20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கறுப்பர்களிடையே மார்கஸ் கார்வேயின் இயக்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
மறுபுறம் கறுப்பர்களுக்கு எதிரான வன்மமும் வெள்ளையர்களின் மத்தியில் அதிகரித்திருந்தது. மிஷாவ்வின் தந்தை, கார்வேயின் மீது ஈடுபாடு காட்டியதால், அவரும் அந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கலாம் என எதிர்பார்த்தேன். “அடுத்து என்ன நடந்தது… அப்பாவைப் போல நீங்களும் கார்வேயின் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டீர்களா?” இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருப்பார் போல… சிரித்து விட்டார். அவருடைய சிரிப்பு, ஒரு கொள்கை பிடித்திருந்தால், அதனால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்தில் இணைந்துதான் ஆக வேண்டுமா என்பது போல இருந்தது.
“என்னுடைய வாழ்க்கைல, ஒரு அத்தியாயம் அப்போதான் முடியுதுன்னு சொல்லலாம். எனக்கு 27 வயசு. அப்பா திடீரென இறந்து போனார். தன்னுடைய இறப்புக்கு பின்னாடி மீன் கடை பிஸினஸை அண்ணன் லைட்ஃபுட் பார்த்துக் கொள்ள வேண்டுமென அப்பா விரும்பினார். அவன் பொறுப்பான பையன் என்பதால்… ஆனால், அம்மா விரும்பியபடி மனைவியோடு சேர்ந்து Church of God என்ற பெயரில் தேவாலயம் ஒன்றைத் தொடங்கி தேவனுடைய செய்தியை மக்களுக்கு எத்தி வைக்கும் பணியில், அவன் மும்முரமாக இறங்கி இருந்தான். அதேசமயம் அவ்வப்போது கடைக்கும் வந்து போய்க்கிட்டிருந்தான். என்னதான் இருந்தாலும் தேவ ஊழியத்தை அப்பப்ப பார்க்க அது பார்ட் டைம் ஜாப் கிடையாதுல்ல… முழு நேரமாக தேவாலயப் பணிகளில் இறங்கினான். கடை அவ்ளோதான்… அப்ப, நான் என்ன பண்ணினேன்னுதான்ன கேட்குறீங்க…”
சுவாரஸ்யமாக கதை சொல்லி என் நேர்காணலை நீளமாக்கினார். “ஆமாம்… மிஷாவ் என்ற கலகக்காரன் என்ன செய்தான்?”
“ஃபிலடெல்ஃபியாவுல உள்ள சூதாட்ட விடுதி நடத்துபவர்களோடு எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. சூதாட்டத் தொழிலை நடத்தலாம்னு முடிவுக்கு வந்தேன். பணம் வேணுமே… வழக்கம் போல இயேசுதான் வழிகாட்டுனாரு. அங்க, இங்க கை வச்ச நான், இப்போ சொந்தக் கடையிலேயே கை வச்சேன். அண்ணனுக்குத் தெரியாமல் கடையிலிருந்து ஆயிரம் டாலர்களை எடுத்துக்கிட்டு, ஃபிலடெல்ஃபியாவுக்கு வந்துட்டேன். தம்பி நாரிஸ் என்னோடு இணைந்து கொண்டான். இளம் வயதினர் சூதாடுவது அமெரிக்காவுல தடை செய்யப்பட்டிருக்கு. அதனால, சட்ட விரோதமாத்தான் இந்தத் தொழில நடத்திட்டு வந்தேன். என்னோட கிளப்புக்கு பணக்கார வீட்டுப் பிள்ளைகள், அதிகாரத்தில் இருக்கும் பெரிய வீட்டுப் பிள்ளைகள் வந்து போனாங்க. ‘மிஷாவ் என்னோட பேரு, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, அது ‘விவேகி’ (Discreet)’ அப்டின்னு பெருமையா சொல்லிக்குவேன்.
