NTK: ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை… விழித்துக் கொண்டாரா சீமான்?

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் விலகல் தொடர் கதையாகியுள்ள சூழலில், டிசம்பர் 29-ம் தேதி ஒரே நாளில் 1,000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது, அக்கட்சித் தலைமை. நிர்வாகிகள் விலகலால் `காலியாகிறது கூடாரம்’ போன்ற கருத்துருவாக்கங்களை உடைக்கவே இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், “நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நாம் தமிழர் கட்சி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றுவிட்டபோதிலும், அதன் பின்னர் நா.த.க முகாமில் அரங்கேறும் காட்சிகள் தலைமைக்குப் பெரும் வருத்தத்தையே கொடுத்திருக்கின்றன. மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் விலகலும் மாநில நிர்வாகிகள் ஒதுங்கி நிற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளன” என்றனர். விலகலுக்கான காரணம் குறித்து நா.த.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்

“அதி முக்கியமான முடிவெடுக்கும்போது, மாநில நிர்வாகிகளிடம்கூட அண்ணன் சீமான் கருத்து கேட்பதில்லை. தனித்துப் போட்டியிடும் கட்சியை, கூட்டணிப் பாதைக்குத் திருப்பலாமா என்பதைக்கூடக் கலந்தாலோசிக்காமல், `கூட்டணி குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தன்னிச்சையாக அறிவித்தார் சீமான். அதற்கு விஜய் தரப்பிலிருந்து எதிர்பார்த்த பதில் வராததால் சீமானே, `தனித்துப் போட்டி’ என்றும் அறிவித்துவிட்டார்.

கலந்தாய்வில் சீமான்

இதற்கிடையில் வேட்பாளர் தேர்வும், மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனமும் எப்படி நடந்திருக்கும்? இப்போதும் கலந்தாய்வு என்கிற பெயரில் மாவட்டம்தோறும் பயணப்படும் அவர், கலந்தாலோசிக்காமல் `சொன்னதை செய்.. இல்லையென்றால் கிளம்பிவிடு’ என்ற மனநிலையில்தான் நடந்துகொள்கிறார்” என்கிறார்கள்.தொடர்ந்து பேசியவர்கள் “சகட்டுமேனிக்கு தி.மு.க மற்றும் அதன் தலைவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைப்பவர்தான் சீமான். நாங்கள் கட்டமைக்கும் திராவிட எதிர்ப்பு அரசியலை உடைக்கவேண்டிய அவசியமும் அவருக்கு இருப்பதால் கட்சியை உடைக்கப் பார்க்கிறது தி.மு.க. நா.த.க-விலுள்ள வீக்னஸை பயன்படுத்தி ஆள் தூக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது தி.மு.க” என்றனர்.

நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை

அரசியல் விமர்சகர்கள் சிலரோ “நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள் என்ற செய்தி, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் தொடங்கி கட்சியின் தொண்டர்கள் வரை கலக்கமடையச் செய்திருக்கிறது. மேலும் மாவட்டத்துக்கு 10-50 பேர் விலகுவதை வைத்து `கூடாரம் காலியாகிறது’ என்ற கருத்துருவாக்கம் வாக்காளர்கள் மத்தியிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஓரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி லட்சக் கணக்கில் நிர்வாகிகள் இணைத்து கட்சியினரையும் ஆதரவாளர்களையும் புத்துணர்வூட்ட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது கட்சித் தலைமை. வெளியேறும் நிர்வாகிகள் குறித்து கண்டுக் கொள்ளாமல் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறார் சீமான் என்ற நிலைமாறி விழித்துக் கொள்கிறாரா அல்லது கண்துடைப்பு நடவடிக்கையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal