“வெள்ளைக்காரர்களைப் பற்றிய கறுப்பர்களின் மதிப்பீடு இரண்டு வகையாக இருக்கும்.
ஒன்று, வெள்ளையர்களைப் போல நாமும் மாற வேண்டும் என்ற ஆசை. இன்னொன்று, வெள்ளையர்களின் இவ்வளவு பிரமாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது கறுப்பர்களின் உழைப்புத்தான், கறுப்பர்களைச் சுரண்டித்தான் அமெரிக்கா கொழுத்துக் கிடக்கிறது, எனவே வெள்ளையனைப் பழிவாங்க வேண்டுமென்ற கோபம். இதில் நீங்கள் இரண்டாவது வகை. வெள்ளையன் மீதான வெறுப்பு எப்படி வந்தது மிஷாவ்?”
இது அவ்வளவு முக்கியமான கேள்வி கிடையாது. எனக்கே தெரியும். அமெரிக்காவில் எந்தக் கறுப்பனுக்கு வெள்ளையன்மீது கோபம் இல்லாமல் இருக்கும்? நானூறு ஆண்டுகால அடிமைத்தனத்தில் உழன்ற கறுப்பர்களுக்கு, அடக்கி ஆண்ட வெள்ளையன் மீது கருணையா பிறக்கும்? சட்டப் புத்தகங்களின் பக்கங்களில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதாக எழுதியிருந்தாலும் எதார்த்த வாழ்வில் அன்றாடம் இனப்பாகுபாடு நடைமுறையில் உள்ளதே, பொது இடங்களில் கறுப்பர்களை ஒதுக்கி வைப்பது இப்போதும் தொடர்கிறதே, அதனால் இந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தமில்லை. இருப்பினும், மிஷாவ்வின் அனுபவம் ஏதாவது வினோதமாக இருந்து, அது வாசகர்களுக்கு பயனளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் கேட்டேன்.
“உங்களோட கேள்வியில நான் கொஞ்சம் முரண்படுறேன். வெள்ளையர்களைப் போல நாமும் மாற வேண்டும் என்ற ஆசை சில கறுப்பர்களுக்கு இருப்பதாகச் சொன்னீங்க, அவங்களுக்கும் வெள்ளையர்கள் மேல கோபம் இல்லாம இருக்காது. வெள்ளையர்கள் மேல எனக்கு வெறுப்பும் கோபமும் வர காரணமாக இருந்தது என் அப்பாதான். வீட்டுல அப்பா, மார்கஸ் கார்வேயின் (Marcus Garvey) இயக்கப் பத்திரிகையான நீக்ரோ வேர்ல்ட் (Negro World) பத்திரிகையை படிச்சு என்னோட விவாதிப்பாரு. மார்கஸ் கார்வே தெரியும்ல…
“அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பர்களின் பூர்வீகம் ஆப்ரிக்காதான், உலகின் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் கறுப்பர்கள் அனைவரும் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டும் என இயக்கம் நடத்தியவர் மார்கஸ் கார்வே. Universal Negro Improvement Association என்ற அவருடைய அமைப்புக்கு ஏராளமான நாடுகள்ல கிளை இருந்திச்சு. அந்த அமைப்போட வாரப் பத்திரிகைதான் நீக்ரோ வேர்ல்ட். கறுப்பர்கள் முதலில் தங்களை நேசிக்க வேண்டும், கறுப்பராக இருப்பதற்கு பெருமைப்படணும், கறுப்பர்கள் வெள்ளையர்களை அண்டிப் பிழைப்பதைக் கைவிட்டு சொந்தக் காலில் நிற்க வேண்டும், தொழில்துறையில் கறுப்பர்களை வேலைக்கு வைக்கக்கூடிய அளவுக்கான நிறுவனங்களை கறுப்பர்கள் சொந்தமாக தொடங்க வேண்டும் போன்ற அந்தப் பத்திரிகைல வந்த, கருத்துக்களைப் பத்தி அப்பா என்னோட விவாதிப்பாரு.
“தற்சார்பு பொருளாதாரம் பத்தின கார்வேயின் பார்வையில அப்பாவுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அந்தக் கருத்து பிடிச்சுப் போகக் காரணம் அவர் சொந்தமா பிசினஸ் செய்ததுதான். சொந்த பந்தங்களை தூக்கி விடனும்னு அப்பா விரும்பினாரு. ஆப்ரிக்காவிலிருந்து கறுப்பர்கள் கடத்தி வரப்பட்டார்கள் என்பதால், நான்கு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில் மீண்டும் ஆப்ரிக்காவுக்கு திரும்புதல் என்ற கார்வேயின் கொள்கையில் அப்பாவுக்கு உடன்பாடு இல்லை. அமெரிக்காவுலயே கறுப்பர்கள் வாழ்ந்து காட்டணும்னு விரும்பினாரு. அப்பாவோட இந்த சிந்தனைதான் உள்ளூர என்னை வழிநடத்தியிருக்கும்னு நினைக்கிறேன்.
