இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1914-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு கனடாவுக்கு புறப்பட்ட ஒரு ஜப்பானிய நீராவிக் கப்பலின் பெயர்தான் ‘கோமகதா மாரு’.
முதலாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த அந்த காலகட்டத்தில், இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என 376 பேரை சுமந்து கொண்டு பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணித்து சென்ற அந்த கப்பல், கனடாவின் வான்கோவர் துறைமுகத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்தியாவுக்கு திரும்பி வந்த கப்பலில் இருந்தவர்களை கைது செய்ய முயன்றபோது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 20 பயணிகள் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகினர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பலரது நிலை என்னவானது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்த துயர நிகழ்வு இந்திய – கனடா வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
வான்கோவரில் நடந்த நிகழ்வுகள், கனடா ‘வெள்ளையர்களின் நாடு’ என்பதை வெளிப்படையாக அறிவித்தது. மேலும், இந்த ஒட்டுமொத்த சம்பவமும் இந்தியாவில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நியாயமற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியது, ஆங்கிலேயே ஆட்சியில் பல தெற்காசிய நாடுகளில் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ‘கோமகதா மாரு’
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ‘கோமகதா மாரு’ சம்பவம் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயம் என்று சொல்லலாம். 1914-15 காலகட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மக்களின் மனநிலையை மாற்றியதில் ‘கோமகதா மாரு’ சம்பவம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.
வட இந்தியாவிலிருந்து குறிப்பாக பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு, அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் பலர் இந்திய மதிப்பில் அதிக சம்பளத்துக்கு தினக்கூலி வேலையில் சேர்ந்தது மட்டுமின்றி, கடிதம் மூலம் தங்கள் நாட்டு மக்களையும் அதையே செய்யுமாறு வலியுறுத்தினர்.
ஆரம்பத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்களுடைய வரவு, கனடா மற்றும் அமெரிக்க மக்களின் மனதில் இன மற்றும் தொழில் ரீதியான எதிர்மறை எண்ணத்தை வளர்த்தெடுத்தது. ஏற்கெனவே ஆசிய மக்கள் மீதான அவர்களின் வெறுப்பின் காரணமாக ஜப்பான் மற்றும் சீன மக்களின் குடியேற்றத்தை அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், இந்திய மக்களின் வரவு அவர்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதன் விளைவாக, 1908-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மக்கள் குடியேறுவதை கனடா அரசு நிறுத்தியது. இதனை பின்பற்றி அமெரிக்காவும் 1910-ல் இந்திய குடியேற்றத்துக்கு தடைவிதித்தது. ஏற்கெனவே குடியேறிய தெற்காசியர்களை வெளியேற்ற அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை விதிமுறைகளை கடுமையாக்கினர்.

இந்த விதிமுறைகளின் மூலம், அதிகாரிகள் விரும்பினால் எவரையும் தடுத்து நிறுத்த முடியும். மற்றொரு விதிமுறையின்படி, கனடா அதிகாரிகளுக்கு, 200 டாலருக்கும் குறைவான தொகையுடன் வரும் ஆசியர்களைத் திருப்பி அனுப்பும் அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆசியர்களை கனடாவிலிருந்து வெளியேற்ற மட்டுமே இயற்றப்பட்ட இந்த இரண்டு விதிமுறைகளும் கடுமையான முறையில் இரக்கமே இல்லாமல் பின்பற்றப்பட்டன.
கனடாவும் அமெரிக்காவும் தெற்காசிய குடியேற்றத்தை தடுத்து நிறுத்திய பிறகு, பஞ்சாபி மற்றும் பிற தெற்காசிய செயற்பாட்டாளர்கள் பலரும் கனடாவுக்கான கதவை மீண்டும் திறக்கும் முயற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தினர். இந்தியாவைப் போலவே கனடாவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், அமெரிக்காவை விட கனடாவைக் கையாள்வது எளிது என்று அவர்கள் நம்பினர்.
