தமிழ்நாட்டில் மதுரை மேலூர் பகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நாளுக்கு நாள் அழுத்தம் கொடுத்துவருகின்றன. இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் கூட, “ ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியும் வழங்கக் கூடாது.” என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி ஒருமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், “வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியதே மோடி அரசுதான்” என மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி சு. வெங்கடேசன் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்த எக்ஸ் தளத்தில் சு. வெங்கடேசன், “வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியதே மோடி அரசுதான். கனிமவளங்கள் திருத்தச்சட்டம் 2023 (THE MINES AND MINERALS (DEVELOPMENT AND REGULATION) AMENDMENT BILL, 2023) மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு 28-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த நாள்களில் மக்களவை போர்க்களம் போல இருந்தது.
இந்தச் சட்டம் தேசத்தின் கனிமவளங்களைப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கக் கொண்டுவரப்படுகின்ற சட்டம். மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிற சட்டம். இதனை ஏற்க முடியாது என அவையின் மையப்பகுதிக்கு மட்டுமல்ல அவைத்தலைவரின் இருக்கைக்கே சென்று முழக்கமிட்டு எங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம். எங்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தனக்கு இருந்த மிருகப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாங்கள் சொல்லுகிற எதையும் கேட்காமல் சட்டத்தை நிறைவேற்றியது மோடி அரசு. இந்தச் சட்டத்தின்படி வேதாந்தாவின் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை டங்க்ஸ்டன் கனிமத்தை எடுக்க அரிட்டாபட்டிக்கு அனுப்பிவைக்கும் திருப்பணியைச் செய்தது மோடி அரசு.
அரியவகை கனிமமும்
அரியவகை மனிதர்களும்.வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியவர் மோடி.
நிறுத்துவதாக நடிப்பவர் அண்ணாமலை.நடந்ததை அவர் மறந்துவிட்டதால் நாடே மறந்திருக்கும் என நம்புகிறவர் எடப்பாடி.
கனிமவள திருத்தச்சட்டத்தை மக்களவையில் எதிர்த்து ஒலித்த எங்கள் ஐம்பது பேரின் குரலை இன்று… pic.twitter.com/9gNU6us8B9
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 9, 2024
ஆனால், அரிட்டாபட்டியிலும், மேலூரிலும் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு வந்தவுடன் இன்று வேகவேகமாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஒன்றிய கனிமவளங்கள் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்குக் கடிதம் எழுதி, அவர் முடிவைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார் எனவும், விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாட்டையும் பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் எனவும் கூறியுள்ளார். அண்ணாமலை அவர்களே இந்தச் சட்டம் மக்களவையில் நிறைவேறிய பொழுது அன்றைய தினம் மிகச்சிறிய எண்ணிக்கையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய எங்களின் முழக்கத்தை காணொளியில் கேளுங்கள். “அதானிக்கான சட்டத்தைத் திரும்பப்பெறு” என்று அவை அதிர முழங்கினோம்.
அதானியின் நலனுக்கு எதிராக எதையும் செய்யாத பிரதமரால் இந்தச் சட்டம் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. அன்று மக்களவையில் ஐம்பது பேரின் முழக்கம் இன்று அரிட்டாபட்டியில் பல்லாயிரம் பேரின் முழக்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அன்று மூர்க்கத்தனமாகச் சட்டம் கொண்டு வந்த நீங்கள் இன்று மக்கள் எதிர்ப்பைக் கண்டு வேகவேகமாகப் பின்வாங்கக் கடிதம் எழுதுகிறீர்கள். அன்று உங்களை ஆதரிப்பதை மட்டுமே அரசியலாகக் கொண்டிருந்த எடப்பாடி “இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என இந்தியா கூட்டணியைப் பார்த்து இன்று சட்டமன்றத்தில் ஆவேசமாகக் கேட்கிறார்.

எடப்பாடி அவர்களே, இன்று நீங்கள் பேசியதை விட ஆயிரம் மடங்கு ஆவேசத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் மோடி ஆட்சியின் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் நாடளுமன்றத்தில் கூண்டுப் பறவையாகக் குறுகிக் கிடந்தீர்கள். சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்யும் உங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை. உங்களின் புதிய அவதாரம் கடந்தகால பாவங்களை இல்லாமல் செய்துவிடாது. காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்டுகளுக்கானதே எனும் பிரதமர் மோடியின் விசுவாசத்திற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MaperumSabaithanil
