`மற்ற மாநில கட்சிகள், திமுக திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்குகின்றன!’ – சொல்கிறார் செந்தில் பாலாஜி

கரூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க சார்பில் திராவிட மாடல் தி.மு.க அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் தலைமையில் தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் பொள்ளாச்சி சித்திக், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி,

“கரூர் மாவட்டத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ரூ.3000 கோடி அளவுக்கு அரசு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கேட்டவுடன் அரசு திட்டங்களை நிறைவேற்றி தருகிறார்கள். அதிலும் குறிப்பாக, வழங்கிய திட்டங்களை விரைவாக செயல்படுத்தக்கூடிய அந்த பணிகளையும் முன்னெடுத்து செல்கிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 – க்கு 40 என்ற வெற்றியை பெற்றுத்தந்த தமிழக முதலமைச்சர், வரக்கூடிய 2026 – ம் வருட சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு திட்டங்களை தீட்டி, அதற்கான பணிகளை துவக்கியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க நிர்வாகிகள் தமிழக ஆட்சி வழங்கி வரும் திராவிட மாடல் அரசுக்கு வலு சேர்க்கும் வகையில், அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

செந்தில் பாலாஜி

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற வாக்களித்த மக்கள், எதிர்வரும் 2026 – ம் வருட சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் தி.மு.க தலைவர் நிறுத்துகின்ற வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழகம் முன்னுதாரணமாக அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருவதால், எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அங்குள்ள அரசியல் கட்சிகள் தி.மு.க அரசின் அத்தகைய திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து வாக்கு சேகரிக்கின்றன. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் கோடிக்கணக்கான மகளிர் பயன் பெற்று வருகின்றனர். வயதான முதியவர்களை காக்க மக்களை தேடி மருத்துவத் திட்டம், நம்மை காக்கும் 48 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் என வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழக முதல்வர் சிந்தித்து சிந்தித்து ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் நலனுக்காக செயலாற்றி வருகிறார்” என்று பேசினார்.