‘மீண்டும் புதிய சர்ச்சையில் அதானி’ என உலக அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது இந்தியா. ஏற்கெனவே, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் குற்றச் சாட்டுகள் புயலைக் கிளப்பி, அதானி குழும பங்குகளில் முதலீடு செய்திருந்தவர் களின் பல லட்சம் கோடி ரூபாயை ஸ்வாஹா செய்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் பிரளயத்தைக் கிளப்பியும்கூட, மோடி சர்க்கார் அசைந்து கொடுக்கவில்லை. அதானியும் எதுவுமே நடக்காததுபோல், வழக்கமான பணிகளில் மூழ்கினார்.
இம்முறை அமெரிக்க நீதிமன்றமே அதானி உட்பட அவருடைய குழுமத்தினர் மீது குற்றப்பத்திரிகை வாசித்து, பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது. ‘‘அதானி கிரீன் நிறுவனம் சோலார் மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்தியாவிலிருக்கும் தமிழ்நாடு, தெலங்கானா, காஷ்மீர் எனப் பல மாநில அரசுகளின் உயர் மட்டத் திலிருப்பவர்களுக்கு கோடி கோடியாக லஞ்சம் கொடுத்துள்ளது. இப்படியெல்லாம் முறைகேடாக ஈடுபட்டு குழுமப் பங்குகளின் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது அதானி குழுமம். இது தெரியாமல், ‘அதானி பங்குகள் நன்றாகத்தானே வர்த்தகமாகின்றன’ என்று இடைப்பட்டக்காலத்தில் 1.35 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்’’ எனக் குற்றம் சாட்டியிருக்கிறது அமெரிக்கா.
இவ்விவகாரம் வெளியானதும், அதானி பங்குகள் 15% முதல் 32% வரை வீழ்ச்சி கண்டு, முதலீட்டாளர்களுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டன.
“அதானிகள், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார்கள் என்றா நினைக்கிறீர்கள், எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்பதுதான் உண்மையில் நடக்கவும் செய்கிறது. ஆம்… வழக்கம்போலவே மோடி சர்க்கார், மௌன ராகம் இசைக்க… அதானி தலையாட்டி ரசித்துக்கொண்டுள்ளார்.
‘உலகிலேயே மிகவும் கட்டுப்பாடான, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை… இந்திய பங்குச் சந்தை; மிகக் கடுமையும் கண்காணிப்பும் கொண்ட அமைப்பு செபி’ (பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அமைப்பு) இப்படியெல்லாம் அடிக்கடி பெருமை அடித்துக்கொள்கிறோம். ஆனால், கள நிலவரம் வேறாகத்தான் இருக்கிறது. அதானி நிறுவனத்தின் மீதும், செபி மீதும், செபி தலைவர் மீதும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
இதனால்… அதானிக்கோ… அரசாங்கத்துக்கோ… அதிகாரிகளுக்கோ எந்த இழப்பும் இல்லை. நம்பி முதலீடு செய்திருக்கும் லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்களுக்குதான் இழப்பே. ஒரு பங்கு சார்ந்து வெளியாகும் புகார்கள், எதிர்மறைச் செய்திகள் சிறு முதலீட்டாளர்களின் கவனத்துக்கு வந்து, அவர்கள் ரியாக்ட் செய்வதற்குள்ளாகவே, ‘நஷ்டம்’ முந்திக்கொண்டுவிடுகிறது.
இப்படியெல்லாம் ஏதும் நடக்கக் கூடாது என்றுதான் செபி போன்ற அமைப்புகளை பலமிக்கதாக, கட்டமைத்து வந்துள்ளோம். ஆனால், இன்னமும்கூட ஓட்டைகள் என்றால்… பாரதத்தின் நிலை பரிதாபமே!
– ஆசிரியர்