Rain Alert: நாளை வலுப்பெறும் புயல்… 29-ம் தேதி வரை கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?!

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், அதனால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலசந்திரன், “நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இது தொடர்ந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும்.

புயல்

அதைத்தொடர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி அது நகரக்கூடும். இதனால், தமிழக கடலோரப் பகுதிகளில் மழை தொடரக்கூடும். கனமழையைப் பொறுத்தளவில் அடுத்த 24 மணிநேரங்களில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

27-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் முதல் புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்

29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்காக எச்சரிக்கையைப் பொறுத்தளவில் 30-ம் தேதிவரை மீனவர்கள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MaperumSabaithanil