மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு; காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் கட்சிரோலி மாவட்டத்தில் 73.7 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது.

கோலாப்பூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிக பட்சமாக 76.3 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. மாநிலம் முழுவதும் சராசரியாக 65.1 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பட்ச வாக்கு சதவீதம் இதுவாகும். இந்த அளவுக்கு அதிக அளவில் வாக்குகள் பதிவாகப் பல்வேறு காரணங்கள் பார்க்கப்படுகின்றன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலாகும் இது. இதனால் நான்கு கட்சி தொண்டர்களும் அதிக வாக்குப் பதிவாக முக்கிய காரணமாக இருந்தனர். இரண்டு கட்சிகள் உடைந்திருந்தபோதிலும் பெரிய அளவில் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இத்தேர்தல் நடந்து முடிந்தது.

மூன்று தலைமுறை வாக்காளர்கள்

அதோடு தேர்தல் நாளில் அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் தேர்தல் ஆணையம் இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரித்தனர். நகரங்களில் குடியிருப்பு கட்டிடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. மகாராஷ்டிரா முழுவதும் 709 குடியிருப்பு கட்டிடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அது போன்று அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் 95 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது.

வழக்கமாக மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம். அப்படி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே வாக்குகள் பதிவானது. எனவேதான் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் இம்முறை குடியிருப்பு கட்டிடங்களில் வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளனர்.

மும்பையில் தாராவி, மான்கூர்டு, அனுசக்தி நகர் பகுதியில் வாக்கு சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக மும்பையில் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை விட அதிகமாகவே இருந்தது. மும்பையில் போரிவலி, முலுண்ட், காட்கோபர் போன்ற இடங்களில் வாக்கு சதவீதம் 60 சதவீதம் வரை இருந்தது. பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் பாந்த்ரா மேற்கு மற்றும் வெர்சோவா பகுதியிலும் வாக்கு சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

மும்பையில் சராசரியாக 54.7 சதவீதம் அளவுக்கு வாக்கு பதிவாகி இருந்தது. இது கடந்த முறை 50.5 சதவீதமாக இருந்தது. பாராமதி தொகுதியில் அஜித்பவார் ஆட்கள் ஸ்லிப்பில் கட்சியின் சின்னத்தை முத்திரையிட்டுக் கொடுப்பதாக சரத்பவார் கட்சி வேட்பாளர் யுகேந்திர பவார் குற்றம் சாட்டினார். இந்த முறை விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால் அங்கு விதர்பாவில் 65 முதல் 73 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. மராத்வாடாவில் 72 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்

இரவு 9.30 வரை நடந்த தேர்தல்

சட்டமன்றத் தேர்தலோடு நாண்டெட் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது. இதனால் ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு வாக்குகள் செலுத்த வேண்டியிருந்தது. எனவே வாக்குப்பதிவுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. அதோடு வாக்குப்பதிவு முடியவேண்டிய நேரத்தில் அதிக வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர். இதனால் வாக்களிக்கும் நேரத்தை நீடித்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர் அபிஜித் ராவுத் தெரிவித்தார். இரவு 9.30 மணி வரை வாக்காளர்கள் சிலர் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 10 ஆயிரம் புகார்கள் பதிவாகி இருந்தது.

தேர்தலுக்குப் பின்பு எடுக்கப்பட்ட 10 கருத்துக்கணிப்புகள் வெளிாகி இருக்கிறது. இதில் 6 கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியும், 3 கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியும் ஆட்சியமைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கருத்துக்கணிப்பில் இரண்டு அணிகளும் சமமாக வருகிறது. 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88