அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கவிருக்கிறார். அதே நேரம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதல் தொடங்கியபோது 251 பணயக்கைதிகளை ஹாமஸ் அமைப்பினர் கைது செய்துச் சென்றதாகவும், அவர்களில் பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சிலர் அங்கு பணயக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்தப் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். 10,000 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என பாலஸ்தீன ஊடங்கங்கள் குறிப்பிடுகின்றன. உலக நாடுகள், ஐ.நா சபை எனப் பல்வேறு தரப்பின் போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இருநாடுகளுக்கு மத்தியில் நடந்துவரும் போர் நிறுத்தப்படவில்லை. இதற்கிடையில், சர்வதேச நீதிமன்றம், இஸ்ரேல் நடத்திவரும் போரில் மனித உரிமை மீறல்களும், போர் குற்றங்களும் தொடர்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டு, கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாலஸ்தீனத்துக்கு எச்சரிக்கை விடும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அமெரிக்காவின் அதிபராக நான் பெருமையுடன் பதவியேற்கும் நாளான ஜனவரி 20 -க்கு முன்னதாக, பாலஸ்தீனத்தில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அப்படி நடக்காவிட்டால், அதற்குப் பொறுப்பாளர்கள் பெரும் விளைவை, நரக வேதனையை சந்திக்க வேண்டிவரும். அமெரிக்காவின் நீண்ட வரலாற்றில் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பே ட்ரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்திருந்தது குறிப்பிடதக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
