ஹாஜி ஜாமா பள்ளிவாசல் வழக்கைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் சம்பால் பகுதியில் வன்முறை எழுந்தது. காவல்துறையினர் மற்றும் பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுக்கள் இடையிலான வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். 20 காவலர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (டிசம்பர் 4) சந்திக்க திட்டமிட்டிருந்தார். வன்முறையில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க விருந்தார். ஆனால் அந்த மாவட்டத்துக்குள் வெளி நபர்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
ராகுல் காந்தியுடன் வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர், 6 எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவிருந்தனர். அனைவருமே காஸிபூர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “நம் நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தீர்மானித்தோம். உ.பி அரசாங்கம் எங்கள் குழுவை அனுமதிக்க வேண்டும்” என ட்வீட் செய்திருந்தார்.
ஆனால், ராகுல் காந்தி மட்டும் தனியாக செல்வதற்கான கோரிக்கையையும் உ.பி அரசு மறுத்துள்ளது.
“எதிர்கட்சித் தலைவராக பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது என் கடமையும் பொறுப்பும் கூட. எனது வேலை மற்றும் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து என்னைத் தடுக்கின்றனர்” எனக் கூரியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் டெல்லி-உத்தரபிரதேசம் எல்லையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர், டெல்லிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதை முன்னிட்டு பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வுக்கு உத்தரவிட்டது. ஆய்வாளர்கள் பள்ளிவாசல் சென்றதை முன்னிட்டு வன்முறை வெடித்தது.
உச்சநீதிமன்றம் ஆய்வு முடிவுகள் வெளியாவதை தடுத்து நிறுத்தியதுடன் அகலாபாத் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.