டெல்லி ஆத் ஆத்மி அரசின் அமைச்சரவையிலிருந்தும் கட்சியிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், கட்சியிலிருந்து விலகிய கையோடு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். ஒரே ஆண்டியில் தொடர்ந்து ஆம் ஆத்மியின் இரண்டாவது அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்திருப்பதால் ஆம் ஆத்மி கூடாரம் சற்று ஆட்டம் கண்டிருக்கிறது.
டெல்லி ஆம் ஆத்மி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துவந்த கைலாஷ் கெலாட், அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்திலிருந்தே அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2015-ம் ஆண்டு முதல்முறையாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-வாக டெல்லி சட்டமன்றத்துக்குள் நுழைந்தவர். அடுத்தத்து சட்டத்துறை, போக்குவரத்துத்துறை என அமைச்சர் பதவிகளையும் பெற்று கட்சியின் மூத்த தலைவராக கோலோச்சினார். அந்த நிலையில்தான், டெல்லி புதிய மதுபானக் கொள்கை ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங், அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். ஒருகட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதே ஆம் ஆத்மியின் இதர தலைவர்கள் அடுத்த குறி நமக்குத்தானோ? என்று அதிர்ந்துபோயினர்.
இந்த கைதுகள் குறித்து அப்போது பேசிய டெல்லி ஆம் ஆத்மி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி, “என்னுடைய நெருங்கிய உதவியாளர் மூலம் என்னை அணுகிய பா.ஜ.க, `உன் அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் வந்து பா.ஜ.கவில் இணைய வேண்டும்; இல்லையென்றால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவாய்’ என்றும் மிரட்டல் விடுத்தது” எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலும், “பா.ஜ.கவினர் எங்களுடைய டெல்லி எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டு `ரூ.25 கோடி வழங்குகிறோம், பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கொடுக்கிறோம், ஆம் ஆத்மியை விட்டுவிட்டு பாஜகவில் வந்து இணையுங்கள்’ என்று பேரம் பேசியிருக்கின்றனர். தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியை வெல்ல முடியாததால், போலியான மதுபான ஊழல் வழக்கை உருவாக்கி எங்களைக் கைது செய்து டெல்லி ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க தரப்பினர் சதி செய்கின்றனர்” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
அந்தநிலையில்தான், கடந்த மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதற்கடுத்த மாதமே ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அச்சப்பட்ட படி, டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலன் மற்றும் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினர்.
இதுகுறித்துப் பேசிய ராஜ்குமார் ஆனந்த், “ஊழலுக்கு எதிராகப் போராடத் தோன்றியது ஆம் ஆத்மி. ஆனால், இன்று அதுவே ஊழலில் சிக்கித் தவிக்கிறது. இந்த ஊழலில் என்னுடைய பெயரையும் இணைக்க முடியாது என்பதால், அமைச்சர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தேன்” என்று விளக்கமளித்தார். ஏற்கெனவே ராஜ்குமார் ஆனந்த்தை சுங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் குற்றம்சுமத்தி, அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நிலையில், சிறைசென்ற அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியில் வந்தார். இருப்பினும், அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.கவே கைப்பற்றியது. ஆம் ஆத்மி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினாவை நியமித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போதே இந்த முடிவு கட்சியிலுள்ள சில மூத்த தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. அதில் அதிருப்திக்குள்ளான ஒருவர்தான் கைலாஷ் கெலாட். சுதந்தர தினத்தன்று அதிஷி மர்லினா கொடியேற்றுவார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்ததையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல், கைலாஷ் கெலாட் வசமிருந்த சட்டம் மற்றும் நீதித்துறையையும் அதிஷிக்கு கொடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். தொடர்ந்து அதிருப்தி மேல் அதிருப்தியில் இருந்த கைலாஷ் கெலாட் தற்போது தன்வசமிருந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆம் ஆத்மி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுவதுமாக விலகினார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய கெலாட், “ஆம் ஆத்மி கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. கட்சி இப்போது சொந்த அரசியல் லாபத்துக்காக போராடி வருகிறது. ஆம் ஆத்மியில் சங்கடமான பல விஷயங்கள் நடக்கின்றன. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கே பெரும்பாலான நேரத்தை ஆம் ஆத்மி அரசு செலவிடுகிறது” எனக் குற்றம்சாட்டினார். இந்த நிலையில்தான், பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் கைலாஷ் கெலாட்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொடர்ந்து ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்கள் ராஜினாமா செய்வது கட்சிக்கும், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்று சபதம் போட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பெருத்த பின்னடைவாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…