“20 கசையடி; கோர்ட் வளாகத்தில் வைத்தே தண்டனை” – ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை- 3

பெரும்பாலான அமெரிக்க குடும்பங்களைப் போலவே, மிஷாவ்வின் குடும்பமும் இறுக்கமான கிறிஸ்தவ மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன. அம்மாவின் விருப்பப்படி, மூத்த மகன் லைட்ஃபுட் மிஷாவ் இறை சேவை செய்ய வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்பட்டதை புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனால் நாத்திக மனப்பான்மையோடு கறுப்பர்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்ற சிந்தனை எப்படி மிஷாவ்வின் உள்ளத்தில் முளைவிடத் தொடங்கியது? அதை அறிந்து கொள்ள ஒரு பத்திரிகையாளராக நான் பரபரத்தேன். அதை நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்தேன்.

வாசகருடன் உரையாடும் ‘பேராசிரியர்’ லூயிஸ் மிஷாவ்

“புத்தகம் விற்பனை செய்யும் தொழிலில் ஒரு கறுப்பராக கொடி கட்டிப் பறந்துள்ளீர்கள். வியாபாரம் செய்வதற்கான முன் அனுபவம் இருந்ததா? விற்பனையாளராவதற்கான உந்துதலை எங்கிருந்து பெற்றீர்கள் மிஷாவ்?”

இந்தக் கேள்வி அவர் முகத்தில் பிரகாசத்தை வரவழைத்தது. சிறு வயது வாழ்க்கையை நினைவுபடுத்திப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பால் அவர் மனம் மகிழ்ந்தார் எனப் புரிந்து கொண்டேன்.

“எங்க அப்பாவோட மீன் கடையில நான் வேலை பார்த்திருக்கிறேன். நல்லா பாட்டுப் பாடி மீன் வியாபாரம் பண்ணுவேன். வாடிக்கையாளர்கள் என் பாட்டை ரசித்துக் கேட்டு என்னைப் பாராட்டுவார்கள். அந்த அனுபவம் என் உள்ளத்தில் படிந்ததால், பிறர் கேலி செய்வார்களோ என்ற கூச்சம் அப்போதே என்னை விட்டுப் போய் விட்டது. பரபரப்பான சாலையில் நூற்றுக்கணக்கானோர் போய் வந்துகொண்டிருக்கும் சந்தைப் பகுதியில் கூவிக் கூவி புத்தகம் விற்பனை செய்ய அந்த மீன் கடை அனுபவம் எனக்கு உந்துதலைக் கொடுத்திருக்கணும்… கல்வி வாசமே அறியாத கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஒரு கறுப்பன், அதுவும் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டாத ஒரு கறுப்பன் தெருவில் கூவிக் கூவி புத்தகம் விற்பனை செய்வதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்… பிரமாண்டமான கடையாக வளர்ச்சியடைந்த பிறகு, அந்த வளர்ச்சியை திரும்பிப் பார்க்கும் போது, அது இப்போது சாதாரணமாக தெரியலாம், ஆனால் அன்று? நினைத்துப் பார்க்க பார்க்க எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.

அப்பாவோட மீன் கடையில வேலை…

வெள்ளையர்களின் இனப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்த நாட்களில், ஒரு கறுப்பன் புத்தகம் விற்பனை செய்யலாம் என்ற தைரியத்தை எனக்கு மானசீகமாக கொடுத்தது என்னோட அப்பாதான். ஆமாம்… அவரு மீன் கடையை ஒட்டி ஒரு மதுபான விடுதி நடத்தினாரு. அங்க வர்ற வெள்ளை வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான மது வகைகளை விற்பனை செஞ்சோம். ஒரு நாள், அந்த மதுபான விடுதிக்கு கீழ உள்ள குடோன்ல, பெரிய பீப்பாய்ல இருந்து சாராயத்தை எடுத்து வரச் சொன்னாரு. நானும் அண்ணனும் கீழ குடோனுக்குப் போனோம். கையில வேற வேற பிராண்ட் பாட்டில்கள், ஆனா பீப்பாய்ல இருந்தது ஒரே சரக்கு. எல்லா பாட்டிலிலும் அந்த ஒரே சரக்கை நிரப்பி கொண்டு வந்து கொடுத்தோம். வெள்ளைக்காரன் குடிச்சிட்டு ஒவ்வொரு பிராண்ட் சரக்கும் சூப்பரா இருக்குன்னு அப்பாவ பாராட்டிட்டு போனாங்க. அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கு. இதெல்லாம்தான் ஒரு விற்பனையாளனா நான் உருவாகக் காரணும்னு நினைக்கிறேன்.”

“வியாபாரம் செய்வதற்கான உந்துதல் உங்கள் தந்தை வழி உங்களுக்கு கிடைத்துள்ளது. சரிதான்… ஆனால், புத்தகம் விற்பனை செய்ய வேண்டும் என்பதை எப்போது தீர்மானித்தீர்கள். கறுப்பர்கள் மேம்பாடு குறித்த சிந்தனை சின்ன வயதிலேயே ஏற்பட்டு விட்டதா? அல்லது புத்தகங்கள் வாசித்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டீர்களா மிஷாவ்?” நேரடியாகக் கேள்வியைக் கேட்டேன்.

நேரடியான காரணம் இருக்க முடியுமா?

“புத்தக விற்பனைக்கு வந்தது இருக்கட்டும். அதுக்கு ஒரு காரணம் வேணுமில்ல. நேரடியான காரணம் இருக்க முடியுமா? வெள்ளையன் மீதான வெறுப்புத்தான் என்னை இந்த இடதுக்கு கொண்டு வந்தது. அந்தச் சிந்தனை எப்படி வந்ததுன்னு சொல்றதுக்கு முன்ன, வெள்ளையனுக்கு எதிரா என்னென்ன அழிச்சாட்டியம் சின்ன வயசிலேயே பண்ணிருக்கேன்னு சொன்னா கேப்பீங்களா இவா மேடம்?” இரண்டு கைகளையும் நீட்டி என்னிடம் அனுமதி கேட்டார். சிறு வயது நினைவுகளால் அவர் குதூகலமாவதை உணர்ந்தேன். அவர் உற்சாகமாக இருந்தால்தான் இந்த நேர்காணலை நேர்த்தியாக முடிக்க முடியும் என்பதால், அவரை சங்கடப்படுத்த விரும்பாமல் தலையை அசைத்தேன். அந்தளவுக்கு மிஷாவ்வின் உடல்நிலை நலிவுற்றிருந்தது.

“என்னோட அண்ணனுக்கு சின்ன வயசுலயே திருமணம் முடிஞ்சிருச்சு. அவன் பொறுப்பான புள்ளையா வளர்ந்தான். நான் அப்படி இல்ல. கழிசடையாத்தான் வளர்ந்தேன்.

அப்போ எனக்கு 13 வயசிருக்கும். பசங்களோட சேர்ந்து வெள்ளைக்காரங்க பண்ணையில பெர்ரி பழம் பறிப்போம். ஒரு கிலோ பெர்ரி பழம் பறிச்சுக் கொடுத்தா 2 சென்ட் கிடைக்கும். ஒரு நாளைக்கு பத்து கிலோ பறிச்சிடுவோம். 20 சென்ட் வச்சிருக்கும் நாங்க பெரிய பணக்காரர்களைப் போல நினைத்துக் கொள்வோம். ஐந்து நாளைக்கு இப்படி உழைத்தால்தான், ஒரு டாலரை நாங்க பார்க்க முடியும். ஒரு நாள் அந்தப் பண்ணையைச் சுற்றிப் பார்த்தேன். அந்த வெள்ளைக்காரன் பயங்கர வசதியா இருப்பது தெரிந்தது. சோளம், தக்காளி, முட்டைக்கோசுன்னு அந்த பண்ணை முழுவதும் காய்கறிகள் மூட்டை மூட்டையா கிடந்துச்சு. அதேமாதிரி, ஆடு, மாடு, கழுதை, குதிரை, கோழி, பன்னி… இன்னும் என்னென்னவோ மிருகங்கள் இருந்துச்சு, அதுக்குலாம் எனக்கு பேரு தெரியல. இவ்வளவு சொத்தும் இந்த வெள்ளையனுக்கு எப்படி வந்தது? எல்லாம் என்னைய மாதிரி சின்னப் பசங்க பறிச்சுக் கொடுக்குற பெர்ரி பழத்துல இருந்து சம்பாதிச்சதுதான்.

கசையடி கிடைச்சா பையன் திருந்திடுவான்னு அப்பா எதிர்பார்த்தாரு…

அப்படியே போய் குடோன்ல இருந்த ஒரு சோளம் மூட்டையை தூக்கினேன். என்னால தூக்க முடியல. நாமதான முதல் அடியை எடுத்து வைக்கணும், ஜீசஸ் அதத்தான எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தாரு. அதனால, ஒரு சாக்குப் பைல, அங்க இருந்து மூணு பன்னிக்குட்டிகளை எடுத்துக்கிட்டு நைஸா நழுவி, எதிர்ல நின்னுக்கிட்டிருந்த கூட்ஸ் ட்ரெயின்ல ஏறி ஒளிஞ்சிக்கிட்டேன். அடுத்த ஸ்டாப்ல அந்த ட்ரெயின் நின்ன உடனே இறங்கி, அங்க இருந்த கறுப்பர்கள்ட்ட மூணு பன்னிக்குட்டிகளையும் தலா ஒன்றரை டாலருக்கு வித்திட்டேன். இரண்டு மணி நேரத்துல நான்கரை டாலர் சம்பாதிச்சி, ஒரு பிசினஸை கத்துக்கிட்டேன். இனிமே பெர்ரி பறிக்கிறதுப் பதிலாக, பன்னிகளைத் திருடணும்…” “ஓஹோ… சின்ன வயசுல விளையாட்டாக சைக்கிள் திருடிய பழக்கம் ஒரு தொழிலாகவே மாறிடிச்சா? பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவானே… மிஷாவ் மாட்டினானா?”

“ஆமா, ஒரு நாள் மாட்டிக்கிட்டேன். திறமையா என்னோட திருட்டுத் தொழில் போனது. ஆனா, அடுத்த வருஷமே பிடிச்சிட்டாங்க. ஒரு மூட்டை நிலக்கடலை திருடினதுக்கு, 20 கசையடி கொடுக்கணும்னு ஜட்ஜ் தீர்ப்பெழுதிட்டாரு. கோர்ட் வளாகத்துலயே வச்சு கசையடி கிடைத்தது. இந்தத் தண்டனை என்னை திருத்தும்னு அவங்க நம்பினாங்க. எங்கப்பாவும் நம்பினாரு.

ஏன்னா, எங்க கடைக்கு சரக்கு கொடுக்கும் சில வெள்ளைக்காரங்க வீட்டுல இருந்தும் கால்நடைகளை நான் திருடினேன். அதனால, கசையடி கிடைச்சா பையன் திருந்திடுவான்னு அப்பா எதிர்பார்த்தாரு. ஆனா, நான் திருந்தியிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா இவா?” மிஷாவ் என்னைப் பார்த்துக் கேட்டதும், ஒரு கதை சொல்லியின் கூரார்வம் அவரிடமிருந்து வெளிப்பட்டதைக் கண்டேன்.

பக்கங்கள் புரளும்