அஜித்பவார் – சரத்பவார் மோதிய தொகுதிகளில் 70% வாக்குப்பதிவு… சர்க்கரை சாம்ராஜ்யம் யாருக்கு?

எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு..

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்டு அணிகளாக போட்டியிட்டன. இதையடுத்து போட்டியும் கடுமையாக இருந்தது. அதுவும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மோதிக்கொண்ட மேற்கு மகாராஷ்டிராவில் இப்போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.

சரத்பவார்

மகாராஷ்டிரா முழுக்க சராகரியாக 66 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால், சரத்பவார் மற்றும் அஜித்பவார் அணிகள் நேருக்கு மோதிக்கொண்ட 38 தொகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதுவும் காகல் தொகுதியில் 81 சதவீதம் அளவுக்கு வாக்குப் பதிவாகி இருக்கிறது. இத்தொகுதியில் அஜித்பவார் அணியில் இருந்து அமைச்சர் ஹசன் முஸ்‌ரீப் போட்டியிட்டார். சரத்பவார் அணியில் இத்தொகுதியில் சமர்ஜீத் சிங் போட்டியிட்டார்.

இதேபோன்று அஜித்பவார் போட்டியிட்ட பாராமதி தொகுதியில் 71 சதவீதம் அளவுக்கு வாக்குப் பதிவானது. கடந்த முறை இங்கு 68 சதவீதம் அளவுக்கு மட்டுமே வாக்குப் பதிவாகி இருந்தது.

அதிக வாக்குப் பதிவுக்கு காரணம்…

இது குறித்து அரசியல் பார்வையாளர் பிரகாஷ் பவார் கூறுகையில், ”தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு இரு கட்சி நிர்வாகிகளும் அதிக வாக்குப் பதிவாகவேண்டும் என்பதற்காக தீவிரமாக பாடுபட்டுள்ளனர். இரு கட்சி நிர்வாகிகளும் ஒவ்வொரு பகுதியிலும் தங்களது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக வேலை செய்துள்ளனர்.

இதற்கு முன்பு பவார் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் இம்முறை சரத்பவார் மற்றும் அஜித்பவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பிரசாரம் செய்ததை பார்க்க முடிந்தது. இதனால் வாக்கு சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. பாராமதிக்கு அருகில் உள்ள இந்தாபூரில் சரத்பவார் அணியில் இருந்து முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாட்டீல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அஜித்பவார் அணி சார்பாக எம்.எல்.ஏ.தத்தா பர்னே போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 76 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

அஜித்பவார்

ஹர்ஷ்வர்தன் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.கவில் இருந்து விலகி சரத்பவார் அணியில் சேர்ந்தார். அம்பேகாவ் தொகுதியில் அஜித்பவார் அணி சார்பாக திலிப் வல்சே பாட்டீல் போட்டியிடுகிறார். திலிப் வல்சே பாட்டீல் ஒரு நேரத்தில் சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதனால் திலிப் வல்சே பாட்டீல் அணி மாறியது சரத்பவாருக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. எனவே திலிப் வல்சே பாட்டீலை தோற்கடிக்கவேண்டும் என்று சரத்பவார் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். இங்கு 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது.

கடந்த முறையை விட இம்முறை 3 சதவீத வாக்குகள் அதிகமாக விழுந்திருக்கிறது. இத்தொகுதியில் சரத்பவார் அணி சார்பாக தேவ்தத்தா நிகம் போட்டியிடுகிறார். அஜித்பவார் அணி சார்பாக போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதிகள் ஆவர். அவர்களுக்கென தனி வாக்கு வங்கி இருக்கும். கூடுதலாக விழுந்திருக்கும் வாக்குகள் சரத்பவார் அணிக்கு சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது”என்றார்.

நானா பட்டோலே, சரத்பவார், உத்தவ்

பா.ஜ.க வியூகம் எடுபடுமா..?

இதே போன்று சரத்பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் போட்டியிடும் இஸ்லாம்பூர் தொகுதியில் 74 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

அருகில் உள்ள தாஸ்காவ் தொகுதியில் சரத்பவார் மறைந்த முன்னாள் மாநில அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் மகன் ரோஹித் பாட்டீலை நிறுத்தி இருந்தார். இங்கு 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

ஆனால் கடந்த முறை இங்கு வெறும் 68 சதவீதம் தான் வாக்குகள் பதிவாகி இருந்தது. மேற்கு மகாராஷ்டிரா முழுக்க சர்க்கரை ஆலைகளும், கரும்புத்தோட்டங்களும் நிறைந்து இருக்கிறது. இதனை சரத்பவாரிடமிருந்து கைப்பற்ற பா.ஜ.க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் முடியவில்லை. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து அதன் மூலம் படிப்படியாக மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை சாம்ராஜ்ஜியத்தை தனது கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ.க முயற்சிக்கிறது. அம்முயிற்சி கைகொடுக்குமா என்பது நாளை தெரிய வரும். சரத்பவார் மேற்கு மகாராஷ்டிராவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook