இந்தியா கூட்டணி கட்சிகள் மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். மாநிலங்களவை சபாநாயகருக்கு எதிராக இப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது நாட்டிலேயே முதல்முறை ஆகும்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, ஜக்தீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதே காரணம் என்று இந்தியா கூட்டணி கூறுகிறது. இந்த தீர்மானத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 65 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளால் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அது முடிவுடனேயே நின்றுவிட்டது. ஆனால், இன்று கூடிய கூட்டத்தில், இந்த முடிவு செயலாக மாறியுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், சட்டப்படி, அமலுக்கு வராது. அதற்கான காரணம்,
தற்போது நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த மாதிரியான தீர்மானம் குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், தற்போது நடந்து வரும் கூட்டத்தொடர் முடிவடைய 10 நாட்களே உள்ளது.
மேலும், 67(b) பிரிவின் கீழ், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மாநிலங்களவையில் பெரும்பான்மை சம்மதம் வேண்டும். இந்தத் தீர்மானத்தை மக்களவையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த இரண்டிற்குமே தற்போதைய சூழலில் வாய்ப்பில்லை. ஏனெனில், மாநிலங்களவையிலஇந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற தேவைப்படும் அளவிற்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.
ஆக, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.