மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் திடீர் போராட்டம்…

தங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என்று ஏற்கெனவே முல்லை நகர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளது மதுரையில் பரபரபை ஏற்படுத்தி வருகிறது.

போராட்டத்தில்

மதுரை விமான நிலைய விரிவாக்கதிற்காக நிலம் எடுக்கப்பட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையம்  தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விரிவாக்க பணிகளுக்கு அப்பகுதியில் 610 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதில் சின்ன உடைப்பு கிராமத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் விவசாய நிலங்களையும் சேர்த்து 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர். அதற்கான இழப்பீட்டுத் தொகையும் வழங்கபட்டது.

தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்காக சின்ன உடைப்பு கிராமத்திலுள்ள வீடுகளை அகற்ற வேண்டுமென்று மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கிய அலுவலர்கள், சில நாள்களுக்கு முன் பொக்லைன் எந்திரங்களுடன் அப்பகுதியுள்ள வீடுகளை இடிக்க சென்றபோது ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ராஜன் செல்லப்பா

ஊர் நுழைவுப்பகுதியில் திறந்த வெளியில் அமர்ந்து சின்ன உடைப்பு கிராம மக்கள் சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை போராட்டத்தில் கலந்துகொண்ட இரு பெண்கள் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

 போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள் கூறும்போது, “விமான நிலையத்துக்கு இடம் கொடுத்த எங்களுக்கு மாநகராட்சிப்பகுதியில் 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும், அங்கு  பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதுவரை போராட்டம் நடத்துவோம்,” என்றனர். அதிகாரிகள் பேசுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவளித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறுகையில், “மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறுகையில்,  “கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, அதன் உரிமையாளரிடம் ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கூடுதல் இழப்பீடு மற்றும் நிலம் கேட்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் போது இழப்பீடு மட்டுமே வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கிராம பகுதியில் நிலம் வழங்குகிறோம். மேலும் வீடுகளை காலி செய்ய ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

இதனால், தற்போது அப்பகுதி மக்கள் போராட்டத்தை தற்கலிகமாக  வாபஸ் பெற்றுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb