Modi: `காங்கிரஸால் இனி தனித்து ஆட்சியமைக்க முடியாது… அது ஒட்டுண்ணிக் கட்சி’ – பிரதமர் மோடி காட்டம்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கிட்டத்தட்ட 50 தொகுதிகளை எட்டவே திணறியது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வி அடைந்திருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா தேர்தல்

இந்த நிலையில் பிரதமர் மோடி மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி குறித்து பா.ஜ.க தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது,“வளர்ச்சி, நல்லாட்சி, உண்மையான சமூக நீதி ஆகியவற்றின் வெற்றியை மகாராஷ்டிரா கண்டுள்ளது. வஞ்சக சக்திகள், பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சி, வாரிசு அரசியல் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தனது உறுதியை மகாராஷ்டிரா வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் பா.ஜ.க-வுக்கு வாக்களித்துள்ளனர்.

மக்களின் இந்த மனநிலையை காங்கிரஸால் கணிக்க முடியவில்லை. அவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பவில்லை. வாக்காளர்கள் தேசத்துடன் நிற்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் பெயராலும், இட ஒதுக்கீட்டின் பெயராலும் பொய் சொல்வதன் மூலம் எஸ்சி/எஸ்டி/ஓபிசியை சிறு குழுக்களாகப் பிரித்துவிடலாம் என காங்கிரஸும் அதன் நட்பு கட்சிகளும் நினைத்தன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இந்த சதியை மகாராஷ்டிரா முற்றிலும் நிராகரித்துவிட்டது. இனி காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க இயலாது. இனி அது ஒரு ஒட்டுண்ணி கட்சி. கூட்டணிகளை உருவாக்கி அவர்களையும் வீழ்த்துகிறது.

மோடி

அதிர்ஷ்டவசமாக உத்தரப்பிரதேசத்தில் அதன் தோழமை கட்சிகள் காங்கிரஸை நிராகரித்ததால் அவர்கள் தப்பினார்கள். இல்லையெனில் அவர்களும் காணாமல் போயிருப்பார்கள். வக்பு வாரியம் போன்ற ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் சட்டங்களை இயற்றியது. அரசியலமைப்புச் சட்டத்தில் வக்பு சட்டம் இல்லை. இது காங்கிரஸின் வாக்கு வங்கியை உயர்த்துவதற்காக செய்யப்பட்டது. ஒரு காலத்தில் காங்கிரஸ் சாதிக்கு எதிராகப் பேசியது, ஆனால் இன்று அந்தக் குடும்பமே சாதி விஷத்தைப் பரப்புகிறது” எனக் காட்டமாகப் பேசினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook