அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்மீத் கே தில்லானை, நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக பரிந்துரைத்திருக்கிறார்.
இது தொடர்பாக ட்ரம்ப் தன் Truth Social பக்கத்தில், “அமெரிக்க நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக ஹர்மீத் கே. தில்லானை பரிந்துரைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டார்ட்மவுத் கல்லூரி, வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர். அமெரிக்க நான்காவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தவர்.
தன் வாழ்க்கை முழுவதும், ஹர்மீத் நமது நேசத்துக்குரிய சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து நிற்கிறார். ஹர்மீத் கே. தில்லான் நாட்டின் தலைசிறந்த தேர்தல் வழக்கறிஞர்களில் ஒருவர். சட்டப்பூர்வமாக வாக்குகள் எண்ணப்படுவதை உறுதிசெய்ய போராடுகிறார். ஹர்மீத் சீக்கிய மத சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர். நமது அரசியலமைப்பு உரிமைகளின் பாதுகாவலராக இருப்பார். நமது சிவில் உரிமைகள், தேர்தல் சட்டங்களை நேர்மையாகவும் உறுதியாகவும் செயல்படுத்துவார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சண்டிகரில் பிறந்த ஹர்மீத் கே.தில்லான்(54), குழந்தையாக இருந்தபோது தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 2016-ல் கிளீவ்லேண்டில் நடந்த GOP மாநாட்டின் மேடையில் தோன்றிய முதல் இந்திய-அமெரிக்கர் என்றப் புகழுக்குறியவர் என்பது குறிப்பிடதக்கது.