‘போதிய சாட்சியங்கள் இல்லை’ என்று 27 ஆண்டுகளுக்கு பிறகு, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், காவல் சித்ரவதை வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்.
குஜராத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட். இவர் மீது மேலே கூறிய காவல் சித்ரவதை வழக்கு மட்டுமல்ல, ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்…
1990-ம் ஆண்டு…
1990-ம் ஆண்டு, பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரத யாத்திரை நடத்திய அத்வானியை கைது செய்ததற்காக கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது. இந்தக் கடையடைப்பை சிலர் மீறியதால் குஜராத் ஜாம்நகரில் மத கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட கிட்டதட்ட 150 பேரை கைது செய்தார் சஞ்சீவ் பட்.
கைதானவர்கள் விடுவிக்கப்பட்டபோது, அவர்களில் ஒருவரான பிரபுதாஸ் வைஷ்னானி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, சஞ்சீவ் பட் மீது காவல் மரணம் வழக்கு போடப்பட்டது. 2019-ம் ஆண்டு, இந்த வழக்கில் சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1996-ம் ஆண்டு…
1996-ம் ஆண்டு, ராஜஸ்தானை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மீது பொய் வழக்கை போட, போதை செடி வளர்த்ததாக சஞ்சீவ் பட் மீது வழக்கு போடப்பட்டது.
அந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் சஞ்சீவ் பட்டிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது மேலே கூறிய வழக்கில், சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனை நிறைவடைந்த பின்னர், இந்த 20 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்கும்.

1997-ம் ஆண்டு…
1994-ம் ஆண்டு, குஜராத்தில் ஆயுத மீட்பு வழக்கு ஒன்றில், நரன் ஜாதவ் என்பரும், இன்னும் 21 பேரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
1997-ம் ஆண்டு, அகமதாபாத் மத்திய சிறையில் இருந்து சஞ்சீவ் பட் வீட்டிற்கு போர்பந்தர் போலீஸாரால் மாற்றப்பட்டார் நரன் ஜாதவ். அப்போது, சஞ்சீவ் பட் போர்பந்தர் காவல் கண்காணிப்பாளராக இருந்தார். சஞ்சீவ் பட் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நரன் ஜாதவ்விற்கு, எலெக்ட்ரிக் ஷாக் மூலம் உடல் அளவிலும், மன அளவிலும் தொந்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது சம்பந்தமாக, 1997-ம் ஆண்டு நரன் ஜாதவ் சஞ்சீவ் பட் மீதும், ஒரு கான்ஸ்டபிள் மீதும் புகார் அளித்தார். 1998-ம் ஆண்டு குஜராத் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிற்கு எஃப்.ஐ.ஆர் 2013-ம் ஆண்டு போடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘போதிய சாட்சியங்கள் இல்லை’ என்று சஞ்சீவ் பட் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு நடந்துகொண்டிருப்பதற்கு இடையிலேயே குற்றம்சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் இறந்துவிட்டார்.
மேலே கூறிய அனைத்து வழக்குகளும், 2000-ம் ஆண்டிற்கு முன்பே நடந்திருந்தாலும், அந்த வழக்கிற்கான தீர்ப்புகள் சமீபத்திய வருடங்களில் வந்துள்ளது. இதற்கான காரணமாக, ‘குஜராத் கலவரம்’ கூறப்படுகிறது.

குஜராத் கலவரம்…
2011-ம் ஆண்டு, சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில், “சபர்மதி எக்ஸ்பிரஸ் சம்பவத்திற்கு பிறகு, குஜராத்தின் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் நானும் தான் பங்கேற்றிருந்தேன். அந்தக் கூட்டத்தில் மோடி பேசும்போது, ‘முஸ்லீம்களுக்கு எதிராக இந்துகளுக்கு இருக்கும் கோபத்தை காட்ட இந்துக்கள் எதாவது செய்தால் அதை கண்டுகொள்ள வேண்டாம்’ என்று கூறினார்” என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
அது குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சஞ்சீவ் பட் வழக்குகளில் தொடர்ந்து சமீப காலமாக தீர்ப்பு வந்துகொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
சஞ்சீவ் பட்டின் தற்போதைய நிலை…
இந்த வாக்குமூலத்திற்கு பிறகு, 2011-ம் ஆண்டே, குஜராத் அரசால் பணியில் இருந்து நீக்கப்பட்டார் சஞ்சீவ் பட். 2015-ம் ஆண்டு, மத்திய உள்துறையால் காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டார்.
2018-ம் ஆண்டில் இருந்து சஞ்சீவ் பட் ராஜ்கோட் சிறையில் இருக்கிறார். அவர் தற்போது ஒரே ஒரு வழக்கில் இருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார். 1990-ம் ஆண்டு வழக்கு மற்றும் 1996-ம் ஆண்டு வழக்கிற்கு சிறை தண்டனையை கட்டாயம் அனுபவிக்க வேண்டும். இந்த வழக்குகளில் போடப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் பல முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.