சேலத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து பெய்ந்துவரும் கனமழையினால் பல்வேறு பகுதிகள் பெரிதளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, சேலம் மாநகர பகுதிகளில் திருமணிமுத்தாறு நிரம்பி கந்தம்பட்டி பைபாஸ் அருகே இருக்கின்ற குடியிருப்புகள், தொழிற் நிறுவனங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல சேலம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சினிமா நகர், சினேரி வயல்காடு பகுதி, 5 ரோடு பகுதி, சிவதாபுரம், ஏ.வி.ஆர் ரவுண்டானா போன்ற பகுதிகள் பெரிதளவு பாதிப்புக்குள்ளானது.
சேலம் மாவட்ட பகுதிகளான காடையாம்பட்டி வட்டாரத்தில் பெய்த கனமழையால் ஏரிகள் நிரம்பி வாய்க்காலில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து டேனிஷ்பேட்டை, பூசாரிப்பட்டி, சந்தைதடம் ஆகிய கிராமங்களில் மழை நீர் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. பன்னப்பட்டி ஏரியின் கால்வாய் உடைந்து பூசாரிப்பட்டி சிவன் கோயில் மற்றும் அங்கே இருக்கும் வீடுகள் எல்லாம் சேதமாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, “40 – ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு கனமழை பெய்ந்துள்ளது. அது ஊரையே புரட்டிப் போட்டுவிட்டது” என்று வேதனையுடன் கூறினார்கள்.
அதே போன்று சேலம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையில் பட்டிப்பாடி, கொளகூர், கொளப்படிக்காடு, நடூர், புளியங்கடை போன்ற கிராமங்களில் மழைநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஒரு வாரமாக ஏற்காட்டில் பல பகுதிகளில் மின்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்காடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் டு ஏற்காடு மலை ஏறும் பகுதியில் 40 அடி பாலத்தின் அருகில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை சேதமானதால் மேலே செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதை அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மக்கள் ஏற்காட்டுக்குச் சுற்றுலா வருவதை தற்சமயம் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் ஆத்துர் பாப்பநாயக்கன்பட்டி அணையின் மட்டம் உயர்ந்ததால் அணை திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த உபரி நீரானது அணைமேடு அணை வழியாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை நீரானது ஆத்தூர் வசிஷ்ட நதியில் வந்து கலந்து விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.