“எனக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் உங்களை மாட்டிவிட மாட்டேன் என்ற அர்த்தத்தில் இப்படி என்னை நானே புகழ்ந்து பேசிக்கிட்டேன். வெறுமனே வாய்ஜாலம் பண்ணல. உண்மையிலேயே அவங்களோட நம்பிக்கையை நான் பெற்றேன். இந்தப் பெரிய இடத்து சகவாசம், என்னுடைய தொழிலுக்கு பக்க பலமா இருந்துச்சு. போலீஸ் சகவாசமும் இருந்ததாத்தானே, சட்ட விரோதத் தொழிலை சுமுகமா கொண்டு போக முடியும். அதனால, பல தடவை போலீஸ் ஸ்டேஷன் படி ஏறி இறங்கியிருக்கேன். இந்தத் தகவல் தெரிஞ்சு, அண்ணன் வருத்தப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். நான் சாத்தானின் வழியில் போனது மட்டுமில்லாம, தம்பி நாரிஸையும் சேர்த்துத் தீய வழியில கொண்டு போயிட்டதா அவர் வருத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. அதைப் பத்தி நான் கவலைப்படல. போலீஸ், ஜட்ஜ் தொந்தரவு இல்லாம சூதாட்டத் தொழில்ல கொடி கட்டிப் பறந்தேன்.”
“ஓஹோ… அப்ப நீங்க சாத்தானின் வழியில்… உங்க அண்ணன் தேவனின் வழியில்… இரண்டு பேரும் திரும்ப சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா?”
ஹா… ஹா… ஹா… தனைமறந்து சிரித்தார் மிஷாவ். என்னுடைய கேள்வி ஏதோ வினோதமான நினைவுகளைக் கிளறி விட்டிருக்க வேண்டும்.
“சொந்தக் கடையில திருடிட்டு வந்து, சாத்தானுக்கு பிடித்தமான தொழிலைச் செய்து வந்ததால், கடவுள் என்னைத் தண்டிப்பார் என அண்ணன் லைட்ஃபுட் எதிர்பார்த்தார். போலீஸ் ஸ்டேஷன் சென்று வந்ததுகூட கடவுளோட தண்டனைதான் என அவர் நினைத்திருக்கலாம். ஆனா, வாழ்க்கையோட விசித்திரம் பாருங்க, அண்ணனும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிச்சு…” சொல்லிவிட்டு மீண்டும் குழந்தைபோலச் சிரித்தார்.
“நீங்க சட்டவிரோதத் தொழில் செய்ததால சட்டம் உங்களைச் சீண்டியிருக்கலாம். ஆனால், அவர் தேவ ஊழியம் செய்தார், அவருக்கு என்ன பிரச்னை?”
“அது சரி… உங்க கேள்வி நல்ல கேள்விதான். ஆனா, இது அமெரிக்கா மேடம். என்னதான் தேவ ஊழியம் செய்தாலும் எங்க அண்ணன் ஒரு கறுப்பர்தானே. எனக்கு நல்லா நினைவிருக்கு. அந்தச் செய்தி பேப்பர்லகூட வந்தது, தேதிகூட நினைவிருக்கு. 1922, அக்டோபர் 17ம் தேதி வெளியான நியூபோர்ட் நியூஸ் பேப்பர்ல அந்தச் செய்தி வெளியாகி இருந்துச்சு.
“அதாவது அதிகாலை நேரத்துல மக்கள் ஆழ்ந்த உறக்கத்துல இருக்கும்போது, கறுப்பின மதபோதகர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் வீதியில் பாட்டுப் பாடிக் கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ததாக, போலீசார் அண்ணனைக் கைது செய்து அபராதம் விதித்தனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு எனக்கு பரவசமா இருந்துச்சு. எங்கக் குடும்பத்துல நான்தான் கெட்டுச் சீரழிந்து போயி, போலீஸ் ஸ்டேசனுக்குலாம் போனதா ஒரு பேச்சு இருந்தது. ஆனா, இப்ப தேவனுடைய பெருமைமிகு ஊழியரே போலீஸ் ஸ்டேசன் வாசல் படியை மிதிச்சிட்டாருன்னு ஆறுதல் பட்டுக்கிட்டேன். ஒருவேளை அண்ணனோட குரல் அந்த தெருக்காரங்களுக்கு பிடிக்காம இருந்திருக்கலாம்…” நகைச்சுவையை உதிர்த்து விட்டவர் போல குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். நான் சிரிக்கவில்லை.
“என்ன கேட்டீங்க… ரெண்டு பேரும் திரும்ப சந்திக்கலையான்னுதானே… அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுச்சு. என்னுடைய வாழ்க்கைல ரெண்டாவது அத்தியாயமான சூதாட்ட சாம்ராஜ்யம் ஒரு கட்டத்துல முடிவுக்கு வந்தது. ரொம்ப சிக்கலான அந்தக் கட்டத்துல என்னைக் காப்பாத்துனது இயேசு இல்ல, அவரோட செய்தியை மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்த என்னோட அண்ணன்தான்.
“ஆமாம்… எனக்கு அப்போ 30 வயசு இருக்கும். சூதாட்ட பிசினஸ் நல்லா போயிக்கிட்டிருந்தது. அப்போ ஒரு நாள் போலீஸ் ரெய்டு வந்து, சூதாடிக் கொண்டிருந்தவர்களோடு எங்களையும் அரெஸ்ட் பண்ணி ஸ்டேசனுக்குக் கூட்டிட்டு போனாங்க. சில நேரங்களில் அமைதியாக இருப்பது நல்லது. அது நல்ல பலனைத் தரும். அப்படி இல்லாமல் வாய் திறந்தால் தேவை இல்லாத இழப்புகள்தான் ஏற்படும். இது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, கடைப்பிடிக்கணுமே…
“ஸ்டேஷன்ல எங்களோட அரெஸ்ட்டான ஒருத்தரு பயந்துபோய், தன்னோட வேலை பறிபோயிடும்னு புலம்பிக்கிட்டிருந்தாரு. நான் அவரைச் சாந்தப்படுத்தினேன். இந்த உரையாடலை விரும்பாத ஒரு அதிகாரி, “உன்னை நொங்கப் போறேன், அமைதியா இரு…” என்றார். இது என் காதுக்கு, உன்னை திங்கப் போறேன்னு விழுந்தது. “என்னை நீங்க சாப்பிட்டால், உங்க மூளையை விட, வயிறு பரபரப்பான உணர்வோட இருக்கும்…” இப்படி எகத்தாளமாகப் பதில் சொல்லவும் கோபமான அந்த அதிகாரி, கையில் இருந்த லத்தியால் என் முகத்தில் ஓங்கி அடித்தார். சரியான அடி. அப்படியே என்னோட மூக்கு கண்ணாடி உடைந்து, அதோட சில்லு இடது கண்ணைப் பதம் பார்த்தது. சில நேரங்களில் அமைதியாக இருப்பது நல்லதுங்குற உபதேசம் மீண்டும் எனக்கு உறைத்தது. அப்போ போனதுதான் இந்தக் கண்ணு. ஒத்தக் கண்ணோடயே வாழ்ந்து பழகிட்டேன்”
அவருடைய கண்ணாடியைக் கழற்றிக் காட்டினார். இடது கண்ணில் செயற்கை கண் விழி பொருத்தப்பட்டிருந்தது. எப்போதும் கேலியாகப் பேசிப் பேசி முகத்தில் உருவான மகிழ்ச்சிக் களையால், கோரமாக இருந்தாலும் அவருடைய முக அமைப்பிற்கு அந்த செயற்கை கண் விழி உறுத்தலாக தெரியவில்லை. இடது கண்ணுக்கு கீழ் கன்னத் தோலை இழுத்து, முகத்தை என் அருகில் கொண்டு வந்து செயற்கை கண்ணைக் காட்டினார். சொல்ல வந்ததை மறந்து போனார்.
– பக்கங்கள் புரளும்