தான் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதியான மதுரை கிழக்குத் தொகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார் அமைச்சர் பி.மூர்த்தி.

“2026-ல் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதிலிருந்தே மக்களைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்” என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் வைத்தாலும், அது வெளியில் கேட்கவில்லை. காரணம், கட்சி வேறுபாடில்லாமல் அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதுதான் என்கிறார்கள்.
மதுரையில் பிரமாண்ட விழாக்களை நடத்தி முதலமைச்சர், துணை முதலமைச்சரால் பாராட்டப்பட்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைப் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார். பல பகுதிகளில் கறி விருந்து நிகழ்ச்சி, மருத்துவ முகாம்களை நடத்தியவர், தான் வெற்றி பெற்ற கிழக்குத் தொகுதியில் ஒன்றரை லட்சம் குடும்பத்தினருக்கும் நலத்திட்ட உதவி என்ற பெயரில் பரிசுப்பொருட்களைக் கொடுக்க திட்டமிட்டு தற்போது வழங்கி வருகிறார்கள்.

நான்கு அடுக்கு எவர் சில்வர் டிபன் கேரியர், இனிப்பு காரம் அடங்கிய பாக்கெட்டுடன், மு.க. ஸ்டாலின், உதயநிதி படம் போட்ட புத்தாண்டுக்கான காலண்டர் என ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்படுகிறது.
திருப்பாலை, சூர்யா நகர், கண்ணநேந்தல், ஆனையூர், மஞ்சம்பட்டி, மாங்குளம், திண்டியூர், சக்குடி, வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் மூர்த்தியே வீடு வீடாகச் சென்று பரிசுப்பொருட்களை வழங்கினார்.
ஒன்றரை லட்சம் டிபன் கேரியர்களை கொண்ட பரிசுப் பொருட்களைக் கட்சி நிர்வாகிகள் பொறுப்பேற்று வழங்கி வருகிறார்கள். எந்த வீடும் விட்டுப் போய்விடக்கூடாது என்பதைக் கண்காணிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வருகின்ற காலங்களில் மேலும் பல ஆச்சரிய பரிசுகள் கிடைக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/MaperumSabaithanil
