DMK: தயாரான உளவுத்துறை ரிப்போர்ட்; கோவை திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை; ஆக்ஷனுக்கு தயாராகும் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நாளை (நவம்பர் 5) கோவை வரவுள்ளார். நாளை காலை சென்னையிலிருந்து புறப்படும் அவர் 11 மணியளவில் கோவை வரவுள்ளார். முதலில் புதிதாகக் கட்டப்பட்ட எல்காட் ஐடி பூங்கா வளாகத்தைத் திறந்து வைக்க உள்ளார்.

பிறகு அரசு விருந்தினர் மாளிகையில் அரசுத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். மாலை தங்கநகை உற்பத்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். நாளை இரவு அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

கோவை

நாளை மறுநாள் காலை சிறைச்சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகக் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நாளை மறுநாள் மதியம் அவர் சென்னை புறப்படுகிறார்.

அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் கட்சி தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மாலை போத்தனூரில் உள்ள பி.வி.ஜி  மண்டபத்தில் ஒருங்கிணைந்த தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆனால், தற்போதுவரை அதில் யார், யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் தி.மு.க நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. அவ்வளவு ரகசியமாகத் திட்டமிடுவதால் இந்த ஆலோசனைக் கூட்டம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

செம்மொழி

இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், “2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணியைத் தொடங்கிவிட்டோம். முதல்முறையாகத் தலைவர் கோவையிலிருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையைத் தொடங்குகிறார். முதல் கூட்டம் என்பதால் எப்படி நடக்கும் என்பது தெரியவில்லை. அதில் சுமார் 200 நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளைத் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கவனித்து வருகிறார். இப்போதுவரை அந்த ஆலோசனைக் கூட்டத்தில் யார், யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.

கடைசி நிமிடத்தில்தான் நிர்வாகிகளுக்கு முறைப்படியான அழைப்பு வரும் எனச் சொல்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளராக இருந்தாலும், வேறு சில ரிப்போர்ட்களின் அடிப்படையில் தலைவர் ஆலோசனை நடத்தப்  போகிறார்.

திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள மண்டபம்

கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்குத் தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே இங்கு தி.மு.க-வுக்குச் சாதகமான முடிவுகள் வரவில்லை. இந்நிலையில் உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் கட்சி நடவடிக்கைகள் குறித்து ரிப்போர்ட்டை தயார் செய்துள்ளார்.

மேலும், சபரீசனின் ‘பென்’ டீமும் கோவை தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்து ரிப்போர்ட் எடுத்துள்ளது. அதனடிப்படையில் தலைவர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாகக் கருதப்படுகிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs