மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடந்த வாரம் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். சொந்த ஊரில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே மும்பை தானேயில் தனது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமையே திரும்பிவிட்டார். ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ரத்த அழுத்தம் மற்றும் காய்ச்சல், தொண்டையில் வலி என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலையில் ஏக்நாத் ஷிண்டே தானேயில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை சோதித்த டாக்டர்கள் முழுமையான உடல் பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். எனவே அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார். இதனால் அமைச்சரவை பதவியேற்க இருக்கும் இடத்தை பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்கள் இன்று பார்வையிட்டனர். சிவசேனா சார்பாக குலாப்ராவ் மற்றும் சஞ்சய் சிர்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை பதவியேற்கும்போது அதில் பங்கேற்பாரா என்பது மர்மமாகவே இருக்கிறது. புதிய முதல்வர் யார் என்று பா.ஜ.க மேலிட பார்வையாளர் ருபானியிடம் கேட்டதற்கு, இரண்டு நாளில் தெரிய வரும் என்று தெரிவித்துவிட்டார். சிவசேனாவில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை அமைச்சரவை பதவியேற்ற போது சிவசேனாவில் அதிகமானோருக்கு பதவி கிடைக்கவில்லை. அவ்வாறு பதவி கிடைக்காதவர்கள் இப்போது எப்படியும் அமைச்சர் பதவியை வாங்கிவிடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.