மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்யச் சென்றிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. கூடவே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை அவர் சந்தித்திருக்கிறார். அப்போது, தமிழக அரசியல் சூழல் குறித்து செல்வப்பெருந்தகையிடம் விவாதித்திருக்கிறார் கார்கே. மேலும், “தி.மு.க நம்மோடு நல்ல இணக்கத்தில்தான் இருக்கிறது. அதேநேரத்தில், மற்ற கட்சிகளும் நம்மோடு வர விரும்பினால், அதை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட வேண்டாம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் நல்ல எண்ணிக்கையில் நாம் சீட் பெற்றாக வேண்டும்.

இன்னும் 15 மாதங்களில் எவ்வளவோ விஷயங்கள் தமிழக அரசியலில் நடக்கப்போகின்றன. எது நடந்தாலும், அதை காங்கிரஸின் வளர்ச்சிக்காக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று பெருந்தகைக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் கார்கே.
நவம்பர் 27-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவைப் பெரிய அளவில் கொண்டாட நினைத்த சென்னைக்கு அருகிலிருக்கும் மாவட்ட மாண்புமிகு, தன் ஆளுகைக்குக் கீழிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு டார்கெட் நிர்ணயித்து, கலெக்ஷனில் இறக்கியிருக்கிறாராம். உதயநிதியின் பெயரால் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்பதால், ‘தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் ஓனர்கள், பெரிய கடைகள்’ எனப் பலதரப்பிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் தீவிர கலெக்ஷனில் ஈடுபட்டதால், மாண்புமிகு நிர்ணயித்த டார்கெட்டைவிட அதிகமாக வசூலாகியிருக்கிறது. இதில் குஷியான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்டை மட்டும் மாண்புமிகுவிடம் கொடுத்துவிட்டு, மிஞ்சியதைத் தாங்களே வைத்துக்கொண்டார்களாம். இந்த விவகாரம் மாண்புமிகுவின் காதுகளை எட்ட, பொய்க் கணக்கு காண்பித்தவர்களுக்கு போன் போட்டு, “யார், யாரிடம் எவ்வளவு வசூலித்தீர்கள் என்ற கணக்கு என்னிடம் இருக்கிறது. அதனால் வசூலித்த முழுத் தொகையையும் மாவட்டத்துக்குக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால், பின்விளைவுகள் படுமோசமாக இருக்கும்” என மிரட்டித் திரும்ப வாங்கத் தொடங்கிவிட்டாராம் அந்த மாண்புமிகு!
தன்மீது வருத்தத்தில் இருக்கும் தங்கையை அழைத்துச் சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார் `கதைசொல்லி’ தலைவர். இதற்காக, இருவரும் சந்தித்தபோது, “தேர்தல் செலவுக்காக வாங்கிய திரள்நிதியை நீயே வைத்துக்கொள். ஆனால், வெளிநாடுகளிலிருந்து வரும் திரள்நிதியைக் கட்சியின் கணக்கில் சேர்ப்பதுதானே சரியாக இருக்கும்… இப்போதும் காலம் ஓடிவிடவில்லை. வெளிநாடுகளிலிருந்து வந்த திரள்நிதியைக் கட்சியின் கணக்கில் வரவு வைத்துவிட்டு, தேர்தல் வேலைகளைத் தொடங்கு” எனச் சொல்ல, பதில் சொல்லாமல் திரும்பிவிட்டாராம் `தங்கை’ தலைவி. இதையடுத்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய `தங்கை’ தலைவி, “இப்போதும், என்னுடைய வரவுக்காகப் பல கட்சிகளின் தலைவர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அண்ணனோ, என்னைப் பற்றிப் பேசியதற்காகச் சிறு வருத்தம்கூடத் தெரிவிக்காமல், திரள்நிதி குறித்து மட்டுமே பேசுகிறார். இனி, அவரிடம் பேச எதுவுமில்லை” என்று கட்சி சீனியர்களிடம் கொதித்துவிட்டாராம். “எதுவா இருந்தாலும் அண்ணனிடமே சொல்ல வேண்டியதுதானே… நம்மகிட்ட எகிறி என்ன பயன்?” எனக் கடுகடுக்கிறார்கள் சீனியர் தம்பிகள்.
தமிழக ஆட்சிப்பணி மற்றும் காவல்பணியில் பணியாற்றும் குரூப் ஒன் ஆபீஸர்களுக்கு சீனியாரட்டி அடிப்படையில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் (Conferred IAS and IPS) அந்தஸ்தை மத்திய அரசிடம் கோரி பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. ஆனால், 2018-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த அதிகாரிக்கும் அப்படி எந்தப் பணி உயர்வும் வழங்கப்படவில்லை. தற்போது தி.மு.க ஆட்சியில் பணி மூப்புக்காகக் காவல்பணியிலும், ஆட்சிப்பணியிலும் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கிறார்கள்.
ஆனாலும் தி.மு.க அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகவே இருந்திருக்கிறது. இதையடுத்து, “நேரடியாக ஆட்சிப்பணிப் பொறுப்புக்கு வருபவர்களைவிட, பதவி மூப்பின் அடிப்படையில் அந்த இடத்துக்கு வருபவர்கள்தான் ஆட்சி இல்லாதபோதும் நமக்கு நன்றியோடு இருப்பார்கள். தேர்தல் வருவதற்குள் நமக்கு நம்பிக்கைக்குரியவர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பது நல்லது” எனச் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்தே, “பணி மூப்பு பட்டியல் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்” எனக் கிசுகிசுக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தார். `இந்த நிகழ்வுகளில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி பங்கேற்காததற்கு, அவருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாததே காரணம்’ என்று சர்ச்சை எழுந்தது.

கூடவே, “இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைச்சர் கீதா ஜீவன்தான்” என மேலிடத்துக்குத் தகவல் சொல்லப்பட, அவரை அழைத்துக் காய்ச்சி எடுத்துவிட்டதாம் தலைமை. இதையடுத்து, சென்னைக்கு வந்து விளக்கம் அளித்ததோடு, நடந்த நிகழ்வுக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறாராம் கீதா ஜீவன். ஆனாலும், “தலைமையைச் சமாளித்துவிட்ட கீதா ஜீவன், கனிமொழியை எப்படிச் சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb