Nubia இதழால் நடத்தப்பட்ட ‘உலகின் மிக அழகான பெண் யார்?’ என்ற உலகளாவிய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. கடந்த ஐந்து மாதத்துக்கு முன்பு தொடங்கிய கருத்துக்கணிப்பு, அக்டோபர் 31, 2024 அன்று முடிவடைந்தது. பல்வேறு பின்னணிகள் கொண்ட, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, 40-க்கும் மேற்பட்ட பெண் பிரபலங்கள் இந்தப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்தக் கருத்துக்கணிப்பில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள்.
இந்த முறை பதிவான 9,00,000 வாக்குகளில், மெக்சிகோ, சீனா, பெரு, கொலம்பியா, எகிப்து, அர்ஜெண்டினா, பிரேசில், அல்ஜீரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின், கொரியா உள்ளிட்ட 126 நாடுகளிலிருந்து ரசிகர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்தப் போட்டியின் முடிவில், தென் கொரிய நடிகையும், பாடகியுமான கிம் ஜிசூ (Jisoo) உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை வென்றிருக்கிறார்.
இவருக்கு 106 நாடுகளிலிருந்து 3,00,000-க்கும் அதிகமான வாக்குகள் வந்திருக்கிறது. தைவான் பாடகர் சௌ ட்சுயு இரண்டாவது இடத்தையும், தாய்லாந்து ராப் பாடகர், நடனக் கலைஞர் லலிசா மனோபன் மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். தென் கொரியப் பாடகியும், நடிகையுமான கிம் ஜிசூ, BLACKPINK எனும் பெண் பாடகர்கள் குழுவில் ஒருவர்.
2015-ல் நடிகையாக அறிமுகமான இவர், 2023-ல் அவரது தனி ஆல்பமான “மீ” ஆல்பத்தை வெளியிட்டார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஜிசோ கோல்டன் டிஸ்க் விருதுகள், மமா விருதுகள் உட்படப் பல விருதுகளைப் பெற்று சிறந்த பாடகராகவும், நடிகையாகவும் வலம் வருகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…