இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி, குக்கி சமூக மக்களுக்கு இடையில் மோதல் நடந்து வருகிறது. அதாவது மாநிலத்தின் செல்வாக்கு மிக்கவர்களாக மெய்தி சமூகத்தினர் இருக்கிறார்கள். இந்த சமூகத்தினர் தங்களுக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு பழங்குடியின மக்களான குக்கி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் இரு தரப்புக்கும் இடையில் மோதலால் மணிப்பூரில் கலவரம் வெடித்திருக்கிறது. இதனால் உயிரிழப்பு, சேதம் நடப்பது தொடர்கதையாகிவிட்டது.
இதையடுத்து பொதுமக்கள் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில்தான் வன்முறையாளர்கள் குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சுட்டு கொன்றனர். மேலும் அவருடைய வீடோடு சேர்த்து அவரது சடலத்தையும் எரித்தனர். இதனால் மணிப்பூர் வன்முறை காடாக மாறியிருக்கிறது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் எம்.எல்.ஏ, எம்.பி-க்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்களை தீ வைத்து கொளுத்தினார்கள்.
இந்தசூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கூடுதலாக 5000 மத்திய ஆயுதப்படை வீரர்களை குவிப்பதால் எந்த தீர்வும் கிடைக்காது. அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முதல்வர் பிரேன் சிங்தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு, அவரை உடனடியாக நீக்க வேண்டும். மெய்தி, குக்கி, நாகா ஆகிய மக்கள் ஒரே பிராந்தியத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அவர்களுக்கு பிராந்திய சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும். பிரதமர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, மணிப்பூருக்குச் சென்று, மணிப்பூர் மக்களிடம் பணிவுடன் பேசி, அவர்களின் குறைகள் மற்றும் அபிலாஷைகளை நேரடியாக தெரிந்து கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும்” என்றார். இது சர்ச்சையாக வெடித்தது. இதற்கு மூன்று சமூக மக்களுக்கும் பிராந்திய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்ததுதான் காரணம். இதில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கடுப்பாகிவிட்டனர்.
சிதம்பரத்தின் ட்விட்டுக்கு கீழ் பதிவிட்ட மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் மேகசந்திரா, “தயவு செய்து இதை டெலிட் செய்து விடுங்கள். ஏற்கெனவே மணிப்பூர் கொந்தளிப்பில் உள்ளது” என்றார். இதையடுத்து தனது பதிவை சிதம்பரம் நீக்கிவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், “ஏற்கனேவே குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் தனியாக சுயாட்சி செய்யும் பிராந்தியம் கேட்டு வருகிறார்கள். இந்த சூழலில் ப.சிதம்பரம் அனைவருக்கும் தனி பிராந்தியம் கொடுக்க வேண்டும் என பதிவிட்டிருக்கிறார். இது குக்கி இனத்தவரின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கிறது. மணிப்பூரில் பிராந்திய ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி துணை நிக்கிறது. இதற்கு ப.சிதம்பரத்தின் பதிவு எதிராக இருக்கிறது. எனவே அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் பிரேன் சிங், “சிதம்பரத்தின் பதிவால் நான் ஆச்சரியமடைந்துள்ளேன். மணிப்பூரின் பிரச்னைகளுக்கு காங்கிரஸ்தான் காரணம். கடந்த 2008-ம் ஆண்டில் ஜோமி புரட்சி படை உடனான இடைநிறுத்த ஒப்பந்தம்தான் இந்த வன்முறைக்கு காரணம். காங்கிரஸ் காலத்தில் மத்திய தலைவர்களின் அறியாமையால் நாங்கள் சில பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். தற்போதைய நெருக்கடிக்கு ப.சிதம்பரம் தான் மூலகாரணம். சிதம்பரம் அப்போதைய காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராகவும், ஓக்ராம் இபோபி சிங் மணிப்பூர் முதல்வராகவும் இருந்தனர்.
அப்போது மியான்மரை சேர்ந்த தங்கிலியான்பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தனர். அந்த நபர் மியான்மரில் தடைசெய்யப்பட்ட ஜோமி ரீ-யூனிஃபிகேஷன் ஆர்மியின் தலைவராக இருந்தார். சிதம்பரம் தங்கிலியன்பாவை சந்திக்கும் புகைப்படம் உள்ளது. அவர்கள் வடகிழக்கு மற்றும் பழங்குடி மக்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை. தற்போதைய நெருக்கடி மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பிரச்சனை. அவர்கள் மணிப்பூர் மற்றும் முழு வடகிழக்கு பழங்குடி மக்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார்கள். மணிப்பூரில் என்ன பிரச்சனை இருந்தாலும் காங்கிரஸால் உருவாக்கப்பட்டது. அவர்களால் அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது” என்றார்.
இதற்கிடையில் மோசமான சூழ்நிலையை சமாளிக்க மணிப்பூருக்கு கூடுதலாக 5,000 துணை ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலை மாவட்டமான ஜிரிபாமில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அலுவலகங்களை வன்முறை கும்பல் சூறையாடியது. அங்கு அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரச்னை பெரிதாகிவிட்டது. முதல்வர் சிங்கின் பூர்வீக வீட்டை முற்றுகையிடும் முயற்சியையும் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். பதற்றம் நீடிப்பதால் பல மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து மணிப்பூருக்குச் செல்லாத பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனத்தை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதலில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…