1913-ஆம் ஆண்டு 38 சீக்கியர்களை நாடு கடத்தும் கனடா அதிகாரிகளின் உத்தரவை நீதிமன்றம் நிராகரித்தது, பலருக்கும் பெரும் ஊக்கமாக அமைந்தது. அந்த சீக்கியர்கள் ஜப்பானிய கப்பலான ‘பனாமா மாரு’ மூலம் ஜப்பான் வழியாக கனடாவுக்குள் நுழைந்தவர்கள். அவர்கள் இந்தியாவிலிருந்து நேரடியாக கனடாவுக்கு வராததாலும், அவர்களிடம் போதுமான பணம் இல்லாததாலும் அவர்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவால் அவர்கள் கனடாவுக்குள் கால்பதித்தனர். அவர்களின் இந்த வெற்றியே, 1914-ஆம் ஆண்டு ‘கோமகதா மாரு’ கப்பலில் பயணித்து கனடாவுக்குள் வர பெரும் உத்வேகமாக அமைந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றத்தில் குட்டுப்பட்டதைத் தொடர்ந்து குடியேற்றம் தொடர்பான விதிமுறைகளை அவசரமாக திருத்தியது கனடா அரசு. இதன்படி நேரடி பயணம் மற்றும் 200 டாலர் விதிமுறைகள் 1914 ஜனவரியில், அதாவது ‘கோமகதா மாரு’ சம்பவத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அமலுக்கு வந்தன.

இந்த விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு ‘கோமகதா மாரு’ கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் முடிவை மாற்றியிருக்கலாம். ஆனால், இந்த முறையும் நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும் என்று அவர்கள் தீர்க்கமாக நம்பினர். அப்படி நடக்கவில்லை என்றாலும், அது இந்தியாவில் உள்ள போராட்டக்காரர்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று எண்ணினர். ஆனால் அவர்கள் போட்ட இந்த இரண்டு கணக்குமே தவறாக முடிந்தது.

‘கோமகதா மாரு’ கப்பலை வாடகைக்கு எடுத்து பயணிகளின் தலைமை பிரதிநிதியாக செயல்பட்டவர் குர்தித் சிங் சிர்ஹாலி என்ற பணக்கார சீக்கியர் ஆவார். பஞ்சாபில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது பரம்பரை வீட்டில் வசித்து வந்தாலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இறக்குமதியாளராகவும், ஒப்பந்ததாரராகவும் பெரும் பணம் ஈட்டினார் குர்தித் சிங். ‘பனாமா மாரு’ வழக்கில் சீக்கியர்களுக்கு கிடைத்த வெற்றி கொடுத்த நம்பிக்கையைத் தொடர்ந்து ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து கனடாவுக்கு இந்தியர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவரது வேட்கை தொடங்கியது.
குர்தித் சிங் தனது சொந்த வேலைக்காக ஹாங்காங் சென்றிருந்தபோது அங்கு ஏராளமான சீக்கியர்களை சந்தித்தார். அவர்கள் அனைவருக்கும் கனடா அல்லது அமெரிக்காவுக்கு செல்வதே நோக்கமாக இருந்தது. இவர்களை கனடா அழைத்துச் செல்வதற்காக சிங்கப்பூர், கொல்கத்தா மற்றும் ஹாங்காங்கில் உள்ள பலரிடமும் விசாரித்து, சில மாதங்கள் செலவழித்து தேடிய பிறகு ‘கோமகதா மாரு’ கப்பலை கண்டுபிடித்தார் குர்தித் சிங்.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கப்பலாக இருந்தாலும், அது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்தக் கப்பல் தற்காலிகமாக அப்போது ஹாங்காங்கில் இருந்தது. அது வட அட்லாண்டிக் குடியேற்ற வர்த்தகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்டீல் நீராவிக் கப்பல் ஆகும். 20 ஆண்டுகளாக ஜெர்மன் உரிமையாளரிடம் இருந்த அது, பின்னர் ஒரு சிறிய ஜப்பானிய நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அந்த நிறுவனத்திடமிருந்து அந்தக் கப்பலை குர்தித் சிங் வாடகைக்கு எடுத்தார்.
3000 டன் எடை கொண்ட ‘கோமகதா மாரு’ கப்பலில் மின்சார விளக்குகளும், தண்ணீர் வசதியும் இருந்தது. தொடர்ந்து ஐரோப்பிய குடியேற்ற சேவையில் ஈடுபட்டு வந்த அந்த கப்பலில் 533 அறைகளை குர்தித் சிங் ஏற்படுத்தியிருந்தார். மேலும், கப்பலின் முன்பகுதியில் சீக்கிய மதகுரு உதவியுடன் தினசரி பிரார்த்தனைகளில் ஈடுபடவும் அவர் திட்டமிட்டார். அந்த இடம் அரசியல் உரைகளுக்கும், கவிதை வாசிப்புகளுக்கும் கூட பயன்படுத்தப்பட்டது.
‘கோமகதா மாரு’வில் இருந்தவர்கள் அனைவருமே பஞ்சாபை சேர்ந்தவர்கள். அவர்களின் 337 பேர் சீக்கியர்கள், 27 பேர் முஸ்லிம்கள், இந்துக்கள் 12 பேர். முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மேற்கு பஞ்சாபின் ஷபுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது இந்தப் பகுதி பாகிஸ்தானில் இருக்கிறது. மற்ற பயணிகள் அனைவரும் மத்திய பஞ்சாபின் விவசாய கிராமங்களை சேர்ந்தவர்கள்.
கப்பலில் இருந்த கிட்டத்தட்ட அனைவருமே பஞ்சாபின் உயர்வர்க்க நிலவுடைமை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிரிட்டிஷ் இந்திய படையில் சேர்பவர்களில் பெரும்பாலானோர் இவர்களாகத்தான் இருந்தனர். பயணிகளில் பலரும் ஹாங்காங், ஷாங்காய், சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பிற பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த முகாம்களில் ராணுவ அதிகாரியாகவோ, போலீஸாகவே பணியாற்றியவர்கள்.

அவர்களின் பலரும் ஆங்கிலம் அரைகுறையாக பேசுபவர்களாகவோ அல்லது அறவே தெரியாதவர்களாகவோ இருந்தனர். இவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்பியதால் பொதுவாக திறனற்ற பணியாளர்களுக்கு கிடைக்கும் வெளிப்புற வேலைகளை, அதாவது இந்தியாவில் செய்யத் தயங்கும் வேலைகளை இவர்கள் கனடாவில் செய்ய தயாராக இருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் ‘கோமகதா மாரு’ கப்பலில் இருந்த மக்களின் மீது அனுதாபம் கொண்ட கனடியர்களும் இருக்கத்தான் செய்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ கட்டுண்டு கிடந்த அந்த மக்களுக்கு கனடா போன்ற ஒரு சுதந்திர நாட்டில் நுழைய உரிமை உண்டு என்று அவர்கள் நம்பினர்.
கப்பலில் குர்தித் சிங் சிர்ஹாலியால் நடத்தப்பட்ட விரிவுரைகள், புரட்சிகர இலக்கியங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் பயணிகள் தீவிர அரசியல் கல்வியைப் பெற்றனர். ஒரு குழுவாக கப்பலின் தலைமைக்கு கட்டுப்பட அவர்கள் முடிவு செய்திருந்தனர். கப்பல் முதலில் ஹாங்காங்கில் இருந்து புறப்படும்போது வருவதாக கூறியிருந்த பலரும் பின்னர் பின்வாங்கினர். இதன்படி 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி ‘கோமகதா மாரு’ கப்பல் 150 பயணிகளுடன் புறப்பட்டது.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள சீக்கியர்களுக்கு மத்தியில் தன்னுடைய தளபதிகள் இருவரை அனுப்பி வைத்தார் குர்தீத் சிங். பின்னர் கப்பல் ஷாங்காய் வழியாக ஜப்பானின் துறைமுகங்களை அடைந்தபோது அங்கு பலரும் இணைந்தனர். சிலர் நேரடியாக இந்தியாவிலிருந்து வந்தனர். இப்படியாக ஜப்பானில் இருந்து கப்பல் புறப்படும்போது அதில் மொத்தம் 376 பயணிகள் இருந்தனர்.
இந்தக் கப்பல் 1914 மே 21-ஆம் தேதி கனடாவின் கடல்பகுதிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் மே 23 அன்று வான்கோவர் துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக தெற்காசிய குடியேறிகளை கனடா நிராகரித்து வருவதையும் அவர்கள் அனைவரும் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டதையும் குர்தித் சிங்கும் அவரது தளபதிகளும் அறிந்திருந்தனர்.

இருந்தபோதிலும், குர்தித் சிங் மற்ற பயணிகளும் கனடா அதிகாரிகளின் சமரசமற்ற நடவடிக்கைகளுக்கு தயாராக இல்லை. ஒரு சில விதிவிலக்குகள் தவிர மற்ற யாரும் ஆரம்ப பரிசோதனைக்கு கூட கரைக்கு அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலானோர் கனடா கடற்பகுதியில் இருந்த காலம் முழுவதும் கப்பலுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை வெளியேற்றுவதற்கான கனடா அரசின் முயற்சிகள் ஒரு நீண்ட மோதலுக்கு வழிவகுத்தது. கப்பலில் இருந்து வெளிஉலகத்துக்கான தொலைத்தொடர்புகளை கட்டுப்படுத்துவது, நீதிமன்றத்துக்கு செல்வதற்கான அவர்களின் முயற்சிகளை தடுப்பது, கப்பலுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க மறுப்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை கனடா அரசு மேற்கொண்டது. கரையில் இருந்து தங்களின் சீக்கிய மற்றும் பிற தெற்காசிய நண்பர்களின் மூலம் பயணிகள் தங்களுக்கென ஒரு வழக்கறிஞரை நியமித்தனர்.
அவர்கள் அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தி, கப்பலுக்குள் உணவு மற்றும் தண்ணீர் அனுப்ப வழிவகை செய்தனர். ஒரு மாத காலத்துக்குப் பிறகு இருதரப்பும் பேசி இந்த விவகாரத்தை பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.
மிக விரைவாக நடந்து முடிந்த இந்த வழக்கின் தீர்ப்பு கனடா அரசுக்கு சாதகமாகவும், பயணிகளுக்கு எதிராகவும் வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அவரசமாக திருத்தப்பட்ட சட்டத்தில் பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கான எந்த விதிமுறையும் இல்லாததே என்பதே அந்தத் தீர்ப்புக்கு காரணம்.
நீதிமன்றத்தின் இந்த முடிவை குர்தீத் சிங்கும் பயணிகளும் கனடா உச்ச நீதிமன்றத்திலோ அல்லது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் நீதித்துறைக் குழுவிலோ மேல்முறையீடு செய்ய முயற்சி எதுவும் செய்யாமல் ஏற்றுக்கொண்டனர்.

நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர அவர்களிடம் பொருளாதாரமோ அல்லது விருப்பமோ இல்லை. அப்படியிருந்தும், அவர்களின் புறப்பாடு மேலும் பல வாரங்கள் தாமதமானது. அவநம்பிக்கை நிறைந்த விரக்தியான சூழலில், கரையில் இருந்த பயணிகளும் அவர்களது நண்பர்களும் கப்பலைத் திருப்பி அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை யார் செய்வது என அரசாங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருவழியாக கப்பல் ஹாங்காங் வரை செல்வதற்கான பொறுப்பை கனடா அரசு ஏற்றுக் கொண்டது. ஜூலை 23 அன்று 355 பயணிகளை சுமந்து கொண்டு ஏமாற்றத்துடன் கோமகதா மாரு ஆசியாவை நோக்கி புறப்பட்டது. ஜப்பானில் சில பயணிகள் இறங்கிக் கொள்ளவே, மீதமிருந்த 321 பயணிகளுடன் கப்பல் செப்.29 அன்று கல்கத்தாவின் பட்ஜ் பட்ஜ் துறைமுகத்தை வந்தடைந்தது.
அது முதலாம் உலகப் போர் தொடங்கியிருந்த காலகட்டம். வரும் வழியில் கப்பலில் இருந்த பயணிகள், வங்காள விரிகுடாவில் பிரிட்டிஷ் கப்பலை மூழ்கடித்த ஜெர்மனியின் எம்டன் கப்பலில் இருந்தவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களுக்கு மிக ஆபத்தான காலகட்டமாக இருந்தபோதிலும் ‘கோமகதா மாரு’ கப்பல் பயணிகளின் புரட்சிகர மனநிலை மேலும் தீவிரம் அடைந்திருந்தது.

முதலாம் உலகப் போர் தீவிரமடையத் தொடங்கியிருந்த இது போன்ற ஒரு சூழலில், இந்தியாவுக்குள் கோமகதா மாருவின் வருகை பிரிட்டிஷ் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. பட்ஜ் பட்ஜ் துறைமுகத்தை வந்தடைந்த சில மணி நேரங்களிலேயே கல்கத்தவில் பயணிகளை அனுமதிக்க விரும்பாத பிரிட்டிஷ் இந்திய போலீஸாருடன் நடந்த மோதலில் கப்பலில் இருந்த 20 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பட்ஜ் பட்ஜ் துறைமுகத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து, பயணிகளில் பெரும்பாலானோர் போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த தணிக்கை செய்யப்பட்ட பத்திரிகைகளின் வாயிலாகவும், மிதவாத இந்திய அரசியல்வாதிகளின் மனதிலும் ‘கோமகதா மாரு’ பயணிகள் ஆபத்தான புரட்சிக்காரர்களாக குறிப்பிடப்பட்டனர். உலகப் போர் முடிந்து இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியபோது, இந்த பயணிகளின் கதை மேலும் பிரபலமடையத் தொடங்கியது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு 1961-ம் ஆண்டின் பிற்பகுதி வரை, கனடாவின் ஆசிய-குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகளின் நேரடி விளைவாக, தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நாட்டில் வெறும் 6,774 தெற்காசியர்கள் மட்டுமே கணக்கிடப்பட்டனர். பத்து ஆண்டுகள் கழித்து, குடியேற்றம் திறக்கப்பட்ட பிறகு 67,925 பேர் இருந்தனர். மேலும் ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பானது. 1990களில், தெற்காசியர்கள், குறிப்பாக பஞ்சாபி சீக்கியர்கள் ஒரு தெளிவான அரசியல் இருப்பைக் கொண்டிருக்கும் அளவுக்கு கனடாவில் ஏராளமானவர்களாக இருந்தனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு கனடா அரசு ‘கோமகதா மாரு’ நடத்தப்பட்ட விதத்துக்காக பகிரங்க மன்னிப்பு கோரியது. ஆனால், இந்த மன்னிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் குறித்து அங்கிருந்த சீக்கியர்களில் பலர் மகிழ்ச்சியடையவில்லை. ஒட்டாவாவில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இந்த மன்னிப்பு கேட்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இதனையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கோமகதா மாரு சம்பவத்துக்கு முறையாக மன்னிப்பு கேட்டார்.
2021-ல், வான்கோவர் நகரமும் ‘கோமகதா மாரு’ சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டது. சிட்டி கவுன்சில் மே-23 தினத்தை அதிகாரபூர்வ நினைவு நாளாகவும் அறிவித்தது. நியூ வெஸ்ட்மின்ஸ்டர் நகரமும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் செப்டம்பரில் மன்னிப்புக் கேட்டது.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
