Bharat Tex 2025: “உள்நாட்டிலிருந்து 2 லட்சம் பேர் பங்கேற்பர்” – கரூர் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம்

புதுடெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள ‘பாரத் டெக்ஸ் – 2025’ என்ற பெயரிலான ஜவுளி கண்காட்சிக்கான ஏற்றுமதியாளர்கள் விழிப்புணர்வு கூட்டமானது கரூர், ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நடைபெற்றது.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைத்தறி ஏற்றுமதி முன்னேற்றச் சபையின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர், விசைத்தறி ஏற்றுமதி முன்னேற்றச் சபையின் துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கரூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்களுக்கு ஜவுளி கண்காட்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாரத் டெக்ஸ் – 2025

அதனைத் தொடர்ந்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஜவுளித்துறை சார்ந்த அனைத்து துறைகளும் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற பாரத் டெக்ஸ் – 2023 கண்காட்சி என்பது பிரதமரின் கனவு ஆகும். தற்போது நடைபெறக் கூடிய இரண்டாவது ஜவுளி கண்காட்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் இங்கே நடந்தது. உலக அளவில் ஜவுளி துறைக்கான மிகப் பெரிய கண்காட்சியாக இது இருக்கும். கடந்தாண்டு நடைபெற்ற கண்காட்சியில் உள்நாட்டில் சுமார் 1 லட்சம் பேரும், வெளிநாட்டிலிருந்து 3000 பேரும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு உள்நாட்டிலிருந்து இரண்டு லட்சம் பேரும், வெளிநாட்டிலிருந்து சுமார் 10,000 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் கண்காட்சியைப் பார்வையிட வரக் கூடிய வெளிநாட்டவர்களுக்கு, தங்கும் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவைச் செய்து தரப்படவுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் கண்காட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு கரூரிலிருந்து 40 ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று உள்நாட்டில் பல்வேறு ஆர்டர்களை பெற்றனர். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த ஜவுளித்துறை சார்ந்த நபர்களின் அறிமுகமும், தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது” என்றார்.