வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ராகுலின் இந்த முடிவு கேரள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரை சற்று அதிருப்தியடையச் செய்தது. ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியை வேட்பாளராக முதல் முறையாக களம் இறக்கப்போவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது. ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச் சேர்ந்தர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை வயநாடு காங்கிரஸ் கொண்டாடியது. 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தியை வெற்றி பெறச் செய்வதாக தேர்தல் பணிகளை தொடங்கினர். கடந்த 13 – ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதல் சுற்றிலேயே முன்னேறத் தொடங்கிய பிரியங்கா தொடர்ந்து முன்னணியிலேயே நீடித்தார். இறுதி முடிவுகளில் 6,22,338 வாக்குகளைப் பெற்ற வயநாடு தொகுதியில் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளார் பிரியங்கா காந்தி. கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளும், பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளும் பெற்றுள்ளனர். 4,10,931 வாக்குகள் வித்தியாசம் என்கிற அமோகமான வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து தெரிவித்த வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள், “காங்கிரஸ் கட்சியின் கோட்டையான வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் வெற்றி உறுதி. இளைய இந்திரா காந்தியாக பார்க்கப்படும்
பிரியங்காவின் முதல் தேர்தல் என்பதால் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்கிற பரிசை அவருக்கு அளிக்க முயற்சி செய்தோம். வாக்குப்பதிவு சதவிகிதம் சரிவு என்பதால் இலக்கு குறைந்தது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பா.ஜ.க மீதுள்ள அதிருப்தி, நட்சத்திர வேட்பாளர் என்கிற அந்தஸ்து போன்றவையும் இமாலய வெற்றிக்கு முக்கிய காரணம். எதிர்பார்த்த வெற்றி தான்” என்றனர்.