அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான நாட்டின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் அதிபர் வேட்பாளாராக களம் இறங்கியிருக்கிறார். அதனால் அவருக்கான ஆதரவு பெருகிக்கொண்டே வந்தது. அதேசமயம், ட்ரம்பும் அதிபராவதற்கான வாய்ப்பு சமமாக இருக்கும் சூழலே நிலவுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில், அமெரிக்காவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 538 இடங்களில் 270 இடங்களில் வெற்றிபெறுபவர் அதிபராக பதவியேற்பார்.
இந்த நிலையில், வாய்ப்புகள் மிகக் குறைவு என்றாலும், ஒருவேளை இந்த தேர்தலில் இருவரும் சமமாக, அதாவது 269 – 269 இடங்களில் வென்றால், அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க சட்ட வல்லுநர்கள், “ஒருவேளை இந்தத் தேர்தலில் இருவரும் சரிக்கு சமமான இடங்களை வென்றால், அந்தத் தேர்தல் “contingent election” னாக மாறும். அதைத் தொடர்ந்து, அமெரிக்க சட்டத் திருத்தம்12-ன் படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபை (US Congress – அமெரிக்காவின் கூட்டாட்சி அரசின் சட்டமன்றம்.
இது இருசபை , ஐக்கிய மாகாணங்களின் பிரதிநிதிகள் சபை (கீழ் சபை), அமெரிக்க மாகாணங்களின் செனட் (மேல் சபை) என இயக்குகிறது.)யிடம் அடுத்த அதிபரையும், துணை அதிபரையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வழங்கப்படும். ஒரு வேட்பாளர் பெரும்பான்மையைப் பெறும் வரை, சபையில் வாக்களிப்பு தொடரும். அதுவரை அவையின் சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியில் இருப்பார். பதவியேற்பு நாள்வரை எந்த வேட்பாளரும் வெற்றிப்பெறவில்லை என்றால், மேல் சபையான செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் அதிபர், அதிபராக பதவியேற்பார்.” என்கிறார்கள்.
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர், துணை அதிபர் ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவது குறிப்பிடதக்கது.