முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள முதுநிலைக் கோயில்களில் இக்கோயில் முதன்மையானது. மாதந்தோறும் இக்கோயிலில் உண்டியல்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு, பக்தர்களின் காணிக்கை உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல், திருக்கோயிலில் உள்ள தெய்வானை யானை பராமரிப்பு உண்டியல், அன்னதான உண்டியல் என, 30-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் உள்ளன.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தற்போது நடைபெற்று வரும் ராஜ கோபுரத் திருப்பணிக்கு எனக் கூடுதலாக ஒரு உண்டியலும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இம்மாத உண்டியல் எண்ணும் பணி திருக்கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் அருள் முருகன், திருக்கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஞானசேகரன், திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பதிணென் சித்தர் மடக் குருகுல வேதபாடசாலையின் உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் தூத்துக்குடி, ஸ்ரீ ஜெயமங்களா ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழுவினர், திறக்கப்பட்ட உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட இந்த உண்டியல் காணிக்கைகளில் முதல் நாளில் 3,76,38,927 ரூபாய் உண்டியல் காணிக்கையாகவும், இரண்டாம் நாளில் 30,93,985 ரூபாய் என மொத்தம் 4,07,32,912 ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது. மேலும், 1,908 கிராம் தங்கமும், 21,100 கிராம் வெள்ளியும், 26,100 கிராம் பித்தளையும் காணிக்கையாகப் பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளன. இதில் எந்த மாதமும் இல்லாத அளவுக்கு இந்த மாதம் வெளிநாட்டுக் கரன்சிகள் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.
குறிப்பாக இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும், அரபு நாடுகளான சவூதி மற்றும் குவைத் நாடுகளிலிருந்தும் கரன்சிகள் உண்டியலில் வருவாயாகக் கிடைத்துள்ளன. மொத்தமாக 1,234 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. இம்மாதம் இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
யாகசாலை பூஜை தொடக்கம் முதல் திருக்கல்யாணம் வரை தொடர்ந்து 7 நாட்கள் நடந்த இந்த விழாவில் நடைபெற்றது. செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…