நெல்லை அதிமுக ஆய்வுக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் மோதிக்கொண்ட நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அ.தி.மு.க சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெல்லை மாவட்ட ஆய்வுக் கூட்டத்தின் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வரகூர் அருணாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நெல்லை மாநகர மாவட்ட ஆய்வுக் கூட்டம் நெல்லை தச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டம் தொடங்கதும் பேசிய அ.தி.மு.க கொள்கைப்பரப்பு துணைச் செயலாளரும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான பாப்புலர் முத்தையா, “நெல்லை நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட நெல்லை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விடவும் குறைந்த வாக்குகள் பெற்றோம்” என்று பேசியபோது, மாநகர மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா எழுந்து அவர் அருகில் சென்று, “கட்சிக்குள் நாம் பேச வேண்டியதை பொதுவில் பேசக்கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனால், பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும் மாநகர மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டதுடன் அடிதடியில் இறங்கியதால் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் வெளியே செல்ல முயன்றனர்.

இந்த நிலையில், மைக்கை பிடித்த எஸ்.பி.வேலுமணி, “அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். கட்சி விவகாரங்களை எங்களிடம் சொன்னால் நாங்கள் தலைமைக்குத் தெரிவிப்போம். இது போல பொது இடங்களில் பேசக்கூடாது. அ.தி.மு.க என்பது கட்டுக்கோப்பான இயக்கம். அதை கடைப்பிடிக்க வேண்டும் ” என்று அமைதிப்படுத்தினார்.

அதற்குள், எதிர்ப்புத் தெரிவித்த நபர்களை மாவட்டச் செயலாளரின் ஆள்கள் வெளியேற்றினார்கள். பின்னர், கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் அ.தி.மு.க-வில் நடந்த இந்த மோதல் சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook