“கலைஞர் மீதான பற்றால் என் நினைவில் நின்ற ஒரு தீபாவளி…” – சுவாரஸ்யம் பகிரும் நாஞ்சில் சம்பத்

பேச்சுதான் திராவிடக் கட்சிகளின் மூலதனம். தங்களின் சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு செல்ல, ஊர் ஊராக மேடையமைத்து, அன்றைய அநீதிகளுக்கு எதிராக அனல் பறக்கப் பேசினர் திராவிடக் கட்சியினர். அவர்கள் ஆட்சியில் காலூன்றவும், தொடர்ந்து தங்களை ஆட்சி பீடத்தில் தக்க வைத்துக்கொள்ளவும் மிக முக்கிய காரணமாக இருந்தது திராவிட இயக்க பேச்சாளர்களின் நாவன்மையே.

பேரறிஞர் அண்ணாவில் தொடங்கி, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி. சம்பத், மதியழகன், அன்பழகன், வைகோ, நாஞ்சில் சம்பத் எனத் தெரு மேடைகளைச் சித்தாந்த பீடங்களாக்கிய பேச்சாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைத் தக்கவைத்தவர் நாஞ்சில் சம்பத். அவரிடம் ‘தீபாவளிக் கொண்டாட்டம் குறித்தெல்லாம் பேச முடியுமா’ என யோசித்துக்கொண்டே தொடர்புகொண்டோம்.

நாஞ்சில் சம்பத்

மறக்க முடியாத தீபாவளி

வழக்கம்போல “சொல்லுங்க…” என்ற பாஸிடிவ்வாக பேசத் தொடங்கினார் நாஞ்சில் சம்பத். அவரிடம், “உங்கள் வாழ்வின் மறக்க முடியாத தீபாவளி எது? ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்து நாங்கள் அமைதியானோம். கொஞ்சம் தன் குரலைச் செருமிக்கொண்டு, “அதுவா… ஒரு தீபாவளி இருக்கிறதே…” எனத் தன் வாழ்வின் சிறு பகுதியைப் பகிர்ந்துகொள்ள தொடங்கினார். அவரின் பகிர்வு இதோ…

“பொதுவாகத் தீபாவளி கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், தீபாவளி என் வீட்டுக்குள் வந்து புகுந்து விடுகிறது. என் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி என்றால் நான் பள்ளி இறுதி ஆண்டில் கொண்டாடிய ஒரு தீபாவளியைச் சொல்வேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சொற்பொழிவாளனாக வேண்டும் என்ற கனவோடு, கூவத் துடிக்கும் குயில் குஞ்சாகத் தீவிரமாகச் செயல்பட்ட நாள்கள் அவை. அந்த சமயத்தில் வந்த ஒரு தீபாவளிதான் அது. தீபாவளியன்று காலை உணவுக்கு எங்கள் வீட்டில் அசைவ உணவு சமைப்பது வழக்கம். அன்று வீட்டில் நானும் என் அண்ணன் கருணாநிதியும் இருந்தோம். ஆம், என் அண்ணன் பெயரும் கருணாநிதிதான். வழக்கம் போல அன்றும், என் அம்மா எங்களிடம் இறைச்சி வாங்கிவரச் சொல்கிறார். நான் கட்டிலில் போர்த்திக்கொண்டு படுத்து கிடக்கிறேன். என் அண்ணன் என் அம்மாவிடம், ‘சம்பத்தைப் போகச் சொல்லு’ என்றான்.

நாஞ்சில் சம்பத்

கருணாநிதி சொன்னால்தான்…

அவன் சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எதுவும் தெரியாதது போல அமைதியாகப் படுத்துக்கிடந்தேன். அம்மா அண்ணனிடம் கொஞ்சம் அழுத்திச் சொன்னதும் என் அண்ணன், “அவனைப் போகச் சொல்லு… எனக்கு வேலை இருக்கிறது. ஏன்… அவன் கருணாநிதி சொன்னால்தான் போவானா?” எனக் கலைஞரைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டான். ‘தலைவரைப் பற்றி இப்படிப் பேசிவிட்டானே’ என எனக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே எழுந்து நான் சட்டை அணிந்துகொண்டு, ‘இறைச்சி வாங்கி வருகிறேன்’ எனக் கூறி, காசை வாங்கிக்கொண்டு, வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டேன். எங்கே செல்வது எனத் தெரியாமல் பழநிக்கே சென்றுவிட்டேன்.

இறைச்சி வாங்கச் சென்ற நான் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் இருந்தவர்கள் பதறிவிட்டார்கள். எங்கெல்லாமோ தேடியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில், “சம்பத்தைக் காணவில்லை” என என் வயது, அன்று நான் அணிந்திருந்த சட்டை நிறம், என் அடையாளம் போன்றவற்றைக் குறிப்பிட்டு செய்தித்தாள்களிலெல்லாம் விளம்பரம் கொடுத்தார்கள். எனக்கு அதெல்லாம் அப்போது தெரியாது. நான் பழநியிலேயே இருந்தேன். அதே காலகட்டத்தில் என் அத்தை மகள் சாரதா அண்ணி, திருப்புவனத்திலிருந்தார். அதனால் அங்குச் சென்றுவிடலாம் எனக் கருதி திருப்புவனம் சென்றுவிட்டேன்.

நாஞ்சில் சம்பத்

என் வாழ்வின் ஒரு தீபாவளி…

“தீபாவளி அதுவுமா இப்படி பண்ணிட்டியே…” என என் அண்ணி என்னைக் கண்டித்து, என் குடும்பத்தாருக்கு நான் அங்குச் சென்றிருப்பது தொடர்பாகத் தகவல் கொடுத்தார். மேலும், எனக்கு பேண்ட் சட்டையும், என் அம்மாவுக்கு ஒரு பட்டுச் சேலையும், அப்பாவுக்கு வேட்டி சட்டையும் வாங்கி கொடுத்து, மதுரையில் பஸ் ஏற்றிவிட்டார்கள். தீபாவளி அன்று வீட்டை விட்டு வெளியே வந்த நான், ஒரு வாரத்துக்குப் பிறகுதான் திரும்ப வீட்டுக்குச் சென்றேன். அதன்பிறகு என் அண்ணன் இறைச்சி வாங்கி வர அதன்பிறகே எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடினோம். கலைஞர் மீது இருந்த பற்றால் என் வாழ்வின் ஒரு தீபாவளி நினைவு இப்படிப் பதிவாகியிருக்கிறது” எனப் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb