`இந்தியாவால் சைபர் அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு!’ – Cyber Threat பட்டியலில் இந்தியாவைச் சேர்த்த கனடா

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அப்போது இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையில், கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன், “கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட அமித் ஷா திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி
இந்தியா Vs கனடா

இந்திய அரசு இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த நிலையில், கனடாவில் சைபர் அச்சுறுத்தல் தொடர்பாக அந்த நாட்டின் National Cyber Threat Assessment 2025-2026 (NCTA 2025-2026) என்ற அறிக்கை ஒன்றை, சைபர் பாதுகாப்புக்கான கனேடிய மையம் அக்டோபர் 30-ம் தேதி வெளியிட்டது. அதில், சீனா, ரஷ்யா, இரான், வட கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும், ‘2025-26 ஆண்டில், சைபர் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில், “இந்திய அரசு, உள்நாட்டு இணைய திறன்களுடன், நவீனமயமாக்கப்பட்ட சைபர் திட்டத்தை உருவாக்க விரும்புகிறது. உளவு பார்த்தல், பயங்கரவாத எதிர்ப்பு, உலகளாவிய அந்தஸ்த்து நிலையை மேம்படுத்துதல், அரசின் திட்டங்கள், அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்களுக்காக, இந்தியா தனது இணையத் திட்டத்தைப் அச்சுறுத்தலாகப் பயன்படுத்தக்கூடும். இந்திய அரசின் இணைய அச்சுறுத்தலின் ஒரு பகுதியாக, நடிகர்கள் உளவு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம். கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தற்போதைய சிக்கல், கனடாவிற்கு எதிராக இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என மதிப்பிடுகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.