South Korea: கட்டாய ராணுவ பணியைத் தவிர்க்கத் திட்டம் போட்ட இளைஞர்; நண்பரோடு சிறையிலடைத்த அரசு!

தென் கொரியாவில், கட்டாய ராணுவ பணியிலிருந்து தப்பிக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கிய இளைஞரைப் பிடித்து அரசு சிறையிலடைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தென் கொரியாவைப் பொறுத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

தென் கொரியா

பிரபல தென் கொரிய BTS குழு உறுப்பினர் ஜே ஜோக் கடந்த அக்டோபரில் கட்டாய ராணுவப் பணியை நிறைவுசெய்திருந்தார். இவ்வாறிருக்க, இந்த கட்டாய ராணுவ பணியில் நாட்டமில்லாத 26 வயது தென் கொரிய இளைஞர், இதிலிருந்து தப்பிக்கத் தனது நண்பரிடம் ஒரு யோசனையைக் கேட்டிருக்கிறார். அவரோ, உட்கொள்ளும் தண்ணீர் மற்றும் உணவின் அளவை இரட்டிப்பாக்கி உடல் எடையைக் கூட்டுமாறு கூறியிருக்கிறார்.

அதன்படி, ராணுவ உடற்தகுதித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக தனது உணவை இருமடங்காகப் பெருக்கி தனது உடல் எடையை 120 கிலோவாக அதிகமாக்கினார். இது, ராணுவ உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமலிருப்பதற்கான எடையாகவும் அமைந்தது. பின்னர், இந்த விவரம் தெரியவந்து சியால் நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், அவரின் நண்பர் தான் இத்தகைய யோசனையைப் பரிந்துரைத்தார் என்று தெரியவர, அவரோ தான் இதை விளையாட்டாகச் சொன்னதாக விளக்கினார்.

சிறை

இருந்தாலும், அவரின் நண்பருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இந்த செயலில் ஈடுபட்ட இளைஞருக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தென் கொரியா-வில் இதுபோன்ற விஷயம் நடப்பது இதுவொன்றும் முதல்முறை அல்ல. ஏற்கெனவே 2018-ல் கல்லூரி மாணவர்கள் சிலர் இந்த கட்டாய ராணுவப் பணியைத் தவிர்க்க வேண்டுமென்றே உடல் எடையைக் கூட்டிய சம்பவங்கள் நடந்திருக்கிறது.