Syria War: மல்லிகை புரட்சி முதல் கிளர்ச்சியாளர்களின் இரண்டாம் எழுச்சி வரை! – சிரியாவின் போர் வரலாறு!

சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சியில் அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை ஆயுதக் குழுக்கள் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வந்தபோது, எனக்கு #PrayforSyria என டிரெண்ட் செய்யப்பட்ட அந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. கடந்த ஆண்டு கூட இயற்கை ஆடிய நிலநடுக்கம் எனும் கோரத் தாண்டவத்தால், இதே ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. சமீபத்திய வரலாற்றில் நீண்டகாலமாக போரையும், அதனால் ஏற்படும் இழப்பையும், உலக நாடுகளின் அரசியலையும், அதன் விளைவுகளையும் எதிர்க்கொண்டு வரும் பெரும் மக்கள் கூட்டம், எப்போது விடிவு வரும் என்றே தெரியாமல் வெளிச்சத்துக்காக காத்திருக்கின்றன. அப்படி அந்த நாட்டுக்கு என்னதான் ஆனது…

சிரியா

ஜனநாயக ஆட்சிக்கு முன்னர் மன்னராட்சி, குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், தனி நபர் ஆட்சி, ஒற்றைக் கட்சியின் ஆட்சி என இப்படித்தான் ஆட்சி முறைகள் செயல்பாட்டில் இருந்தது. இதற்கு எதிரான மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு மத்தியில் வளர்ந்ததின் வெளிப்பாடே இன்று உலகின் பல்வேறு நாடுகள் மக்களாட்சியில் இருப்பதற்கு முக்கியக் காரணம். இதற்கு விதையிட்ட நாடுகளில் கவனிக்கத்தக்கது துனிசியா. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், ஊழல், அரசியல் சுதந்திரமின்மை, மோசமான வாழ்க்கைச் சூழல்களால் பாதிக்கப்பட்ட துனிசியா மக்களில் ஒருவர் முஹம்மத்.

வேலையில்லா பட்டதாரியான இவரிடம் காவல்துறை லஞ்சம் கேட்டு துன்புறுத்தியதால், 17 டிசம்பர் 2010 அன்று தற்கொலை செய்துகொண்டார். அப்போது பிரிந்த அந்த உயிர், துனிசியாவின் விடுதலைக்கானது என அவர் நினைத்திருக்கமாட்டார். அந்த மரணத்தைத் தொடர்ந்து, துனிசியா மக்களின் ஒருங்கிணைந்த போராட்டக் குழு முன்னெடுத்தப் புரட்சியை, `மல்லிகைப் புரட்சி’ என வரலாறு பதிவு செய்துகொண்டது.

அந்தப் புரட்சியின் வீரியத்தால், வட ஆப்ரிக்கா தொடங்கி மத்தியக் கிழக்கு நாடுகள் வரை மக்கள் வீறுகொண்டு எழுந்தனர். இந்த விடுதலைப் புரட்சியின் தீயின் வெளிச்சத்தில், பஹ்ரைன், எகிப்து, மொரோக்கோ, லிபியா எனத் தொடர்ந்து விடியலைத் தேடிக் கொண்டது. அந்த வரிசையில் வந்து நின்ற நாடுகளின் ஒன்று சிரியா.

சிரியா

ஊழல், பொருளாதார சிக்கல், வேலை வாய்ப்பின்மை, அரசியல் சுதந்திரமின்மை எனத் தொடர்ந்து உள்ளுக்குள் புழுங்கி வந்த சிரிய மக்களுக்கு, 2000-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பொறுமைகாத்துவந்த மக்கள், துனிசியா கொடுத்த புரட்சித் தீயைக் கைகளில் ஏந்தினர். 2011-ம் ஆண்டு சிரியாவின் டெராவில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். அதை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கத்தோடு அல் – அசாத் அரசு அடக்குமுறையை ஏவியது. இதை துணிச்சலுடன் எதிர்க்கொள்ள மக்களும் முன்வந்தனர். அதற்காக அல்-அசாத் அரசை எதிர்த்து அங்காங்கு புரட்சிக் குழுக்கள் உருவானது. அரசின் வன்முறைகளுக்கு நிகராக புரட்சிக் குழுக்களும் வளர்ந்துவந்தது.

அரசின் அடக்குமுறைகள் நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியபோது, கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் ஓர் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. அரசை எதிர்த்து தீவிரமாக செயல்பட்ட குழுக்களில் ஒன்று ஜபத் அல்-நுஸ்ரத். இந்தக் குழுதான் அல்-அசாத் அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்தக் குழுவுடன் அல்-கொய்தாவும் இணைந்து, சிரிய அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டது. போராட்டக்குழுக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டதால், ஆயுதங்களையும், பண உதவிகளையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கும் அமைப்புகளும் வழங்கத் தொடங்கின. துருக்கியும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான தீர்வுகளையே அணுகியது.

சிரியாவில் இரான் படை

அதே நேரம் சிரியாவின் அல்-அசாத் அரசுக்கு ஆதரவாக, அப்போது சிரியாவில் ராணுவத் தளங்களைக் கொண்டிருந்த ரஷ்யா களமிறங்கியது. இவர்களுடன் இரானின் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவும் இணைந்துகொண்டது. போர் நடந்துக்கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவளித்த நாடுகள், ‘ஆயுதமேந்திய எதிர்ப்பில் ஜிஹாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறிவிட்டனர்’ எனக்கூறி உதவிகளை நிறுத்தினர். அதேநேரம், போராட்டத்தை மட்டும் முன்னெடுக்கும் குழுக்களுக்கு உதவுவதை தொடர்ந்தன.

மேலும், அமெரிக்கா, சிரியாவில் குர்ஷித் தலைமையில், ‘சிரிய ஜனநாயகப் படைகள் (SDF)’ என்று அழைக்கப்படும் சிறப்புப் படைகளை நிறுவி நிறுத்தியது. அப்போதும் அரசுக்கும், போராளிக்குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு, ஜபத் அல்-நுஸ்ரத் குழுவின் தலைவர் முஹம்மது அல்-ஜவ்லானி, அல்-கொய்தாவுடனான கொள்கை முரணை பகிரங்கமாக பேசி, ஜபத் அல்-நுஸ்ரா அமைப்பை கலைத்தார். மேலும், அப்போதே புதிய குழு ஒன்றையும் உருவாக்கினார். அந்தப் புதியக் குழுக்களுடன், மற்றக் குழுக்களும் இணைந்ததின் விளைவாக, ‘ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம்‘ எனும் பெரும் கிளர்ச்சியாளர் குழு உருவானது.

சிரியா

சிரியாவின் முக்கிய நகரங்களாகக் கருதப்படும் அலெப்போ, ஹமா போன்ற நகரங்களை கிளர்ச்சியாளர் குழு கைப்பற்றியது. அப்போது, ரஷ்யாவின் உதவியுடன், வான்வழித் தாக்குதல் மூலம், மீண்டும் அந்த நகரங்கள் அல்-அசாத் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதே நேரம், இந்தப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பட்டில் கொண்டுவர வேண்டும் எனக் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முயன்று வந்தனர். சிரியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான இட்லிப், கிளர்ச்சியாளர்கள் (ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம்) கட்டுப்பாட்டில் இருக்கிறது. இட்லிப் பகுதியில் சிறு அரசையே நடத்தி வரும் கிளர்ச்சியாளர் குழுவுக்கும் அரசுக்கும் அடிக்கடி மோதல் நடந்து வரும் சூழலே நிலவி வந்தது.

எனவே, இந்த நகரம் எப்போதும் போர்க்களமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில்தான், அரசை ஆதரிக்கும் ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கும் துருக்கியும் இணைந்து 2020-ம் ஆண்டு, போர் ஒப்பந்தத்தை முன்னெடுத்தன. இந்த ஒப்பந்தம் அல் – அசாத் அரசுக்கு சாதகமானதாகவே கருதப்பட்டது. ரஷ்யாவின் உதவியும், இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் ஆதரவும் அதற்கு முக்கியக் காரணங்களாக கருதப்பட்டது.

சிரிய ஜனநாயகப் படை வீரர்

இட்லிப்பை ஆட்சி செய்துவரும் ‘ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம்’ அமைப்பு, தொடர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் நெருக்கடியை சந்தித்து வந்தது. அதனால், போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், அந்த அமைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. மேலும், இந்தக் கிளர்ச்சிக்குழு மற்றப் போராட்டக்குழுக்களுடன் தொடர் முரண்பாடுகளாலும், இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்ற அழுத்தமான முன்னெடுப்புகளாலும், அமைப்புக்குள்ளேயே உட்பூசல் அதிகரித்தது.

அதனால், சிரியா அரசின் மீது நேரடித் தாக்குதல்களையோ, அல்-அசாத்தின் கட்டுப்பாட்டை மீறுதவதையோ இந்த அமைப்பு முன்னெடுக்கவில்லை. எனவே, கடந்த 4 ஆண்டுகளாக சிரியாவில் சற்று அமைதியா சூழல் நிலவியது. ஆனால், தற்போது பாலஸ்தீனப் பிரச்னையில், அல்-அசாத் அரசுக்கு உறுதுணையாக இருந்த ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல், இரானில் ஹிஸ்புல்லா தலைவர் கொலை போன்ற சூழல்களை ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

சிரியா

கடந்த புதன் கிழமை அலெப்போ மாகாணத்தில் கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி, அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றனர். இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத அல்-அசாத் அரசின் ராணுவம், பின்வாங்கியிருக்கிறது. தொடா்ந்து உறுதியாக முன்னேறி வந்த கிளா்ச்சிப் படையினா், அலெப்போ நகரை முற்றிலுமாகக் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு ரஷ்ய வான்வழித் தாக்குதலின் உதவியுடன், அரசுப் படையினரால் மீட்கப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த அலெப்போ மாகாணம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்துள்ளது.

இது தவிர, கிளா்ச்சிப் படையினா் மேலும் தாக்குதல் நடத்தி தலைநகா் டமாஸ்கஸை நோக்கி முன்னேறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான், ரஷ்யா அல்-அசாத் தலைமையிலான அரசுக்கு உதவ முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது. இது முழுமையானப் போராக முன்னெடுக்கப்பட்டால், ஆசுவாசத்தில் இருக்கும் சிரியா மீண்டும் திணறத் தொடங்கிவிடும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், ‘சிரியாவில் கடந்த 12 ஆண்டுகாலப் போரால் 1,43,350 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஆய்வு முடிகளின் அடிப்படையில் பார்த்தால், 1,63,537 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் குறைந்தது 27,126 பேர் குழந்தைகள். இறந்தவர்களில் சுகாதாரம், உணவு, மருந்து, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள்கூட கிடைக்காமல் இறந்தவர்களும் அடக்கம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சிரியா அகதிகள் முகாம்

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு (SOHR), “அரசால் நடத்தப்படும் சிறைகளின் சித்திரவதையால் 55,000 குடிமக்கள் இறந்திருக்கிறார்கள். 12 ஆண்டுகாலப் போரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையாக எண்ணிக்கை 6,13,400 க்கும் அதிகமாக இருக்கும். இதில் 1,39,609 இறப்புகளுக்கு சிரிய அரசும், அதன் கூட்டாளிகளும் பொறுப்பு” எனக் குறிப்பிடுகிறது.

6.8 மில்லியன் மக்கள் உள்நாட்டிலே அகதிகளாக சிக்கித் தவிக்கின்றனர். 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கூடார முகாம்களில், அடிப்படை வசதிகளற்ற இடங்களில் வாழ்கின்றனர்.

சிரியாவின் அண்டை நாடுகளான லெபனான், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளில் 5.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்திய வரலாற்றில், மிகப் பெரிய அகதிகள் வெளியேற்றத்தை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறியது சிரியா விவகாரத்தில்தான். 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில், சிரியாவிற்குள் உள்ள 15.3 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்திருந்தது. போர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை 12 மில்லியன் மக்களுக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாத சூழலில்தான் சிரியா மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.