மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு கடந்த 20-ம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பிரதானப்படுத்தி பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி தேர்தலை சந்தித்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்ற சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று கூறி தேர்தலை சந்தித்தார்கள்.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு மஹாயுதி கூட்டணி அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வங்கிக்கணக்கிகணக்கில் அறிவிக்கப்படும் என்று அறிவித்தது. இத்திட்டம் உடனே அமல்படுத்தப்பட்டது. 2.4 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1500 வரவைக்கப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கு சாதகமாகவே வெளி வந்தது. அக்கருத்துக்கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளி வர ஆரம்பித்தது. மேற்கு மகாராஷ்டிராவில் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. அனைவரும் அனுதாபத்தின் அடிப்படையில் மக்கள் சரத்பவாருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக வாக்குகள் பதிவாகி இருந்தது. தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியை சேர்ந்த சகன் புஜ்பால், திலிப் வல்சே பாட்டீல், அஜித்பவார் உட்பட முன்னணி தலைவர்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
பாராமதியில் அஜித்பவார் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே தான் போட்டியிட்ட தொகுதியில் பின் தங்கி இருக்கிறார். அதேசமயம் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே, உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோர் தொடர்ந்து தேர்தலில் முன்னிலையில் இருக்கின்றனர். நவிமும்பையில் முன்னாள் மத்திய அமைச்சர் கணேஷ் நாயக், மறைந்த முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் சலீல் தேஷ்முக் ஆகியோரும் பின் தங்கியே இருக்கின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி மஹாயுதி கூட்டணி 206 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்றே தெரிகிறது. இதில் பா.ஜ.க மட்டும் 114 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் பா.ஜ.க 11 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. சிவசேனா(ஷிண்டே) 57 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 35 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி மொத்தமே 65 தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இத்தேர்தல் உத்தவ் தாக்கரே, சரத்பவாருக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி 4 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க 110 தொகுதிக்கும் அதிக அளவில் தனித்து வெற்றி பெற்று இருப்பதால் இம்முறை முதல்வர் பதவியை பா.ஜ.க கேட்கும் என்று தெரிகிறது. தேர்தலில் யாரையும் முதல்வர் வேட்பாளராக மஹாயுதி கூட்டணி முன்னிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…