வேளாண்மை உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்காகவும், மனிதர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்காகவும் அமெரிக்க நிறுவனங்கள் ட்ரோன்களை விட பெரிய தானியங்கி விமானங்களை உருவாக்கி வருகின்றன.
இந்த வகையில் ஹெக்டர் சூ (Hector Xu) என்பவர் 2021 ஆம் ஆண்டு ரோட்டர் டெக்னாலஜிஸ் ( Rotor Technologies) என்ற நிறுவனத்தை அமெரிக்காவில் தொடங்கி, ஆளில்லா வானூர்திகளை உருவாக்கி வருகிறார்.
மாசசூசெட்ஸ்(Massachusetts) நிறுவனத்தில் ஹெலிகாப்டர் பயிற்சியின் போது இரவில் அவர் எதிர்க்கொண்ட மோசமான அனுபவங்களினால், முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியின் முடிவில், ஆளில்லா வானூர்திகளை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததாக கூறியுள்ளார். மேலும் ரோட்டார் நிறுவனம் ஸ்ப்ரேஹாக்ஸ் (Sprayhawks) என்றழைக்கப்படும் 2 தானியங்கி வானூர்திகளை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் 20 ஸ்ப்ரோஹாக்ஸ் தானியங்கி வானூர்திகளை சந்தையில் கொண்டு வருவதற்கான இலக்கும் வைத்துள்ளது.
பேரழிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் கடலில் உள்ள எண்ணெய் கிணறுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான வானூர்திகளையும் உருவாக்கி வருகிறது. இந்த வானூர்திகள் காட்டுத் தீயை அணைக்கவும் பயன்படுத்தப்படலாம்.
தற்போது இந்த நிறுவனம் வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் அளித்து பரந்த நிலப்பரப்பில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை தெளிப்பதற்கான ஆளில்லா வானூர்திகளை உருவாக்கி வருகிறது.
இந்த வானூர்திகளின் முதன்மையான நோக்கம் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். ஏனெனில் விளைநிலங்களில் உரங்கள் தெளிக்க பயன்படுத்தப்படும் கிராஃப்ட் டஸ்டர்ஸ் (Crop dusters) என்றழைக்கப்படும் சிறப்பு விமானங்கள் 240 கிலோ மீட்டர் வேகத்தில் 3 மீட்டர் உயரத்தில் பறக்கின்றன. இதனால் மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் மீது மோதி ஒவ்வொரு ஆண்டும் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு பராமரிக்கப்படாத வானூர்திகளும் விமானிகளின் குறைவான தூக்கமுமே காரணமாகும்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் 2014-ம் ஆண்டு அறிக்கையின்படி 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையில் 800க்கும் மேற்பட்ட வேளாண் விமான விபத்துகளும், அதில் 81 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தேசிய வேளாண் விமான போக்குவரத்து சங்கத்தின் அறிக்கையின்படி 2014-ம் ஆண்டு முதல் இந்த மாதம் வரை 640 விபத்துகளும், அதில் 109 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வேளாண் துறையின், வேளாண் சேவைக்கான ஆராய்ச்சி பொறியாளர் டேன் மார்ட்டின் ( Dan Martin),
“இது மிகவும் ஆபத்தான தொழிலாகும், விமானிகள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே தங்களுக்கான மொத்த பணத்தையும் ஈட்ட முடிவதால், ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறக்கின்றனர். மேலும் இந்த ஆண்டு மட்டும் 10,000 ட்ரோன்கள் விற்கப்பட உள்ளது. இது ஒரு அதீத வளர்ச்சியடைந்து வரும் சந்தையாக உருவாகியுள்ளது. ட்ரோன்களை விட விமானங்களினால் அதிக நிலப்பரப்பில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க முடியும் என்பதனால், ஆளில்லா வானூர்தி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது” என்கிறார்.
ரோட்டார் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள், மோசமான நிகழ்வுகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு ரிமோட் பைலட் (Remote pilot) கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆளில்லா வானூர்திகளில் 6 தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன.
தரைக்குழு வானூர்தியுடன் தொடர்பை இழந்தால், அதனால் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கும் வகையில் ரோட்டாரில் ஒரு அமைப்பும் உள்ளது. இதன் மூலம் இயந்திரம் அணைக்கப்படுவதையும், வானூர்தி கட்டுப்படுத்தப்பட்டு தரையிறக்கவும் முடியும் என்பதை கணினி உறுதிப்படுத்துகிறது.
வணிக நோக்கங்களுக்கு வானூர்திகள் பறப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரசின் அனுமதியை பெறுவது மிக முக்கியமானதாகும்.
அனுமதி பெற்றவுடன் அமெரிக்கா மற்றும் பிரேசிலின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாதனங்களை உருவாக்க வேண்டியது, ஹெக்டார் சூ சந்திக்கவிருக்கிற சவாலாகும்.