வெறுமனே, தற்சார்பு பொருளாதாரம் பத்தின சிந்தனையாக மட்டும் இருந்திருந்தா ஒரு புத்தகக் கடைக்காரனா அமெரிக்க சமூகம் என்னை உருவாக்கி இருக்காது…” மிஷாவ் இப்படிச் சொன்னதும், அவர் சொல்ல வந்த கருத்து எனக்குப் புரியவில்லை. “தற்சார்பு பொருளாதார சிந்தனை குறையுடைய சிந்தனையா? நீங்க என்ன சொல்ல வர்ரீங்க…” அவர் போக்கிலேயே விட்டிருந்தால் புரியும்படி சொல்லித்தான் இருப்பார். ஆனால், நான் உடனே குறுக்கிட்டுக் கேட்டேன்.
“அப்படி அர்த்தம் இல்லை. நான் சொல்ல வந்த விஷயமே வேற. தற்சார்பு பொருளாதாரக் கொள்கை மட்டும் என்னை வழிநடத்தி இருந்தா, நானும் எங்கப்பாவை போல ஒரு பிசினஸ்மேனா ஆகியிருப்பேன். ஆனா, அதன் எதிர்மறை குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். அதாவது கறுப்பர்களின் இந்த மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? கார்வேயின் கட்டுரைகளைப் பற்றி அப்பாவுடன் விவாதிக்கும்போது தொடர்ந்து என்னுள் எழுந்து கொண்டே இருந்த கேள்விகள் இதெல்லாம்…
“அதிகாரம் இல்லாத இனத்தை கண்ணியத்தோடு நடத்த மாட்டார்கள் என கார்வே சொல்லியிருக்கிறார். திரும்பவும் சொல்றேன், வெறுமனே தற்சார்பு பொருளாதாரக் கொள்கையில பிடிப்பு இருந்திருந்தா நான் ஒரு நல்ல தொழில்முனைவோராக உருவெடுத்திருப்பேன். ஆனால், நான் அப்படியல்ல. ஒரு கலகக்காரனா மாறிக்கிட்டிருந்தேன். பத்து வயசுலயே, வெள்ளையனுக்கு எதிரான கலகச் சிந்தனை என்னுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. ஒரு விஷயத்த சொல்ல மறந்திட்டேன். திருடி போலீஸ்ல மாட்டினப்ப ஜட்ஜோட நடந்த விவாதத்த சொல்ல மறந்திட்டேன். சொல்லவா?”
சிறு பையனாகவே மாறிவிட்டார். பசுமரத்தாணி என்பார்களே அது மிஷாவ் அவர்களுக்கு நன்கு பொருந்தும். திருப்புமுனைகளை ஏற்படுத்திய சிறு பிராயத்து சம்பவங்களை பசுமையாக நினைவில் வைத்திருப்பார்போல… தலையசைத்தேன்.
“அந்த வெள்ளைக்கார ஜட்ஜ் நல்ல வயசான ஆளு. அவரோடு அன்று நடந்த உரையாடல் நல்லா என் நினைவுல இருக்கு.
நீதிபதி: சிறுவனே, நீ வாழ்வதற்கு என்ன செய்கிறாய்?
என்ன கேட்க வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். என் வாயாலேயே நான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்க இந்தக் கேள்வியை கேட்டார். ஆனால், முட்டாள்தனமாக கேட்கப்பட்ட கேள்வி இது. அவர் ஜட்ஜ் என்றால் பயந்திடுவோமா?
நான்: வெள்ளையர்கள் வாழ்வதற்கு என்ன செய்கிறார்களோ, அதையேதான் செய்கிறேன்…
நீதிபதி: அப்படியா? அது என்ன?
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவருக்கும் புரிந்து விட்டது. அதனால், அவரை இன்னும் கடுப்பேத்த, அந்தப் பதிலைச் சொல்வதற்கு முன்பாக, உடனே வேறொரு பதிலை மனதில் தயார்படுத்தினேன்.
நான்: மூச்சு விடுவதுதான்… நீங்கள் வாழ, வேறு என்ன செய்கிறீர்கள்?
நீதிபதி: புத்திசாலி பையன் நீ…
நான்: நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள் என நினைக்கிறேன். உயிரோடிருக்க என்ன செய்கிறீர்கள் என நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன். அதாவது சுவாசிப்பதால் நான் உயிர் வாழ்கிறேன்.
நீதிபதி: சிறுவனே, உன்னுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறாய்?
இப்போது கொஞ்சம் நேரடியாக கேள்வி கேட்டு என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டார். நான் முதலில் யோசித்து வைத்திருந்த பதிலை இப்போது எடுத்து வீசினேன்.
நான்: எதுக்காக என்னை லாக்கப்பில் அடைத்தீர்கள்? வெள்ளையன் என்ன செய்கிறானோ, அதைத்தான் நானும் செய்தேன்.
நீதிபதி: என்ன சொல்ற?
நான்: திருட்டு. நீங்க அமெரிக்காவுக்கு வந்து, செவ்விந்தியர்களிடமிருந்து அமெரிக்காவைத் திருடுனீங்க. சரியா… அப்படியே நீங்க ஆப்ரிக்காவுக்குப் போய், அங்கிருந்த என்னோட முன்னோர்களைத் திருடி அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து அடிமைப்படுத்துனீங்க…
“இப்படிச் சொன்னா, அந்த ஜட்ஜ் என்ன செய்திருப்பார் இவா? அவர் பதிலே சொல்லவில்லை. ஆனால், தண்டனையை அறிவித்தார்…”
மிஷாவ்வுடனான நேர்காணலில் வாசகர்களுக்கு, வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தரும் ஏதாவது கிடைக்குமா என நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.