மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்; எங்கேதான் இருக்கிறது உயிர் பாதுகாப்பு? – சாடும் எதிர்க்கட்சிகள்

அதிகரிக்கும் குற்றங்கள்:

தமிழகத்தில் பட்டப்பகலில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர், அரசுப் பள்ளியில் ஆசிரியை ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என மூவர் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதல் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் தொடங்கி பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் துறைத் தலைவராக இருக்கிறார். இவர் கடந்த நவம்பர் 13-ம் தேதி புற்றுநோய் வார்டில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென விக்னேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாகக் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் மருத்துவர். அருகிலிருப்பவர்கள் மருத்துவரை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரமணி என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ரமணியின் சகோதரரின் நண்பரான மதன்குமார் என்பவர் ரமணியை காதலித்து வந்திருக்கிரார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதன் தனது பெற்றோர்களுடன் சென்று ரமணியைத் திருமணம் செய்யப் பெண் கேட்டிருக்கிறார்கள். பெண் வீட்டார் திருமணத்துக்கு மறுப்பு சொல்லவே நாளடைவில் ரமணி மதனுடன் பேசுவதையும் தவிர்த்திருக்கிறார். இந்நிலையில், ரமணி பணியாற்றும் பள்ளிக்கு மதன் வந்திருக்கிறார். அங்கு ஆசிரியர்கள் ஓய்வறையில் இருந்த ரமணியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்த மதன் தான் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமணியின் கழுத்து, மார்பு பகுதியில் பலமாகக் குத்தியிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட ரமணி

கீழே விழுந்த ரமணியை பள்ளியிலிருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும், ரமணி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கொலை செய்து தப்பிச் சென்ற மதனை அந்த பகுதி போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். பள்ளி வளாகத்தில் அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்த கொலை அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அழைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கொலை நடந்த பள்ளியில் சி.சி.டி.வி-யும் இல்லை, காவலாளியும் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் வழக்கறிஞருக்கு வெட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேபோல, கண்ணன் பயிற்சி பெரும் இடத்தில் சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக இருந்துவருகிறார். கண்ணனுக்கும் சத்யாவதி கணவன் ஆனந்த்துக்கு நீண்ட நாள்களாகவே முன்விரோதம் இருந்திருக்கிறது. ஒருசில முறை அடிதடி அளவுக்கும் பிரச்னை பெரிதாகியிருக்கிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு கண்ணன் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். அங்கு வந்த ஆனந்த் கண்ணனை வழிமறித்து அவர் மறைந்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கண்ணனைச் சரமாரியாக வெட்டியிருக்கிறார்.

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

கழுத்தில் பலத்த வெட்டு ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்திருக்கிறார் கண்ணன். அவரை நீதிமன்றத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இப்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையிலிருக்கிறார் கண்ணன். இந்த கொலை முயற்சி தொடர்பாக ஆனந்த் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரது மனைவி சத்யாவதியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவல்துறையினர் அதிகம் இருக்கும் நீதிமன்றத்திலேயே நடந்த இந்த கொலைவெறி தாக்குதல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு!

இந்த கொலைகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்துத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “சட்டம் ஒழுங்கு என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அது தனிப்பட்ட தகராறு. தூத்துக்குடி 13 பேரைச் சுட்டுக் கொன்றது எடப்பாடி பழனிசாமி ஆட்சி. அது சட்டம் ஒழுங்கு பிரச்னை. கோடநாடு தொடங்கி அவரின் ஆட்சியில் எத்தனையோ கொலைகள் நடந்திருக்கிறது. உண்மையில் திமுக ஆட்சியில் கொலைகள் குறைந்திருக்கிறது. இவற்றை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுவது நியாயமில்லை” என்று பதில் கொடுத்திருந்தார்.

எங்கிருக்கிறது பாதுகாப்பு?

தமிழகத்தில் நடக்கும் கொலை சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “குடும்ப தகராறு, காதல் விவகாரம், தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கும் கொலைகளை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுவது ஏற்புடையதல்ல. சாதிய மோதல், கும்பல் கலவரம் போன்றவையே சட்டம் ஒழுங்கில் வரும். மற்றபடி 2021-ம் ஆண்டுக்கு முன்பைவிட தற்போது தமிழகத்தில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு

ரெளடிகள் மோதல் தொடங்கி ரெளடிகளின் நடமாட்டம் முன்பைவிட மிகவும் குறைந்திருப்பதை நாம் கண்கூட பார்க்கலாம். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் சொல்வதைச் சட்டம் ஒழுங்கு பிரச்னையுடன் இணைத்துப் பேசுவது சரியாக இருக்காது. அதேபோல, ஒருசில மருத்துவமனையில் பணியில் காவலர்கள் நியமிக்கப்படாதது உண்மைதான். கிண்டி சம்பவங்களுக்குப் பிறகு அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் காவலர்களை பணியில் நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எங்கோ ஏதோ ஒரு மூலையில் நடக்கும் தவறுகளை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்கிறது என்று பேசுவது மிகவும் தவறானது” என்றார்கள்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?!