல்ல அவளுக்கு நல்ல டிரஸ் கிடையாது. ஆனா அதையெல்லாம் சகிச்சுக்கிட்டு, குடும்ப கஷ்டத்தை பார்த்து வாய் திறந்து ஆசைப்பட்ட எதையும் கேட்டது இல்லை எங்க கஸ்தூரி. இன்னைக்கு என் மகளைத் தொலைச்சிட்டு நிக்க காரணம், எங்களுக்கு சாலை வசதி இல்லாததுதான். அதுமட்டும் இருந்துச்சுன்னா இன்னைக்கு எங்க கஸ்தூரிய காப்பாத்திருக்கலாம்.

கஸ்தூரியின் பெற்றோர்கள்.

அரசாங்கம் என் மகள் உயிர் போனதுக்கு ரூ.3 லட்சம் கொடுத்துருக்காங்க. அந்த பணத்த வச்சாவது எங்களுக்கு சாலை அமைச்சுக்கொடுங்கன்னு நாங்க கேட்கிறோம். இனி எத்தனை உயிர் போகப் போகுதுன்னு தெரியல. அதுக்குமுன்ன தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் பேசியபோது, “சாலை அமைக்க வேண்டுமென்றால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அமைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தோம். அவர்களும் அதன் மூலம் வந்து அளவீடு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வெறும் 40 குடும்பங்கள் வசிப்பதற்கு 7 மீட்டர் சாலையெல்லாம் கொடுக்க முடியாது. நிறைய மரங்கள் வெட்டுப்படும். அதனால் 3 மீட்டர் சாலை மட்டும் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். 3 மீட்டர் சாலை கொடுத்தால் அதில், பேருந்தோ, வாகனமோ போகமுடியாது. அதனால் மீண்டும் பரிசீலனை செய்யக் கூறியுள்ளோம்” என்றார்.

இதுகுறித்து பாலக்கோடு  சரக வனத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “ஏற்கெனவே நில அளவைக்கு மத்திய அரசு சார்பில் அதிகாரிகள் வந்தபோது, எந்த பக்கம் வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பதை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. அதனால் மத்திய அரசு சார்பாக வந்த அதிகாரி கேன்சல் செய்துவிட்டார். இல்லையென்றால் சாலை வசதி எப்போதோ ஏற்படுத்தியிருக்கலாம். தற்போது மீண்டும் அளவீடு செய்து அனுப்பியுள்ளனர்” என்றார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

மேலும் இதுகுறித்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியிடம் பேசிய போது, ”சிறுமி இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கூறி தொடர்ந்து அரசுக்கு அறிவுறுத்தி வருகிறேன். இதனை சட்டமன்றத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறேன்” என்றார்.

இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரும், தருமபுரி பொறுப்பு அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம் பேசியபோது, “சாலைவசதி ஏற்படுத்தித் தர வனத்துறையிடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். விரைவில் சாலை வசதி அமைத்துத் தர அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.

மேலும் இதுகுறித்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணியிடம் பேசியபோது, “இதுதொடர்பாக விவரங்கள் சேகரித்து பார்லிமென்ட்டில் பேச இருக்கிறேன். விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.