Nikki Haley : புதிய அரசில் நிக்கி ஹேலிக்கு பதவி மறுத்த ட்ரம்ப்… இந்திய வம்சாவளியின் பதில் என்ன?

அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்த 47-வது அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸை, குடியரசு கட்சி வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிகொண்டார். விரைவில், அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபராக இந்திய வம்சாவளியின் கணவர் ஜே.டி.வான்ஸும் பதவியேற்கவிருக்கின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப்

இதில், ட்ரம்ப் அதிபராக இருந்த காலத்தில், ஐ.நா சபைக்கான அவரின் தூதராகச் செயல்பட்ட இந்திய வம்சாவளி நிக்கி ஹேலிக்கும், சி.ஐ.ஏ இயக்குநராகவும், வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றிய மைக் பாம்பியோவுக்கும், ட்ரம்ப்பின் புதிய அரசாங்கத்தில் பதவி அளிக்கப்படும் என்று பேச்சுகள் எழுந்தது.

இப்படியான வேளையில்தான், “முன்னாள் தூதர் நிக்கி ஹேலி அல்லது முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோவை, அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தில் சேர்க்க மாட்டேன். முன்பு அவர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. மேலும், நமது நாட்டுக்கு அவர்கள் செய்த சேவைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று நேற்று முன்தினம் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார், ட்ரம்ப்.

நிக்கி ஹேலி

இந்த நிலையில், ட்ரம்ப்பின் இத்தகைய பதிவுக்கு எக்ஸ் தளத்தில் நிக்கி ஹேலி பதிலளித்திருக்கிறார். அந்தப் பதிவில், “ஐ.நா சபையில் அமெரிக்காவைப் பாதுகாக்கும் அதிபர் ட்ரம்ப்புடன் பணியாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன். அடுத்த நான்காண்டுகளில் வலுவான, பாதுகாப்பான அமெரிக்காவை நோக்கி நம்மைக் கொண்டுசெல்வதில் அவருக்கும், பணியாற்றும் அனைவருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று நிக்கி ஹேலி குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, குடியரசு கட்சியில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இருந்த நிக்கி ஹேலி, தேர்தலுக்காக ட்ரம்ப்பை விமர்சித்து வந்தார். இறுதியில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு கடைசி நேரத்தில் அவருக்கு நிக்கி ஹேலி தனது ஆதரவைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.