1881ஆம் ஆண்டு, Gustave Trouvé என்கிற பிரான்ஸ் நாட்டு அறிஞர், முதன்முதலில் மின்சாரத்தில் ஓடக் கூடிய டிரைசைக்கிளைக் கண்டுபிடித்தார். அவருக்கு முன்னும் பின்னும் நிறைய விஞ்ஞானிகள், நிறுவனங்கள், அறிஞர்கள் எலெக்ட்ரிக் கார்களை அவ்வப் போது வடிவமைத்துக் கொண்டே வந்தனர்.
ஆனால் 2000களின் பிற்பகுதி மற்றும் 2010களின் தொடக்கத்தில், நிசான் (நிசான் லீஃப்) போன்ற வெகு சில நிறுவனங்கள் மட்டுமே வழக்கமான கார் சந்தைக்கு ஏற்றாற் போல தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களை, களமிறக்கி வெற்றி கண்டனர். அதில் டெஸ்லாவும் ஒன்று. ஷார்பாக சொல்வதென்றால், எலான் மிகச் சரியான நேரத்தில், கச்சிதமான கார்களை களமிறக்கினார்.
மார்ட்டின் எபெர்ஹார்ட் & மார்க் டார்பென்னிங், tzero என்கிற எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிப் பார்த்த பின், அதை வணிக ரீதியிலான பயன்பாட்டுக்குத் தயாரிக்குமாறு, அக்காரைத் தயாரித்த ஏசி ப்ரொபல்ஷன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டனர். அக்கோரிக்கையை மறுத்ததால், 2003ஆம் ஆண்டில் இருவரும் இணைந்து டெஸ்லா நிறுவனத்தைத் தொடங்கினர்.
எலான் மஸ்கும் tzero காரை வணிக பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறு சொல்ல, டெஸ்லாவையும், எலானையும் ஒன்றிணைத்தது, ஏசி ப்ரொபல்ஷன் நிறுவனம் தான். 2004ஆம் ஆண்டு வாக்கில் சுமார் $7.5 மில்லியன் முதலீடு செய்து டெஸ்லா நிறுவனத்துக்குள் நுழைகிறார் எலான் மஸ்க்.
ஹீரோயினைப் பார்த்தபின், ஹீரோவுக்கு காதல் வருவது போல, டெஸ்லாவுக்குள் நுழைந்த உடனேயே, மார்ட்டின் எபெர்ஹார்ட் & மார்க் டார்பென்னிங் தரப்பும், எலானும் மோதி விளையாடத் தொடங்கினர். 2008ஆம் ஆண்டில், உரசல்கள், மோதல்களாகி, வெடித்துச் சிதற மார்ட்டின் எபெர்ஹார்ட் & மார்க் டார்பென்னிங் டெஸ்லாவிலிருந்து வெளியேறினர்.
யாரை எல்லாம் இணை நிறுவனர்கள் என்றழைப்பது என்பதிலேயே ஒரு பெரிய பஞ்சாயத்து நடந்து, நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு தான், மார்ட்டின் எபெர்ஹார்ட், மார்க் டார்பென்னிங், இயான் ரைட், எலான் மஸ்க், ஜே பி ஸ்ட்ராபெல் ஆகிய ஐவரையும் அழைக்கலாமென ஒரு தெளிவு கிடைத்தது.
2008ஆம் ஆண்டில் டெஸ்லா தன் முதல் காரான ரோட்ஸ்டரை ஒரு பழைய செவர்லெட் சேவை மையத்தில் வைத்து தயாரிக்கத் தொடங்கியது.
தொடக்கத்தில் 7.5 மில்லியன் முதலீடு செய்திருந்த எலான் மஸ்க், 2009 காலத்தில் மேலும் $70 மில்லியனை முதலீடு செய்தார். அது போக அதே 2009ல் அமெரிக்க எரிசக்தித் துறையிடமிருந்து 465 மில்லியன் கடன் பெற்றார். அதை 2013ல் சுமார் 12 மில்லியன் வட்டியோடு திருப்பி அடைத்தார் மஸ்க். இந்த மாபெரும் கடன் தான், டெஸ்லா தனக்கென ஒரு வலுவான பவர் டிரெயின் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்புது ரக கார்களை சந்தைக்கு கொண்டு வரவும் உதவியது.
Model S:
2012ல் டெஸ்லா ரோட்ஸ்டரின் உற்பத்தியை நிறுத்திய எலான், அதே ஆண்டு ஜூன் மாதம் தன் முதல் சொகுசு செடான் காரான மாடல் எஸ்-ஐ களமிறக்கியது. 2012 & 2013ல் பல ஆட்டோமொபைல் துறை சார்ந்த விருதுகளை வென்றது மாடல் எஸ். 2015 – 16 காலகட்டத்தில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
Model X:
2015ல் தன் முதல் எஸ்யூவி ரக டெஸ்லா எக்ஸை களமிறக்கினார் எலான் மஸ்க். இது ஒரு நடுத்தர சொகுசு கிராஸ்ஓவர் எஸ்யூவி. இந்த மாடல் சந்தையைப் பார்ப்பதற்கு முன்பே சுமார் 25,000 வாகனங்களுக்கான ஆர்டர்கள் டெஸ்லாவுக்குக் கிடைத்தன.
Model 3:
2016ல் டெஸ்லா தன் மாடல் 3 காரை அறிமுகப்படுத்தியது. இதற்கு முந்தைய டெஸ்லா கார்களை விட விலை குறைவான, ஏழைகளுக்கேற்ற எள்ளுருண்டை மாடல் இது. மாடல் 3 களமிறங்கிய சில வாரங்களுக்குள் டெஸ்லாவுக்கு சுமார் 3.25 லட்சம் ஆர்டர்கள் கிடைத்ததென்றால் அதன் வரவேற்பைப் புரிந்து கொள்ளலாம்.
உற்பத்தியை அதிகரிக்க, பெரிய அளவில் ரோபாட்களில் முதலீடு செய்தார் எலான் மஸ்க். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரோபாட்கள் வேலையை எளிதாக்கவில்லை. 2017 – 18 காலத்தில் பல மாதங்கள் டெஸ்லாவுக்குள்ளேயே “Production Hell” என்று அழைக்கும் அளவுக்கு சொதப்பியது. இதை எல்லாம் சரி செய்யவே எலானுக்கு 2018 இறுதி வரை தேவைப்பட்டது.
எல்லாவற்றையும் சரி செய்த பின், மாடல் 3 உலகிலேயே அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார் என்கிற பெருமையைப் பெற்றது. கடந்த 2021 ஜூனில், இந்த மாடலின் விற்பனை எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்து சாதனை படைத்தது.
Model Y:
2020ல் டெஸ்லா தன் மாடல் ஒய் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது டெஸ்லா. 2023 முதல் காலாண்டில் டொயோட்டா கொரொல்லாவின் விற்பனையை மாடல் ஒய் முறியடித்துவிட்டதென்றால் டெஸ்லாவின் பலத்தைப் புரிந்து கொள்ளலாம்.
டெஸ்லா செமி:
வெறுமனே கார்களை மட்டும் களமிறக்காமல், 2017ல் சடன் கியர் போட்டு, செமி டிரக்கை அறிமுகப்படுத்தியது டெஸ்லா. இதே 2017ல் தான் டெஸ்லா மோட்டார்ஸ் என்கிற பெயரை டெஸ்லா இன்க் என மாற்றினார் எலான். சாதாரண டீசல் டிரக்குகளை விட சுமார் 3 மடங்கு அதிக சக்தி கொண்ட டிரக் என்றும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 800 கிமீ வரை மைலேஜ் தரக்கூடியதென்றும் டெஸ்லா தரப்பில் சொல்லப்படுகிறது. 2025ல் செமி டிரக்குகள் சந்தையில் களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023 நவம்பரில் சைபர் டிரக்குகளை டெலிவரி செய்யத் தொடங்கியது டெஸ்லா. 510 – 550 கிமீ ரேஞ்ச் கொண்ட டெஸ்லாவின் சைபர் டிரக்கைக் குறித்த விமர்சனங்களை நிறையவே இணையத்தில் பார்க்க முடிகிறது. இன்றைய தேதிக்கு டெஸ்லா 6 மாடல் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
எலான்’ஸ் டச் 1:
டெஸ்லாவில் கட்டணம் செலுத்தி இணைய வசதியைப் பெற்றால் “பிரீமியம் கனெக்டிவிட்டி” சேவையைப் பெறலாம். இதில் நேரடியாக போக்குவரத்து நெரிசலையும், செயற்கைக் கோள்கள் மூலம் வழிகாட்டும் சேவையையும், பொழுதுபோக்கு ஊடகங்களையும், ப்ரவுசிங் சேவையையும் பெறலாம்.
எல்லா கார்களைப் போல, டெஸ்லாவை ஷோரூம்களுக்கோ, சர்வீஸ் சென்டர்களுக்கோ கொண்டு சென்று தான் பழுது பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை. முதலில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு லேப்டாப்பை Diagnose செய்வது போல, டெஸ்லா காரைச் செய்யலாம். கார் சரியாகவில்லை என்றால், டெஸ்லா தரப்பிலிருந்து ஒரு நிபுணர் வாடிக்கையாளர் இருக்கும் இடத்துக்கே வந்து பழுது பார்ப்பார்.
பொதுவாகவே, பெட்ரோல் & டீசல் கார்களில் இருக்கும் பாகங்களின் எண்ணிக்கை, எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் பாகங்களின் எண்ணிக்கையை விட குறைந்தபட்சம் இரு மடங்கு அதிகமாக இருக்கும். பாகங்களின் எண்ணிக்கை அதிகமென்றால், பராமரிப்புச் செலவுகளும் அதிகம்.
ஆனால் டெஸ்லாவில், பெட்ரோல் டீசல் கார்களை விட குறைவான பாகங்களே இருப்பதால், டெஸ்லா கார்களுக்கு ஆண்டுதோறும் பெரிய பராமரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டாம், குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை பிரேக் ஃப்ளுயிட், ஏசி, டயர்கள், ஏர் ஃபில்டர் போன்றவற்றை மட்டும் கவனித்து மாற்றிக் கொண்டால் போதுமமென டெஸ்லாவே சொல்கிறது. இதுவரை டெஸ்லாவுக்குச் சொந்தமாக, உலகம் முழுக்க சுமார் 1,300 கடைகள், சேவை மையங்கள் உள்ளன.
டெஸ்லாவுக்கும் அமெரிக்காவிலுள்ள வாகன இன்ஷூரன்ஸ் தரப்பினருக்கும் ஏற்பட்ட உரசலில், இனி டெஸ்லா கார்களுக்கு, டெஸ்லாவே தனி இன்ஷூரன்ஸ் சேவை வழங்குமென முடிவெடுத்தார் எலான். இன்றும் டெஸ்லா நிறுவனத்திலேயே டெஸ்லா கார்களுக்கான இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
வெறுமனே மின்சார வாகனங்களை களமிறக்கினால் போதுமா..? சார்ஜிங் பிரச்னையை சமாளிப்பது எப்படி..? அப்போது தானே மக்கள் டெஸ்லாவை நம்பி காரை வாங்குவர். அதற்கும் 2012லேயே விடை கூறினார் எலான் மஸ்க். அதன் பெயர் டெஸ்லா சூப்பர் சார்ஜர்.
2024 ஜூலை மாத கணக்குப் படி, டெஸ்லா சுமார் 60,000 கார்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் வகையில் 6,500 சூப்பர் சார்ஜர் ஸ்டேஷன்களை உலகம் முழுக்க இயக்கிக் கொண்டிருக்கிறது. இச்சேவையில் டெஸ்லா கார்களை 15 நிமிடம் சார்ஜ் செய்தால், சுமார் 300 கிமீ பயணிக்கலாம் என்கிறது டெஸ்லா.
இது போக, எங்கெல்லாம் காரை அதிக நேரம் நிறுத்த வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் Destination Charging என்கிற பெயரில் ஒரு சார்ஜிங் சேவையும் கிடைக்கிறது. உதாரணத்துக்கு ஹோட்டல்கள், உணவகங்கள், ரிசார்ட்களில் இச்சேவை கிடைக்கிறது. இதன் மூலம் 1 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 700 கிமீ பயணிக்கலாம் என்கிறது டெஸ்லா.
எலான்’ஸ் டச் 3 – ஸ்ட்ராட்டஜி:
டெஸ்லா தொடங்கப்பட்டதிலிருந்தே, விலை அதிகமான காரை முதலில் களமிறக்குவது, பிறகு அதே தொழில்நுட்பத்தைப் மெருகேற்றி, விலை மலிவான கார்களைக் கொண்டு சந்தையை ஆள்வது என்கிற அடிப்படைத் திட்டத்தை அருமையாக நிறைவேற்றினார் எலான்.
அதே போல எப்போதும், டெஸ்லா தன் கார்களின் ஹார்ட்வேர்களை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருப்பர். ஒரு புதிய மாடல் வரட்டும், அதில் எல்லா புது ஹார்ட்வேர்களையும் அப்டேட் செய்துவிடலாம் என காத்திருப்பதில்லை.
வழக்கமாக கார் விற்பனை என்றாலே டீலர்களை நம்பித் தான் கடை விரிக்க முடியும். ஆனால் டெஸ்லா, கெத்தாக தானே கடை போட்டு விற்பனை செய்து வருகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே கார்களை ஆன்லைனில் விற்ற முதல் நபர் நம் எலான் தான்.
பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பாகங்களில் சுமார் 70 – 80% பாகங்களை வெளியிலிருந்து தான் வாங்குவர். ஆனால் டெஸ்லாவோ பேட்டரி, மோட்டார்கள், மென்பொருள் என பலவற்றையும் தன் சொந்த உற்பத்தியில் செய்து கொண்டிருக்கிறது அல்லது ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
டெஸ்லா கார்கள் சந்தையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் காலத்திலேயே, மின்சாரத்துக்கான தீர்வாக டெஸ்லா பவர்வால் & டெஸ்லா பவர்பேக் என்கிற பேட்டரி பேக்குகளை 2015லேயே களமிறக்கியது. அடுத்த சில வாரங்களில் சுமார் $800 மில்லியனுக்கு ஆர்டர்கள் குவிந்தன.
ஒரு வியாபாரத்தைச் செய்வதே பெரும் சவாலான சூழலில், அந்த வியாபாரத்தின் முன்னும் பின்னும் இருக்கும் சேவைகளையும், ஒரு புதிய வியாபாரமாக இணைத்துச் செய்வது ஒரு பெரிய சாதனை தான். அதை எலான் டெஸ்லாவில் செய்து காட்டியுள்ளார்.
அதனாலோ என்னவோ, இன்று எலான் மஸ்க் தலைமையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் டெஸ்லா நிறுவனத்தில் கூகுளின் நிறுவனர்களான செர்ஜி பிரின், லாரி பேஜ், ஈ பேவின் முன்னாள் தலைவரான ஜெஃப் ஸ்கால், வான்கார்ட் குழுமம், பிளாக் ராக், பிளாக் ராக் லைஃப், ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் போன்ற பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் & பெருந்தலைகள், டெஸ்லாவில் கணிசமாக முதலீடு செய்துள்ளனர்.
இப்பேற்பட்ட டெஸ்லா நிறுவனம், கடந்த 2010ஆம் ஆண்டில், நாஸ்டாக் பங்குச் சந்தையில் தன் 13.3 மில்லியன் பங்குகளை தலா $17க்கு விற்று, $226 மில்லியன் தொகையை ஐபிஓ மூலம் திரட்டியது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், நாஸ்டாக் பங்குச் சந்தையில், 1956க்குப் பிறகு, ஃபோர்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து தன் பங்குகளை வெளியிட்ட முதல் ஆட்டோமொபைல் நிறுவனம் என்கிற பெருமையைப் பெற்றது டெஸ்லா.
ஜூலை 2019 – ஜூன் 2020 வரையான நான்கு காலாண்டில் டெஸ்லா தொடர்ந்து லாபமீட்டியதால், எஸ் & பி 500 நிறுவனங்களில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2020ஆம் ஆண்டில் டெஸ்லா அமெரிக்காவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. உலகிலேயே 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற மாபெரும் சந்தை மதிப்பைத் தொட்ட அமேசான், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், என்விடியா, கூகுள் போன்ற வெகு சில டாப் நிறுவனங்களின் பட்டியலில் டெஸ்லாவும் இணைந்தது.
இன்று டிரைவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் டெஸ்லா ஆட்டோபைலட், சைபர்கேப், ரோபோ வேன்… போன்ற திட்டங்களிலும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது டெஸ்லா. இன்றைய தேதிக்கு அது பெரும் வெற்றி பெறாமல் இருக்கலாம், பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் இச்சேவையை டெஸ்லா மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன. ஒருவேளை டெஸ்லா வென்றால், அது அத்துறையிலேயே நிகழும் மாபெரும் பாய்ச்சலாக இருக்கலாம்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…