World Chess Championship : ‘டிங் லிரன் Vs குகேஷ்’ – சாதிப்பாரா தமிழக வீரர்? – முழு விவரம் இங்கே

பார்டர் கவாஸ்கர் தொடர், ஐ.பி.எல் ஏலம் இதற்கெல்லாம் மத்தியில் இந்திய ரசிகர்கள் இன்னொரு மாபெரும் விளையாட்டுத் தொடரில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர். ஆம், உலக செஸ் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நாளை தொடங்கவிருக்கிறது. நடப்பு உலகச் சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரனுடன் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்திற்காக மோதவிருக்கிறார்.

Gukesh

செஸ் உலகில் தமிழகம் ஓர் உச்சபட்ச இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் செஸ் முகமாகப் பார்க்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த் 2002, 2007-13 இந்த காலக்கட்டங்களில் மட்டும் 5 முறை உலக சாம்பியனாக இருந்திருக்கிறார். கடந்த 2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்திருந்தது. அப்போதுதான் கார்ல்சனிடம் தோல்வியுற்று விஸ்வநாதன் ஆனந்த் தன்னுடைய பட்டத்தை இழந்தார்.

செஸ்ஸில் கார்ல்சனின் சகாப்தம் அங்கிருந்துதான் தொடங்கியது. அதன்பிறகு 2023 வரைக்கும் அவர்தான் உலக சாம்பியன். நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். 2023 லுமே அவராகவே முன்வந்துதான் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடப்போவதில்லை என அறிவித்தார். இந்தப் போட்டியில் ஆடுவதற்காக செய்ய வேண்டிய முன் தயாரிப்புகள் கடும் அயர்ச்சியையும் அழுத்தத்தையும் கொடுப்பதாகக் கூறி பின் வாங்கினார். கார்ல்சனின் விலகலுக்குப் பிறகு நெப்போம்னியாச்சிக்கும் டிங் லிரனுக்கும் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்திருந்தது. டை பிரேக்கர் வரை சென்ற இந்தப் போட்டியை டிங் லிரன் வென்றார். சீனாவின் முதல் உலக செஸ் சாம்பியன் எனும் பெருமையைப் பெற்றார்.

Ding Liren

நடப்புச் சாம்பியனாக இருக்கும் அந்த டிங் லிரனுடன் தான் இப்போது குகேஷ் மோதவிருக்கிறார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடும் நடப்புச் சாம்பியனை ‘Defender’ என அழைப்பார்கள். அவரை எதிர்த்து ஆடுபவர்களை ‘Challenger’ என அழைப்பார்கள். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆட Defender க்கு நடப்புச் சாம்பியன் என்கிற ஒரே தகுதி மட்டுமே போதும். டிங் லிரன் நடப்புச் சாம்பியன். அவரது பட்டத்தை தக்கவைப்பதற்காக சிங்கப்பூரில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவிருக்கிறார். ஆனால், ‘Defender’ க்கு எதிராக மோதும் சேலஞ்சர்கள் நிறைய படிநிலைகளை கடந்துதான் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வர முடியும்.

கேண்டிடேட்ஸ் (candidates) என ஒரு தொடர் உண்டு. அதுதான் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்று. உலகளவில் தலைசிறந்த 8 வீரர்கள் மட்டுமே இந்த கேண்டிடேட்ஸ் சுற்றில் ஆட முடியும். இந்த 8 வீரர்களும் பல்வேறு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த செஸ் சாம்பியன்ஷிப்பில் ரன்னர் அப்பாக வந்தவர், உலகக்கோப்பைத் தொடரில் டாப் 3 இடத்தைப் பிடித்தவர்கள், குறிப்பிட்ட அந்த ஆண்டில் அதிக ரேட்டிங்கை வைத்திருப்பவர், FIDE Circuit என சொல்லப்படும் உலக செஸ் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் ஆடி முதல் இடத்தைப் பிடிப்பவர் என்றே கேண்டிடேட்ஸில் ஆடும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Gukesh

கடந்த ஆண்டு நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் குகேஷ் வென்றிருந்தார். இதன் மூலம் FIDE Circuit இல் இரண்டாம் இடம் பிடித்தார். இதில் முதல் இடம் பிடித்திருந்த அமெரிக்காவின் பேபியானோ கருவானா ஏற்கெனவே அதற்கு முன்பாகவே உலகக்கோப்பையில் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸூக்கு தகுதிப்பெற்றுவிட்டார். அதனால் இரண்டாம் இடம்பிடித்த குகேஷூக்கு கேண்டிடேட்ஸில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

ஹிக்காரு நாக்கமுரா, கருவானா, நெப்போம்னியாச்சி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, பிரோஷ்ஜா, அபசோவ் என உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் ஆடிய அந்த கேண்டிடேட்ஸ் தொடரில் குகேஷ் வெற்றிப் பெற்று உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான ‘Challenger’ ஆக உருவெடுத்தார்.

தற்போதைய நிலையில் குகேஷ் டிங் லிரனை விட எல்லாவிதத்திலும் முன்னிலையில்தான் இருக்கிறார். உலக தரவரிசையில் குகேஷ் 5 வது இடத்தில் இருக்கிறார். லிரனோ 23 வது இடத்தில்தான் இருக்கிறார். குகேஷ் இப்போதைக்கு 2783 புள்ளிகளை வைத்திருக்கிறார். டிங் லிரனோ 2728 புள்ளிகளை மட்டுமே வைத்திருக்கிறார். செஸ் உலகின் போட்டிக்கு முந்தைய கணிப்புகள் அத்தனையிலும் குகேஷ்தான் முன்னிலையில் இருக்கிறார்.

Carlsen

தலைசிறந்த வீரரான கார்ல்சனே குகேஷை ‘Mystery’ வீரர் என புகழ்வதோடு அவர்தான் உலக சாம்பியனாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் மிகக்குறைந்த வயதில் உலக சாம்பியனாகும் வீரர் எனும் வரலாற்றை குகேஷ் படைப்பார்.

டிங் லிரனின் ஃபார்ம் மட்டுமில்லை. மனரீதியாகவும் அவர் ரொம்பவே சோர்வாகத்தான் இருக்கிறார். இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக அவர் ஆடியிருக்கும் 20 க்கும் மேற்பட்ட க்ளாசிக் போட்டிகளில் வெற்றியையே பெறவில்லை. சமீபத்தில் ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் சுமாராகவே ஆடியிருந்தார். அந்த செஸ் ஒலிம்பியாட் தொடரிலேயே டிங் லிரனும் குகேஷூம் நேரடியாக மோத வேண்டிய சூழல் உருவானது. ஆனால், அந்தப் போட்டியை டிங் லிரன் தவிர்த்தார். குறிப்பிட்ட அந்தப் போட்டி நாளில் ஓய்வு எடுத்துக் கொண்டார். கடந்த முறை உலக செஸ் சாம்பியன் டைட்டிலை வென்றதிலிருந்தே மனரீதியாக லிரன் அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாக சொல்கிறார்கள். போட்டிக்கு முன்பான பேட்டிகளில் லிரனே அவ்வளவு நம்பிக்கையாக பேசவில்லை.

Ding Liren vs Gukesh

போட்டி எப்படி நடக்கும்?

நவம்பர் 25 ஆம் தேதி அதாவது நாளை தொடங்கும் இந்தப் போட்டி டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கும். மொத்தம் 14 சுற்றுகள். ஒரு சுற்றில் வென்றால் 1 புள்ளியும், டிரா செய்தால் 0.5 புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார். 14 சுற்றுகளின் முடிவில் இருவரும் 7-7 புள்ளிகளைப் பெற்றிருந்தால் டை ப்ரேக்கருக்கு போட்டி செல்லும்.

எங்கே…எப்போது?

சிங்கப்பூரின் ஈக்குவாரிஸ் ஹோட்டலில் வைத்து இந்தப் போட்டி நடக்கவிருக்கிறது. இந்திய நேரப்படி ஒவ்வொரு சுற்றும் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். போட்டிகளை FIDE வின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பார்க்கலாம்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 138 ஆண்டு கால வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிய நாடுகளை சேர்ந்த இரண்டு வீரர்கள் நேருக்கு நேராக மோதவிருக்கின்றனர். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் பூகோளரீதியான பிரச்னைகள் இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்திருக்கிறது.

Gukesh

2013 இல் சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்த போது விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கார்ல்சன் மோதிய ஆட்டத்தைக் காண ஆறரை வயது சிறுவனான குகேஷை அவரின் தந்தை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றிருக்கிறார். கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் இப்போது உலக சாம்பியனுக்கான யுத்தத்தில் களமிறங்கப் போகிறான். மாபெரும் கனவுப் பயணம் இது. குகேஷ் சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். சாதனையோடு திரும்ப வாழ்த்துகள் குகேஷ்