எடுபடாமல் போன அனுதாபம், துரோகம்; உத்தவ், சரத் பவார் சாம்ராஜ்ஜியத்தை சரித்த ஷிண்டே, அஜித் பவார்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இத்தோல்வி உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 2022-ம் ஆண்டு உடைந்த சிவசேனா அணிகள் இரண்டும் 51 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 36 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெறும் 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளில் 50 சதவீதம் மும்பையில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 15 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இதே போன்று இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் 35 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 27 தொகுதிகளில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதில் மேற்கு மகாராஷ்டிராவில் அஜித் பவாருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிட்டி இருக்கிறது. மேற்கு மகாராஷ்டிராவில் 9 தொகுதிகளில் அஜித் பவார் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

அஜித் பவார் கட்சியில் முக்கிய தலைவர்களாக கருதப்படும் சகன் புஜ்பால், தனஞ்சே முண்டே, திலிப் வல்சே பாட்டீல் ஆகியோர் வெற்றி பெற்று இருக்கின்றனர். அஜித் பவார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட யுகேந்திர பவாரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சரத் பவார் உணர்ச்சிப்பூர்வமாக தேர்தல் பிரசாரம் செய்தார். இத்தேர்தலில் அனுதாபம், துரோகம் என எதுவும் எடுபடாமல் போனது. உத்தவ் தாக்கரே தேர்தல் பிரசாரத்தில் மஹாயுதி அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவோம் என்று சொன்னது எதிர்மறையான விளைவுகளை தேர்தலில் ஏற்படுத்தி இருக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் யாரது அணி உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என்பதை நிரூபித்து இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இத்தேர்தல் தோல்வி குறித்து உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ”கொரோனா சமயத்தில் குடும்பத் தலைவனாக நான் சொல்வதைக் கேட்ட மகாராஷ்டிரா என்னிடம் இப்படி நடந்து கொள்ளும் என்று நம்ப முடியவில்லையே… நான்கு மாதங்களில் எப்படி அவர்களால் (ஆளும் கூட்டணி) இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது? எங்கே மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்? அத்தகைய முடிவுக்காக?. மகாராஷ்டிரா மக்கள் நாங்கள் சொல்வதை கேட்டார்கள். நரேந்திர மோடி, அமித் ஷாவின் பேச்சை கேட்கவில்லை. காலி இருக்கைகள் எப்படி ஓட்டாக மாறியது. தேர்தல் முடிவுகள் சுனாமி வந்தது போன்று இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா ஒரு கட்சிதான் இருக்கும் என்று சொன்னார். அவர் சொன்னதை நிரூபிக்கும் விதமாக ஒரு நாடு ஒரு கட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.க எதிர்க்கட்சிகளை அழிக்க முனைப்பாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அரசு இனி எந்த ஒரு திட்டத்தையும் ஒப்புதலுக்காக அவையில் தாக்கல் செய்யவேண்டியதில்லை. மக்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம்” என்றார். சிலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றதாக கூறுவதை உத்தவ் தாக்கரே ஏற்கவில்லை. “மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்றுக்கொண்டால் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. தேர்தலுக்கான தோல்வி குறித்து ஆய்வு செய்வோம். தோல்விக்காக அதிருப்தியடையமாட்டோம். விரக்தியடையமாட்டோம். மகாராஷ்டிராவின் உரிமைக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என்றார்.