Isha Ambani: ’38 ஆயிரம் சதுர அடி, 12 அறை’ – அமெரிக்கப் பங்களாவை ஹாலிவுட் நடிகைக்கு விற்ற இஷா அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் இருக்கின்றன. இஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தைத் தனது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கிறார். இஷா அம்பானிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடம்பர பங்களா ஒன்று இருக்கிறது. இந்த பங்களாவில் 12 படுக்கை அறைகள் இருக்கிறது. இது தவிர 24 குளியலறைகள் இருக்கின்றன. 5.2 ஏக்கர் கொண்ட அந்த பங்களாவிற்கு வெளியேவும், உள்ளேயும் நீச்சல் குளங்கள் இருக்கின்றன.

அந்த வீட்டை இஷா அம்பானி ரூ.508 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார். அதனை அமெரிக்க ஹாலிவுட் பாடகி ஜெனீபர் லோபஸ் விலைக்கு வாங்கி இருக்கிறார். 38 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த பங்களாவில் ஜிம், உள்விளையாட்டு அரங்கம், முடிதிருத்தகம், ஸ்பா, வெளிப்புற சமையல் அறை, வீட்டிற்கு வெளியே மிகப்பெரிய தோட்டம் போன்ற வசதிகள் இருக்கின்றன.

அமெரிக்க வீடு

ஐந்து ஆண்டுகளாக இந்த வீடு விற்பனைக்காகக் காத்திருந்தது. அதன் பிறகுதான் அதனை ஜெனீபர் லோபஸ் வாங்கி இருக்கிறார். இந்த பங்களாவை விலைக்கு வாங்கி இருக்கும் ஜெனீபர் லோபஸ் நான்காவதாக பென் அப்லெக் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். ஜெனீபருக்கு ரூ. 3,300 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது. ஜெனீபருக்கு வீட்டை விற்பனை செய்த இஷா அம்பானி மும்பையில் குடியிருக்கும் வீடு 50 ஆயிரம் சதுர அடி கொண்டதாகும். கடற்கரையையொட்டி இருக்கும் அந்த பங்களாவின் மதிப்பு ரூ.500 கோடியாகும்.

நீச்சல் குளம், திரையரங்கம் என அனைத்து வசதிகளையும் கொண்ட அந்த வீட்டை இஷா அம்பானிக்கு அவரது மாமனார் திருமணப் பரிசாகக் கொடுத்தது. ஆனந்த் பிரமல் என்பவரைக் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் இருக்கின்றன. இஷா அம்பானி கர்ப்பமாக இருந்த போது இந்த வீட்டில்தான் இருந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01