ஆர்.பி உதயகுமாருடன் வந்த அதிமுகவினர் மீது தாக்குதல்; அமமுகவினர் மீது போலீஸில் புகார்..!

ஆர்.பி.உதயகுமாருடன் வந்தவர்கள் மீது தாக்குதல்…

“அதிமுகவினர் வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே நேற்று இரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டுள்ளார்.

பின்னர், ஆர்.பி.உதயகுமார் தனது கட்சிக்காரர்களுடன் திருமங்கலம் நோக்கி வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதலில் காயமடைந்த அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆர்.பி.உதயகுமார்

அமமுகவினர் மீது ஆர்.பி.உதயகுமார் புகார்..

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் ஆர்.பி.உதயகுமார் அளித்த புகார் மனுவில்,

“எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள், போராட்டங்களை நடத்தி மக்கள் பணி செய்து வருகிறோம். இதனால் அதிமுகவிற்கும், எடப்பாடியாருக்கும் தென் பகுதியில் செல்வாக்கும், எழுச்சியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தர அதிமுக அம்மா பேரவை சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றபோது தென்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான இளைஞர்கள் இளம் பெண்கள் பங்கேற்றனர்.

கள்ளர் சீரமைப்புதுறை பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைக்க முயன்றதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதபோராட்டத்தை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளோம்.

தொடர்ந்து தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். இதனால் மக்கள் மத்தியில் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமலும், மேற்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வரும் என் மீது தனிப்பட்ட முறையில் காழ்புணர்ச்சியோடு நேற்று (10 -11-2024) மாலை 7 மணி அளவில் வானங்களில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த அமமுகவை சேர்ந்த அடையாளம் தெரிந்த, ஊர் பெயர் தெரியாத 10-க்கும் மேற்பட்ட நபர்கள் எங்கள் நிர்வாகிகளை வழிமறித்து அசிங்கமாக பேசினார்கள்.

எஸ்.பி-யிடம் புகார்

நான் கடந்து சென்று விட்ட பிறகு  எனக்கு பின்னால் வந்த வாகனத்தை வழிமறித்து இரும்பு கம்பி, கட்டையால் வாகனத்தில் இருந்தவரை தாக்கி பலத்த ரத்தக்காயம் ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு  அசிங்கமாக பேசி, கொலை வெறி தாக்குதல் நடத்தி, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமுமுக-வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தக்க பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்திருந்தார்.

`அதிமுகவினர் மீது கொலை மிரட்டல்கள்’ – ஆர்.பி.உதயகுமார்

பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “அதிமுகவுக்கு வந்த பல்வேறு சோதனைகளை தாண்டி எடப்பாடி பழனிசாமி பாதுகாத்து ஜெயலலிதாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் கட்டளையை ஆண்டவன் கட்டளை என நினைத்து அதிமுகவினர் பணியாற்றி வருகிறார்கள்.

மதுரையில் அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு சதவிகிதம் கூட அன்றைய தினம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற டி.டி.வி.தினகரனின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சமீப காலமாக அதிமுகவினர் மீது தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் அதிமுகவினர் மீது ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்தி வருகிறார்கள், ஒரு உதயகுமார் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு லட்சம் உதயகுமார்கள் உருவாகி அதிமுகவை வழி நடத்துவார்கள்.

எஸ்.பி-யிடம் புகார் அளிக்கும் ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவினரின் நாக்கை வெட்டுவோம் என சொன்னவர்கள் இன்று நாட்டிலேயே இல்லாமல் போய் உள்ளார்கள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நான் உள்பட அதிமுக நிர்வாகிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும், உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால் எங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் தான் பொறுப்பு. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அமமுக, ஒ.பி.எஸ் தரப்பிலிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல், உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது, டி.டி.வி.தினகரன் தூண்டுதலால் ஆயுதங்களுடன் வந்த அமமுகவினர் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம், அதிமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். வன்முறையை நாங்களும் கையில் எடுத்து எதிர்வினை செய்யமாட்டோம் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.

இந்த சம்பவத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb